ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2018

தெய்வ பக்தி கொண்ட உயிராத்மா இறந்த பின் எங்கே செல்கின்றது...? நடந்த நிகழ்ச்சி...!


குருநாதர் ஒரு கிராமத்துப் பக்கம் என்னைப் போகச் சொன்னார். போனேன். அங்கே ஒரு கிழவி அதற்கு வாரிசு இல்லை.

அந்த அம்மாவிற்கு நிறையச் சொத்துக்கள். முருக பக்தி மிகவும் அதிகம்.

எல்லாக் கோயிலுக்கும் போய் தர்மத்தையும் எல்லாவற்றையும் செய்து நமக்கு எதற்கு…? எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும்...! என்ற எண்ணத்தில் இப்படியே செய்தது.

ஆனால் கடைசியில் என்ன செய்து விட்டார்கள்....!

அந்த அம்மாவை ஏமாற்றிச் சொத்தையெல்லாம் எழுதி வாங்கிவிட்டார்கள். இதைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை.

அனாதையாக்கிவிட்டார்கள். அது ஒரு சிறிய குடிசையில் இருக்கின்றது. அந்தக் குடிசை அருகில் போய் உட்காரச் சொன்னார் குருநாதர்.

உள்ளே அம்மா அங்கே புலம்பிக் கொண்டிருக்கின்றது.

முருகா...! நான் நன்றாக இருக்கிற நேரத்தில் என் மடி மீது அமர்ந்து என்னிடம் கொஞ்சினாயே...! எதை நினைத்தாலும் நீ நல்ல வழியைக் காட்டினாயே..!

என் சொத்தையெல்லாம் பறித்துக் கொண்ட பிற்பாடு உன்னைக் கூட இங்கே வரக் காணோமே... நீ கூட எனக்கு எதிரியாகி விட்டாயா...?” என்று சப்தம் போடுகின்றது.

உடல் சரியில்லாமல் வயிற்றோட்டமாகப் போய் அந்த வீடே நாற்றமாக இருக்கின்றது. உள்ளுக்குள் இருக்க முடியவில்லை.

இதைப் பார்த்தவுடனே எல்லோருமே விலகிப் போய் விடுகிறார்கள். யாருமே கவனிப்பதில்லை.

சொத்தை வாங்கியவர்களோ சீக்கிரம் இது தொலையட்டும்...! எப்படா தொலையும்...? என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னாலும் நாற்றம் தாங்க முடியவில்லை.

குருநாதர் சில உணர்வுகளை எடுத்து “இந்த மாதிரிச் செய்...!” என்று சொல்லிவிட்டு உள்ளே போகச் சொல்கிறார். நாற்றம் அடங்குகின்றது. நல்ல வாசனை வருகின்றது.

அந்த அம்மாவிற்குக் கண்ணும் சரியாகத் தெரியவில்லை. அரைப் பார்வையாக இருக்கின்றது. என் காலடிச் சப்தம் கேட்டவுடனே அப்பா... “முருகா... நீ வந்து விட்டாயாடா...!” என்று கேட்கிறது. என்னை முருகன் என்று நினைக்கின்றது.

நான் வந்து விட்டேன் என்று சொல்கின்றேன்.

“முருகா என்னை நீ காப்பாற்று...!” என்று சொன்னவுடனே அந்த ஆன்மா பிரிகின்றது. முருகன் மேல் எண்ணத்திற்குப் போகின்றது.

யார் யாரை எல்லாம் இது காப்பாற்றியதோ அவர்கள் எண்ணம் அதிகமாகி அவர்கள் எண்ணத்திற்குப் போகின்றது.

உயிர் பிரிந்து போனவுடனே அதற்குப் பின்னாடியே என்னைச் சுற்ற விடுகிறார் குருநாதர்.

யார் யாரையெல்லாம் அந்த அம்மா பதிவு செய்து கொண்டார்களோ தன்னுடைய சொத்தை அபகரித்தார்களோ அவர்கள் பேரைச் சொல்லி அங்கே புலம்புகின்றது.

அதைத் தேடி “இன்னார்” என்று சொல்கின்றது. நானும் அந்த இடத்திற்குப் போனேன்.. பார்க்கின்றேன்...!

அந்த அம்மா அவர்களைச் சாபமிடுகின்றது. சாப அலைகள் பட்டபின் அந்த வீட்டில் என்னென்ன அவஸ்தைப்படுகின்றார்கள் என்று அதையெல்லாம் அங்கே வட்டமிட்டுப் பார்க்கின்றேன்.

ஏனென்றால் தொடர்ந்து ஐந்தாறு மாதம் அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கச் சொன்னார் குருநாதர்.

1.இயற்கை எப்படி ஒரு மனிதனுக்குள் விளைந்தது உடலை விட்டுப் பிரிந்து போன பிற்பாடு
2.உயிராத்மா அடுத்து எந்த நிலை ஆகிறது...?
3.ஒன்றுடன் ஒன்று எப்படிச் சேர்கின்றது..?
4.தெய்வமாகக் காட்சி கொடுப்பது.... சாமியாராகக் காட்சி கொடுக்கிறது... “இது எல்லாமே இப்படித்தான்...” என்று இதைத் தெளிவாகக் காட்டுகிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

எதை நமக்குள் அதிகமாகப் பதிவு செய்தமோ அந்த உணர்வுகள் விளைந்து  வெளிவந்த பிற்பாடு
1.அந்த உயிரான்மா எப்படிப் போகின்றது...
2.அடுத்த உடல்களுக்குள் சென்று மீண்டும் வேதனைப்படுத்தும் நிலையாக எப்படிச் செயல்படுகிறது...?
3,நஞ்சின் தன்மை அதிகமான பின் விஷம் கொண்ட உயிரினங்களாக எப்படி மனிதன் மாறுகிறான் என்று
4.நேரடியாக இப்படி அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

அதையெல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடு பக்தி என்பது எப்படி இருக்க வேண்டும்..? என்று இதைச் சொல்கின்றார் குருநாதர்.

இந்த மனித வாழ்க்கையில் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளைச் சேர்த்து எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருளால் நலமும் வளமும் பெறவேண்டும் என்ற இந்தப் பக்தி இருந்தால் இது நமக்கு அழியாச் சொத்தாகின்றது.

உயிராத்மா உடலை விட்டுச் செல்லும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும் என்று உணர்த்துகின்றார் குருநாதர்.