ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 5, 2018

“திடுக்...!” என்று பயந்து போய் அதிர்ச்சியான உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்தால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்


ரோட்டிலே செல்கின்றோம். திடீரென்று ஒரு பஸ் வேகமாக வருகின்றது என்றால் நமது கண்ணின் கருவிழி அந்த பஸ்ஸைக் கூர்மையாகப் பார்க்கின்றது. அதை நம் உடலுக்குள் இருக்கும் எலும்புக்குள் ஊனாகப் பதிவாக்கிவிடுகின்றது.

அது இயந்திரம் தான்.

இருப்பினும் அதில் இருந்து வெளிப்படும் இந்த அலையின் வேகத் தொடரை நம் கண்ணுடன் இணைந்த காந்தப்புலன் அதைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

உயிரின் இயக்க ஓட்டத்திற்குள் ஈர்க்கும் காந்தப்புலனான லெட்சுமி அதை ஈர்த்துச் சுவாசிக்கப்படும் பொழுது உயிரிலே பட்டவுடன் பஸ் வேகமாக வருகின்றது என்று உணர்கின்றோம்.

உணர்ந்தாலும் அது வரும் வேகத்தில் நம் மீது மோதிவிடுமே...! என்ற பய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

1.கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் தான் குருக்ஷேத்திரப் போர்

நம்மைக் காக்க நமது கண்ணின் காந்தப் புலனான சத்தியபாமா “பஸ் வேகமாக வருகிறது...!” என்று உண்மையைத் தனதாகத் தனக்குள் நின்று எடுத்துக் காட்டுகின்றது.

உண்மையை உணர்த்துவதைச் சத்தியபாமா என்று பெயரை வைத்தாலும் இரண்டும் சேர்த்து கண்களைக் கண்ணன் என்று பெயர் வைக்கின்றார்கள் ஞானிகள்.

கண்ணின் கரு விழி படத்தைப் பதிவாக்குவதும் மற்றொன்று அதைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

நமது உயிருக்குள் இயக்கும் காந்தப்புலன் அதைக் கவரப்படும் போது அதைக் கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் தான்... “குருக்ஷேத்திரப்போர்...!” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள். அதாவது
1.நம் உடலிலுள்ள குணங்கள் அனைத்திற்கும் குருவாக இருப்பது நம் உயிரே
2.குருவாக இருக்கும் அந்த உயிரின் க்ஷேத்திரத்தில்
3.கண்கள் கவர்ந்து உயிருடன் இணைக்கப்படும் போது
4.அந்த உணர்வு எதுவோ அந்த நாதத்தை (சப்தத்தை) நமக்குள் ஊட்டுகின்றது.

 பஸ்ஸினுடைய வேகத் தொடரைக் காட்டும் போது அது உயிரணு அல்ல. இயந்திரத்தால் ஓடக் கூடியது. அதனின் வேகத் தொடரை நாம் காணும் போது நம் மீது மோதிவிட்டால் நம்முடைய நிலை என்னாகும்...? என்று சிந்திக்க வைக்கின்றது “சத்தியபாமா...”

அப்போது அதை நுகர்ந்து கொண்டபின் பயத்தின் உணர்ச்சிகள் அதிகமாகக் கூடுகின்றது. சுவாசித்த பின் வெகு வேகமாக அந்த பஸ் வரும் பாதையை விட்டு நம்மை நகர்ந்து செல்ல வைக்கின்றது. நகர்ந்து சென்று தன்னைப் பாதுகாக்கின்றது.

உயிருக்குள் நாம் நுகரும் உணர்வுகளுக்கும் தன்னைக் காக்க வேண்டும் என்ற உணர்வுகளுக்கும் அந்தப் போர் நடக்கின்றது. அது தான் “கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் தான் குருக்ஷேத்திரப்போர்...” என்று சொல்வது.

நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை (நம்மைக்) காக்க வேண்டும் என்ற உணர்வினை உண்மையைச் சொல்லுகின்றது கண்ணின் காந்தப் புலனான சத்தியபாமா.

