ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 4, 2018

ஆலயங்களில் இன்று என்ன நடக்கின்றது…?


ஆலயங்களில் விழாக் காலங்களில் பார்த்தோம் என்றால் மிகவும் ஆடம்பரமாக இருக்கும். வேடிக்கைகள் இருக்கும். முடிந்த பின் இந்த வருடம் சாமிக்கு என்ன வருமானம் வந்தது...?” என்று கணக்குப் பார்ப்பார்கள்.

இந்தக் கணக்கைப் பார்க்கின்றார்களே தவிர...
1.இந்த வருடம் தெய்வீக ஆலயப் பண்புகள் எத்தனை பேர் பெற்றார்கள்…?
2.அவர்களுடைய வாழ்க்கை எந்த அளவிற்கு இருக்கின்றது...? என்று
3.சிந்தித்துப் பார்க்கும் ஆலய நிர்வாகிகள் யாரும் இல்லை.

அதே மாதிரி அங்கே மூலஸ்தானத்தில் பூஜை செய்தவர்களின் நிலை என்ன...? இந்த வருடம் இரண்டாயிரம் வந்தது... மூவாயிரம் வந்தது…!

பழனியில் பார்க்கலாம்…! பங்குனி உத்திரம் வந்தது என்றால் நான் இவ்வளவு காசு வாங்கினேன்….
1.ஒருவன் இருபதாயிரம் கிடைத்தது என்பான்
2.இன்னொருவன் மொத்தம் நாற்பதாயிரம் எனக்குக் கிடைத்தது என்பான்.

அடுத்து அந்தக் காசு கிடைத்தவுடனே விடிய விடிய உட்காருவார்கள். போய்த் தண்ணியைப் போடுவார்கள் வேண்டியதை எல்லாம் சாப்பிடுவார்கள். இந்த வருடம் “முருகன் நமக்கு நல்ல முறையில் படியளந்திருக்கின்றான் என்பார்கள்...!”

அடுத்த பத்து நாளுக்குள் பணத்தை எல்லாம் தீர்த்து விடுவார்கள். பணம் தீர்ந்தவுடனே... இங்கே கோவிலுக்கு யார் வருகிறார்கள்...?” என்று பார்ப்பார்கள்.

தெரிந்தவர்கள் வந்து விட்டால் இங்கே இருந்து எழுந்து போவார்கள். அவர்கள் ஐம்பது ரூபாய் தான் கொடுப்பார்கள் என்றால் தலையைச் சொறிவான்.

விஞ்சில் (WINCH) வேலை செய்வோரை எப்படியோ காக்காய் பிடித்து வந்தவர்களைக் கூட்டிக் கொண்டு மேலே போவார்கள். அங்கே உள்ளே போய் பழனி ஆண்டவனிடம் போய் அபிஷேகம் ஆராதனை கொடுக்க வேண்டும். அதற்கு அவருக்குக் கொஞ்சம் கமிஷன்…!

அந்த அபிஷேகத் தட்டை அவர் முருகனுக்குக் கொண்டு போய்க் கொடுக்க வந்திருக்கும் ஆள்கள் எண்ணிக்கையைப் பொறுத்து ஐநூறு... ஆயிரம்... கமிஷன்.

இப்படி இதற்காக வேண்டி ஒரு தரகரை வைத்துச் செய்ய வேண்டியதுள்ளது. காசைக் கொடுத்துத் தான் ஆண்டவனுக்கு தேங்காய் பழத்தை வைத்து அபிஷேகம் ஆராதனை செய்துவிட்டு வருகின்ற அளவில் நாம் இருக்கின்றோம்.

ஏனென்றால் சிபாரிசு இல்லாமல் உள்ளே பக்கத்தில் போக முடியாது. எல்லாம் பத்து இருபது பேர் இருந்தவுடனே இவர் என்ன செய்வார்...?

காசைக் கொடுத்தவுடனே அபிஷேகத் தட்டைக் கொடுப்பார். இங்கே அர்ச்சனை செய்வார்கள். அதற்குள் அங்கே இந்த வாட்ச்மேன் வந்து இங்கு மணி அடிய்யா... நேரமாகிவிட்டது...!” என்று சொல்வார்.

அப்பொழுது பக்திக்கு வந்தார்களா...? அல்லது வாட்ச்மேன் சொன்னபடி மணி ஆகிப் போனது..... சீக்கிரம் முடிய்யா...! என்று அதைக் கேட்பதற்கு வந்தார்களா…?

பெரிய ஆலயங்கள் எல்லாம் இப்போது அந்தத் தொழிற்சாலையாக மாறிவிட்டது.
1.அருள் ஞானத்தை மக்களுக்கு ஊட்டும்
2.அரும் பெரும் தொழிற்சாலையான ஆலயங்களை
3.தன்னுடைய பிழைப்புக்குண்டான இடமாக மாற்றிவிட்டார்கள்.
4.தூற்றுதலை உருவாக்கும் நிலையாக அமைந்துவிட்டது…!

ஆலயங்களை வழி நடத்துவோர் விழாக் காலங்களில் அங்கே வரும் மக்களுக்குத் தெய்வப் பண்பினைக் காட்ட வேண்டும். ஆன்மீக நிலைகளையும் மெய் உணர்வின் தன்மையையும் மக்களுக்கு ஊட்ட வேண்டும்.

ஆலயத்திற்கு வரும் வருமானத்தை அருள் ஞானத்தை ஊட்டுவதற்குச் செலவழிக்க வேண்டும். ஞானிகளின் போதனைகளை வருவோருக்குக் கொடுக்க வேண்டும்.

1.பனிரெண்டு மாதமும் நம் ஞானிகள் விழாக்கள் அமைத்ததன் நோக்கமே
2.அருள் ஞான உணர்வுகளை மக்களுக்குள் தூண்டச் செய்து
3.அனைவரையும் ஒருங்கிணைக்கச் செய்து மகிழ்ந்து வாழச் செய்வதற்குத் தான்...!