ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 12, 2018

என்னைப் போல் நீங்களும் ஞானத்தின் வழித் தொடரில் வளர வேண்டும்...!


சொன்ன உபதேசத்தையே திருப்பித் திருப்பிச் சொல்கின்றார் என்று எம்மைச் (ஞானகுரு) சொல்வார்கள். ஒரு டேப்பில் பதிவு செய்வது போலத்தான் உங்களிடம் பதிவு செய்கின்றோம்.
1.பத்து தரம் சாமி சொன்னார் என்று சொல்வார்கள்.
2.ஆனால் திருப்பிக் கேட்டால்... “என்ன சொன்னார்...?” என்று சொல்லச் சொன்னால் “எனக்குத் தெரியாது...!” என்பார்கள்.

ஏனென்றால் எது முக்கியமோ அதை நான் திரும்பத் திரும்ப பதிவு செய்தே ஆகவேண்டும். ஒரு நல்ல விதையை வயலில் பண்படுத்தி விதைத்து வைத்தாலும் அதை வளர்க்கச் சீராக நீரை ஊற்ற வேண்டும்.

அதைப் போன்று தான் மெய் ஞானிகளின் ஞான வித்தை உங்களுக்குள் பதியச் செய்தாலும் அதை உங்களுக்குள் சீராக வளர்க்கச் செய்வதற்காக
1.அந்த மெய் ஒளியின் உணர்வுகளை இணைத்திடும் நிலையாக
2.திரும்பத் திரும்ப அதை உரமாக உணவாகக் கொடுக்கின்றோம்.

சாமி சும்மா திரும்பத் திரும்பச் சொல்கின்றார். சொன்னதேயே மீண்டும் மீண்டும் என்று ஒரு சிலர் சொல்வார்கள்.  
1.எப்படியும் உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்பம் எல்லாம் நீங்கி
2.உங்களுக்குள் மெய் ஞான உணர்வுகள் வளர்ந்து
3.நீங்கள் இடும் மூச்சுகளெல்லாம் பிறருடைய துன்பத்தைப் போக்கக்கூடிய அலைகளாக இங்கே படர வேண்டும் என்ற
4.பேராசை எனக்கு நிறைய இருக்கின்றது.

நான் என்ன செய்கின்றேன்...? கடலில் இட்ட பெருங்காயம் தானே. கடல் எவ்வளவோ பெரிதாக இருக்கின்றது. அதில் நான் ஒருவன்  பெருங்காயத்தைக் கொண்டு நல்ல வாசனையைப் போட்டால் என்ன ஆகும்...? எவ்வளவு நேரம் இருக்கும்...?

உங்களுக்குள் வரும் துன்பத்தை உள்ளே விடாது அந்தத் துன்பத்தை உருவாக்கக்கூடிய விஷத்தின் தன்மையை அடக்கி நல்லதாக்கும் நிலைகள் பெற வேண்டும்.

1.துன்பத்தை நீக்கி... “நீங்கள் விடும் மூச்சலைகள் அனைத்தும்...”
2.இந்தக் காற்றுக்குள் பரப்பச் செய்ய வேண்டும்.
3.அப்படிப் பரப்பினால் சூரியனின் காந்தப் புலன்கள் அதைக் கவர்ந்து
4.உலகம் முழுவதும் பெரும் கடலாகப் பரவச் செய்துவிடும்.

நீங்கள் இதைப் படிக்கின்றீர்கள். உங்களுக்கு இப்போது கிடைக்கும். கிடைத்தாலும் கூட... “என்னைப் போல...!’ நீங்களும் இந்த மூச்சலைகளை வெளியிட்டால் அந்த மெய் உணர்வின் அலையின் தொடர்கள் வருகின்றது.

பேரருள் பேரொளியாக மாறும் உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் பரவும். அதைச் சுவாசிக்கும் உலக மக்கள் அனைவரும் ஞானத்தின் வழித் தொடரில் வளர ஏதுவாகும்.

நீங்கள் விடும் சுவாசம் உங்களைக் காக்கும். அதே சமயத்தில் உலக மக்களைக் காக்கும் அரும் பெரும் சக்தியாகவும் அது மாறுகின்றது.

அந்த நிலையை உருவாக்குவதற்காகத்தான் திரும்பத் திரும்பச் சொல்வது...!