அதாவது தன்னைப் பாதுகாக்கும் உணர்வின் போராக நடந்து இந்த உடலை ஒதுக்கித் தள்ளி விபத்திலிருந்து காக்கப்படுகின்றது என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத் தான் இத்தகைய காவியங்களைப் படைத்தார்கள் ஞானிகள்.

2.காக்கும் சக்தி சத்தியபாமா - வளர்க்கும் சக்தி இலட்சுமி

நாம் பார்த்துணர்ந்த அதனுடைய வேக அலைகள் நமக்குள் பயத்தை உண்டாக்குகின்றது. இயக்க ஓட்டம் அதிகமாகின்றது.

நம்மைக் காக்கக் கண்கள் அந்த உண்மையைச் சத்தியபாமா சொன்னாலும் நமக்குள் பய உணர்ச்சிகளை ஊட்டும் இந்த உணர்வுகளை நமக்குள் உருபெறச் செய்து விடுகிறது நமது உயிர்.

உயிரின் இயக்கம் ஈசனாக இருப்பினும் இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. அந்த இயக்கத்திற்குள் ஈர்க்கும் சக்தி காந்தம் லெட்சுமி.

1.கண் கவர்ந்த உணர்வை நம் ஆன்மாவாக மாற்றும் போது
2.இயக்கத் தொடர் வரிசையில்
3.நமது காந்தப்புலனான லெட்சுமி உயிருடன் இணைக்கின்றது.

கண்ணின் காந்தப்புலனாக ஈர்க்கும் அந்த உணர்வுக்குப் பெயர் “சத்தியபாமா...” காக்கும் நிலை. நம் உயிரின் இயக்கத்திற்குள் ஈர்த்து அந்த உணர்வுகளை உணர்த்தச் செய்வது “லெட்சுமி” வளர்க்கும் நிலை,

காக்கும் நிலைக்கும் வளர்க்கும் நிலைக்கும் வித்தியாசம் என்றால் இதுவும் காந்தப்புலன் தான். உயிரில் ஈர்க்கக்கூடிய நிலையும் காந்தப்புலன்தான்.

காந்தப்புலன் என்றால் அறிவு. அந்தப் புலனறிவை. நமக்குள் காட்டும் போது காரணப் பெயராக வைத்து சத்தியபாமா....
1.அந்தப் பஸ்ஸின் வேகத் தொடரை நமது ஆன்மாவாக மாற்றிக் காட்டுகின்றது
2.ஆன்மாவில் அமைந்ததை உயிரின் காந்தப்புலன் லெட்சுமி கவர்ந்து
3.தன் இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்துடன் இணைத்து அந்தப் பய அலைகளை உருவாக்குகின்றது
4.பயமாகும் போது நம்முடைய உடலில் “இயக்க ஓட்டம்” அதிகம்
5.பய உணர்ச்சிகளை அது உண்டாக்கப்படும் போது வேகமாக நம்மை நகர்த்திச் செல்லுகின்றது.

வேகமாக நகர்த்திச் செல்லும் உணர்வின் சக்தியான இந்த லெட்சுமிக்கும் விஷ்ணுவிற்கும் இணைந்த உணர்வின் தன்மை கருவாகி அது உருபெறுகின்றது... சிருஷ்டியாகின்றது... “பிரம்மா...” விஷ்ணுவின் மகன் பிரம்மா.

அந்தப் பய உணர்ச்சிகள் உருவாகி நம் உடலுடன் ஓ...ம் நமச்சிவாய... நமக்குள் சிவமாக இணைந்து விடுகின்றது. உணர்வின் சக்தி சிவமாக அது உடலாக மாறிவிடுகின்றது.

இதைப் போன்று இந்த நினைவுகள் வரும் போதெல்லாம் பய உணர்ச்சிகளைத் தூண்டும். வேகமாக நம்மைக் காக்கச் செய்யும்.

அவ்வாறு இருப்பினும் திடீரென ஒரு பாத்திரம் தவறி விழுந்தால் ஏற்படும் ஒலி காதிலே கேட்டவுடன் என்ன நடக்கின்றது...? “அதிர்ச்சியில் என்ன ஆகின்றது...? என்று நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றது.

