ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 28, 2018

எண்ணியதை எண்ணியவாறு செய்து முடிக்கும் சூட்சமம்

வீட்டில் நாம் குழந்தைகளைச் செல்லமாக வளர்க்கின்றோம், ஆனால் “இப்படிச் செய்து கொண்டிருக்கின்றான்..,” என்று குறைகளைச் சொல்கின்றோம்.

நல்லவனாக்குகின்றோம். ஆனால், இந்தக் குறைகளைச் சொல்கின்றோம். பரிபக்குவமாக எடுத்துச் சொல்லும் நிலை இல்லை.

வீட்டிற்குள் சில நேரம் குறைகள் வந்துவிடுகின்றது. அவைகளைப் பரிபக்குவமான நிலைகளில் நிவர்த்தி செய்து பழகிக் கொள்தல் வேண்டும்.

பக்குவம் தவறிவிட்டால் என்ன ஆகும்?

ஒருவரை “வாருங்கள்..,” என்று அமைதி கொண்டு அன்பாகக் கூப்பிடுவதற்குப் பதில் உரத்த குரலில் அழுத்தமான நிலையில் “வாங்கஅ..,” என்று சொன்னால் இதுவே குற்றமாகிவிடும்.

பக்குவத்தின் நிலையில் எதையுமே நல்லவைகள் ஆக்குவதும் கெட்டவைகள் ஆக்குவதும், உணர்வை மாற்றுவதும், குணங்களை மாற்றுவதும், எதிரிகளாக்குவதும், நண்பனாக்குவதும் இவை எல்லாமே நம் உணர்வுகளின் பக்குவத்தைப் பொறுத்துத் தான் அமைகின்றது.

தொழிலிலோ மற்ற எதிலுமே சிறிது கஷ்டங்கள் வந்துவிட்டால் நாம் பக்குவமான நிலைகள் கொண்டு ஓரளவிற்குச் சிந்தித்துச் செயல்பட்டோம் என்றால் அதைச் சரியாக நிவர்த்திக்கும் தன்மை வருகின்றது. பகைமையைக் குறைக்கலாம்.

இதே போல வாழ்க்கையில் வரும் தீமைகளை அந்தப் பரிபக்குவ நிலை கொண்டு மாற்றியமைக்க முடியும்.

ஒருவர் சொல்லும் தீமையான உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று தடுத்து நிறுத்தினால் “அதன் வேகத்தையும்.., துடிப்பையும்.., நிறுத்தி” உணர்வின் அறிவாக நமக்குள் சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும்.

யாருமே கெட்டவர்கள் அல்ல. “சந்தர்ப்பம்..,” அவர்களைக் கெட்டவர்களாக ஆக்குகின்றது.

அதிலிருந்து மீட்டிடும் நிலையே நம் குருநாதர் காட்டிய அருள் வழி.

அதற்காக வேண்டி ஒரு முரடனிடம் போய்ப் பரிபக்குவமாகப் பேசினால் கேட்பானா..,? ஒரு குடிகாரனிடம் போய்ப் பரிபக்குவமாகப் பேசினால் கேட்பானா..,?

நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர அவனிடம் பக்குவம் எடுத்துச் சொன்னால் கேட்க மாட்டான். அவன் கொடிய தவறு செய்ய விரும்புகின்றான். அவனிடம் பக்குவமாகச் சொன்னால் கேட்பானா..,?

ஒரு திருடன் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனிடம் போய், “ஏன் இப்படித் திருடுகின்றாய்..,?” என்று பக்குவம் சொன்னால் கேட்பானா? கேட்க மாட்டான்.

ஆகவே, அந்தத் திருடனின் உணர்வுகள் நமக்குள் வராதபடி நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் ஒரு நல்ல பொருளை வைத்திருக்கின்றோம் என்றால் தூசியின் தன்மை அதற்குள் படாதபடி மூடி வைக்க வேண்டும். அதைப் போன்று தான் தீமையின் உணர்வுகள் நமக்குள் போகாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அதற்காக வேண்டி நாம் போக்கிரியையும் திருடனையும் பார்த்தால் பக்குவமாக நடந்து கொண்டால் எல்லாம் தலைகீழாகப் போய்விடும். நம் பக்குவமெல்லாம் தலை கீழாகக் கவிழ்ந்துவிடும்.

அவன் செய்யும் தவறுகள் நமக்குள் வந்து நாம் தவறு செய்யாமல் பரிபக்குவ நிலை கொண்டு தடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் தவறின் நிலைகளில் “இப்படிச் செய்கின்றான்..,” என்று அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் வந்தால் அதே தவறை நாம் செய்யும்படிச் செய்துவிடும். அதனால் பக்குவம் தவறிவிடும்.

இதைப் போல நம் வாழ்க்கை சீராக நடக்க பக்குவ நிலைகள் தேவை. எதெனெதன் நிலைகளை நமக்குப் பக்குவ நிலை தேவையோ அதற்குகந்த நிலையில் பக்குவப்படுத்தி நாம் பழகுதல் வேண்டும்.

பாட்டை மட்டும் பாடிவிட்டு..,
பல நினைவில் நான் இல்லாமல்
“பரிபக்குவ நிலை..,”
நான் பெற அருள்வாய் ஈஸ்வரா.