ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 1, 2018

அகஸ்தியன் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காகக் கூறிப் பதிய வைத்த "குறிப்புகள்…!”


அகஸ்தியனில் விளைந்த உண்மையின் உணர்வுகள் இன்று உலகெங்கிலும் இருப்பினும் அவன் கூறிய உணர்வுகள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது.

இன்றைய மனிதனுக்கு தேவைப்பட்ட நிலைகளில் அந்த சட்டங்களை மாற்றி அமைத்து விட்டார்கள்.
1.மனிதன் திருந்தி வாழ்வதற்கு மாறாகத் தீவினைகளைச் செய்து
2.அதிகமாகத் தீய செயல் உள்ளவர்களாகத் தான் நாம் மாறிக் கொண்டுள்ளோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் தப்ப வேண்டுமா… இல்லையா…?

அன்று அகஸ்தியன் தன் உடலிலுள்ள வலுவின் தன்மை கொண்டு தாவர இனங்களையும் மற்றவைகளையும் நுகர்ந்தறிந்து
1.இது தீமை செய்வது…
2.இது தீமையற்றது…! என்ற உண்மையை அறிகின்றான்

அந்த உண்மையை அறிந்தபின் இதற்கு… “எங்கிருந்து இந்தச் சக்தி கிடைக்கின்றது..?” என்பதையும் உணர்கின்றான்.

அந்த உணர்வு வழிப்படித்தான் அவன் வாழ்நாள் முழுவதற்கும் “அகஸ்தியனின் பார்வையில்….!”
1.சர்வ ரோகங்களையும்
2.சர்வ பிணிகளையும்
3.சர்வ தோஷங்களையும் போக்கக் கூடிய சக்தி
4.அக்கால மக்களுக்குக் கிடைத்தது.

அகஸ்தியன் அகண்ட அண்டத்தையும் நம் பிரபஞ்சத்தையும் அறிந்துணர்ந்து அதையெல்லாம் மக்களுக்குப் பெறச் செய்வதற்காகப் பல குறிப்புகளைக் கொடுத்தான்.

இப்போது எழுத்து வடிவு உண்டு. அன்று எழுத்து வடிவு இல்லை.

மனிதனுக்கு மனிதன் இந்தக் குறிப்புகளைக்
1.குறி வைத்துக் கூறி
2.அதைக் கேட்க வைத்து
3.இந்த பிரபஞ்சம் எப்படி உருவானதென்ற உண்மையினை
4.அனைத்து மக்களும் அக்காலத்தில் அறியும்படிச் செய்தான் அகஸ்தியன்.

அவனே துருவத்தின் ஆற்றலையும் அறிந்தான். நமது துருவத்திற்கு நேராக… “எத்தனை பிரபஞ்சங்கள் இருக்கின்றது…?” என்பதனைக் கூட அறிகின்றான் அகஸ்தியன்.

இப்படித் தீமையிலிருந்து விடுபட்ட இந்த உணர்வின் துணை கொண்டு வளர்ந்தவன் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்.

அவன் துருவனாகி அகண்ட அண்டத்தையும் மற்ற நிலைகளையும் அவன் அறிந்து கொண்ட பின் கணவன் மனைவியாக இணைந்த நிலையில் துருவ மகரிஷியாக ஆனான். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் எப்படி அதைப் பெற்றனரோ அதைப்போல மற்ற மக்களும் பெறுவதற்கு வடமேற்கில் விநாயகரை வைத்துக் வடகிழக்கில் நம்மை வணங்கும்படி செய்தனர். ஏனென்றால்
1.வடகிழக்கில் தான் துருவ நட்சத்திரம் உண்டு.
2.அதை நாம் பெறச் செய்வதற்கு இவ்வழியைச் செய்தனர்.

நாம் வடமேற்கில் இருந்து வணங்கினால் அந்த வடகிழக்கில் இருந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் எளிதில் சுவாசித்து நம் உடலுக்குள் அந்தத் தீமையை போக்கும் நிலையை உருவாக்குவதற்காகத் தான் அவ்வாறு வைத்துள்ளார்கள்.

ஆகவே மனிதனின் வாழ்க்கையில் நாம் தெளிந்த மனம் கொண்டு தெளிவாக வாழ வேண்டும்.

கை கால்களில் அழுக்குப் பட்டால் எப்படி நாம் கழுவி விடுகின்றோமோ இதைப்போல வாழ்க்கையில் எப்போது தீமைகள் பட்டாலும் அதைத் துடைத்து கொள்வதற்காக
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலில் பதியும்படி
2.பதிந்த பின் அந்த எண்ணம் கொண்டு ஏங்கிப் பெறும்படிச் செய்தனர்.

துருவ நட்சத்திரத்தை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்திகளைப் பெற்று நமக்குள் வரும் கலக்கமோ சஞ்சலமோ வெறுப்போ வேதனையோ கோபமோ குரோதமோ இதைப் போன்ற நிலைகளை நமக்குள் வளராதபடி தடுத்து நிறுத்துவதற்குண்டான நிலையைத்தான் செய்தனர்.

தன் இன மக்கள் எல்லோருக்கும் அது கிடைப்பதற்காக “அந்த அகஸ்தியன் தான்…” இவ்வழியைச் செய்தான்…!