கண் பார்த்து இந்த உணர்வின் சக்தியை நமக்குள் பதிவு செய்தாலும் ஒரு பாத்திரமோ அல்லது எதிர்பாராத அதிர்வுகள் செவிகளிலே பட்டபின் இந்த உடலையே திரும்பச் செய்து “என்ன...?” என்று அதை உற்றுப் பார்க்கச் செய்கின்றது.

கண் பார்க்காமல் உள் புகும் இந்த நிலை ஆனாலும் செவிகளில் அதிர்வுகளைக் காட்டி அந்த உணர்வின் தன்மை கண்ணை இயக்கும் போது திரும்பிப் பார்க்கின்றோம்.
1.முதலில் அந்த அச்ச உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் தான்
2.இந்த அதிர்வின் தன்மையைத் திரும்பி பார்க்க வைக்கும்.
3.இந்த உணர்வின் வேகம் நம்மைக் காக்கக் கூடியதாக இருப்பினும்
4.பயத்தின் துடிப்பின் நிலைகள் நம் உடலுக்குள் அதிகமாகச் சேர்ந்து விடுகின்றது.
5.பஸ்ஸிலிருந்து காக்க எண்ணினோம்....
6.உயிரோ அதை நமக்குள் பிரம்மமாகச் சிருஷ்டி ஆக்கிவிடுகின்றது.

உணர்வின் சத்தாக நமக்குள் விளைந்து நம்மைக் காக்கும் நிலையாக பிரம்மனாக இருந்து விடுகின்றது. அந்த உடலுக்குள் சிவமாக இருந்து சிவத்திற்குள் சக்தியாக இயங்கத் தொடங்கி விடுகின்றது.

3."குரு பிரம்மா...! குரு விஷ்ணு...! குரு சாட்சாத் மகேஸ்வரா...!"

இதைத்தான் "குரு பிரம்மா...! குரு விஷ்ணு...! குரு சாட்சாத் மகேஸ்வரா...!" என்று ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

குரு பிரம்மமும் குரு விஷ்ணுவும் குரு சாட்சாத் மகேஸ்வரா என்கின்ற போது
1.சர்வத்தையும் உருவாக்குவது உயிரே
2.குரு பிரம்மம் - நீ எனக்குள் குருவாக இருந்து அதைச் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கின்றாய். அனைத்திற்கும் நீயே குருவாகின்றாய்.
3.குரு விஷ்ணு – (உயிர்) எனக்குள் நீ இருந்து அது சுழற்சியின் தன்மைகள் இணைக்கின்றாய்
4.குரு சாட்சாத் மகேஸ்வரா - எனக்குள் இருக்கும் அனைத்திற்கும் மகேஸ்வரனாக இருந்து உன்னால் எல்லாம் இயங்குகின்றது என்ற நிலையைத்
5.தன்னுள் தன்னில் தன்னை அறிவதற்குச் சாஸ்திரங்களில் காட்டி இருக்கின்றார்கள்.

இருந்தாலும் “ஏதோ போனால் போகட்டும்...!” என்று நினைத்துக் கொள்கின்றமே தவிர நம் உயிரை எப்படி வணங்க வேண்டும்...? நாம் எதனை எண்ண வேண்டும் என்று...? அந்த உண்மைப் பொருளை நாம் அறிந்து கொள்ளவில்லை.

ஆகவே பஸ்ஸின் சத்தம் அதிகமாக வருகிறது என்றால் “பஸ் வருகின்றதா...!” என்று திரும்பிப் பார்த்து நம்மை விலகிச் செல்லத் தோன்றுகின்றது.

செவிப்புலன் அறிவில் பட்ட பின் நம் கண் கொண்டு தான் பார்க்கின்றோம். ஆனாலும் அந்தப் பய உணர்வு இல்லை என்றால் “நம்மைக் காக்க முடியாது...!”

ஆனால் பய உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதனின் விளைவுகள் என்ன ஆகின்றது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

4.நம் வியாபாரமே கெடுகின்றது

ஒரு தொழில் செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். இதிலே நஷ்டமாகி விட்டால் என்ன செய்வது...! என்று இந்த நினைவுகளை இயக்கப்படும் போது உணர்வுகள் அதுவும் பிரம்மமாகி விடுகின்றது.

