ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 23, 2018

தீமை செய்யும் அணுக்கள் நம் உடலில் வளராமல் தடுக்கும் வழி என்ன...?


செடியிலிருந்து வித்து விளைந்து வருகின்றது. கீழே விழுகின்றது. விழுந்த வித்து
1.மண்ணின் மேலே இருந்தது என்றால் முளைக்காது.
2.மழை பெய்தாலும் மண்ணுக்குள் பதிவானால் தான் முளைக்கும்.
3.அப்படியே முளைத்தாலும் மேலே இருந்தது என்றால் கருகிப் போகும்.

அதே மாதிரி  நம் வாழ்க்கையில் எத்தனையோ குணங்கள் கொண்ட உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம்.

உதாரணமாக சந்தர்ப்பத்தில் வேதனையை அதிகமாக எடுத்துக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எடுத்துக் கொண்ட வேதனை உணர்வுகள் இரத்தத்தின் வழியாக உடல் முழுவதும்  சுற்றுகின்றது.

எந்த நேரத்தில் வேதனைப்படுபவரை மீண்டும் மீண்டும் நினைக்கின்றோமோ அந்த உணர்வலைகள் எந்த உறுப்பின் பாகம் வழியாகப் போய்க் கொண்டிருக்கின்றதோ அந்த உறுப்பில் போய் ஒட்டிக் கொள்கின்றது.
1.ஒட்டியவுடனே என்ன செய்யும்...?
2.இந்தப் பிடிப்பின் நிலைகள் வரும்
3.அந்த நேரத்தில் நமக்குப் படபடபடபடவென அடிக்கும்.

குறிப்பிட்ட காலம் வந்த பின் அந்த அணு என்ன செய்யும்..? இந்த உணர்வின் தன்மை துடித்தவுடனே முட்டையில் இருந்து குஞ்சு வெளியில் வரும். வந்தவுடனே கத்துகின்றது.

கோழி முட்டையிட்டு அடைகாத்து முட்டை பொரிந்து குஞ்சுகள் வெளியில் வந்ததும் குஞ்சுகள் எல்லாம் கத்தும். உடனே கொக்..கொக்..கோ...! என்று தாய் கூப்பிடுகின்றது. அதற்கு இரையைக் கொடுக்கின்றது. பின்னாடியே குஞ்சு போகின்றது அந்த உணவை எடுக்கின்றது.

இது போல் தான் நம் உடல் உறுப்புகளில் ஒட்டிய அணுகக்ள் தன் இனத்தைப் பெருக்கிக் குஞ்சாகி விட்டது என்றால்
1.அது தன் பசிக்காக உணர்ச்சிகளை உந்தும்.
2.அந்த உணர்ச்சிகள் சிறு மூளைக்கு எட்டுகின்றது.
3.உடனே கண் காது மூக்கிற்கு அது ஆணையிடுகின்றது.
4.ஆணையிட்டவுடனே என்ன செய்கின்றது...? காற்றில் இருந்து இழுக்கின்றது
5.அந்த வேதனையான உணர்வைச் சுவாசித்து இதே உயிர் அந்த வேதனையான அணுக்களை வளர்க்கின்றது.
6.நம் உயிர் தான் அதற்குச் சாப்பாடு கொடுக்கின்றது.

சுவாசித்ததை இயக்கி.. உருவாக்கி அதற்கு உணவு கொடுத்து வளர்ப்பது தான் “உயிரின் வேலை...” நீ ஏன் “சாப்பாடு கொடுக்கின்றாய்...?” என்று நம் உயிரிடம் கேட்க முடியுமா...?

1.இந்த ஆறாவது அறிவால் அதைத் தடைபடுத்த வேண்டும். தடுத்துப் பழக வேண்டும்.
2.இல்லை என்றால் அதை அடக்கிப் பழக வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்ட நாம் மற்றதை வல்லமை கொண்டவர்கள். அப்போது நாம் எதைக் கொண்டு அடக்க வேண்டும்..? அது தான் அங்குசபாசவா.

அங்குசம் சிறிது தான்...! ஆனால் அவ்வளவு பெரிய யானையை அது அடக்குகின்றது.

அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகள் வலிமையானதாகவும் கடுமையானதாகவும் இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பாய்ச்சினோம் என்றால் அதை அடக்குகின்றது.

நம் ஆறாவது அறிவை முருகனாகக் காட்டி தீமைகளை எல்லாம் அடக்கக்கூடிய வல்லமை பெற்றவர்கள் என்று காவியத்தில் ஞானிகள் தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஆனால் நாம் அதைக் கதையாகத்தான் படித்துவிட்டுப் போகின்றோம். காவியத்தின் மூலக் கருத்தை அறியவில்லை. அதைப் பயன்படுத்தவும் இல்லை.

ஒரு சிலையை வைத்து ஞானிகள் நமக்கு இவ்வளவு விரிவுரை கொடுத்திருக்கின்றார்கள். ஞானிகள் சொன்னதைப் புரிந்து கொண்டால் போதும். நாம் போகும் பாதை தெளிவாகும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் ஞானிகள் காவியத்தில் கொடுத்த உண்மைகளைத்தான் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.