அந்த உணர்வின் தன்மை வரப்படும் போது பய அலைகள் நமக்குள் தோன்றி இந்த உயிரில் இணைத்து விடுகின்றது. உடலுக்குள் அணுவாகிவிடுகின்றது.

அப்படி உருவான அணுக்களின் தன்மையால் எந்தத் தொழில் செய்தாலும் பலன் இல்லாத நிலைகள் கொண்டு
1.சந்தேகிக்கும் உணர்வு கொண்டே இயக்கி
2.நம் தொழிலையே முடமாக்கச் செய்து விடுகின்றது.

பின் அந்தச் சிரமமான நிலைகள் கொண்டு அந்த சரக்கு நல்லதாக இருப்பினும் “நாளை வியாபாரம் பொருள்கள் விற்கவில்லை என்றால் என்ன செய்வது...?” என்று தன்னைத் தாழ்த்தும்.

அப்படித் தாழ்த்திய உணர்வுகள் நமக்குள் பட்டாலும் அடுத்தவர் இதை வாங்கி அதிக இலாபத்திற்கு விற்கப்படும் போது “அடடா அன்றைக்கு நாம் விட்டு விட்டோமே...!” என்ற வேதனை தான் வருகின்றது.

என்னுடைய நேரம் பாருங்கள்...! “வியாபாரத்தையே விட்டுவிட்டேன்......!” தன்னை அறியாமலே வேதனையும் சோர்வும் கலந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் வளர்கின்றது.

இதனின் வரிசை அடிப்படையில்  எதை எண்ணுகின்றமோ அவை அனைத்தும் உயிர் அந்த ஜீவ அணுவாக மாற்றி அந்த உணர்வின் நினைவாகத்தான் மீண்டும் கொண்டு வருகின்றது.

இதைத்தான் கீதையிலே கண்ணன் சொல்லுகின்றான் "நீ எதை நினைக்கின்றாய் அதுவாகின்றாய்..."

வியாசகன் கல்வி அறிவு இல்லாதவன். அவன் கண்ட உண்மைகளைச் சாதாரண மக்களும் எளிதில் அறிந்து கொள்ள
1.கண்ணின் இயக்கத் தொடரும் உயிரின் இயக்கமும்
2.உயிரால் இயக்கப்பட்டு உணர்வின் கருவாக்கி உடலாக எவ்வாறு இயக்குகின்றது..?
3.உடலுக்குள் நின்று இந்த உணர்வின் சக்தி எப்படி இயங்குகின்றது...? என்று உணர்த்தி
4.அதிலிருந்து மீளும் வழிகளையும் மகாபாரதத்தில் தெளிவாக எடுத்து உரைத்திருக்கின்றார்.

5.நாம் தெரிந்து கொள்ள வேண்டியது

நாம் யாரும் தவறு செய்யவில்லை.

பஸ்ஸிலிருந்து காக்க அந்தப் பய உணர்ச்சிகளை ஊட்டித்தான் அந்த வேகத்துடன் நம்மைக் காக்க வைக்கின்றது. ஆனால் அந்த வேகமான பய உணர்ச்சிகளை “ஆறாவது அறிவு கொண்டு...” அதைச் சமநிலைப் படுத்த வேண்டும்.

இல்லை என்றால் அந்தப் பய உணர்ச்சிகளே ஊன்றி நாம் வாழ்க்கையில் எதைச் சிந்தித்தாலும் அந்த வேகத் தொடராகச் செய்யச் சொல்லும். சிந்தனையில்லாத செயல்களாக மாறி நம்முடய காரியங்கள் அனைத்தும் தோல்வியாகும்.

ஆகவே பஸ் வந்து விடும் என்று தன்னைக் காத்தாலும் அந்தப் பய உணர்ச்சிகளை நமக்குள் அளவோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. ஆனால்
1.பயத்தின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் போது
2.மற்றொன்றுடன் இணைக்கும் போதெல்லாம் அந்தப் பயம் நம்மைப் பலவீனப்படுத்தி கொண்டே இருக்கும் என்ற
3.இந்த உண்மையினை நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் போதும்.