ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 3, 2024

இன்னல்கள் பல மோதினாலும் “தெளிவு பெறும் ஞான வளர்ச்சியை” நீங்கள் பெறுவீர்கள்

இன்னல்கள் பல மோதினாலும் “தெளிவு பெறும் ஞான வளர்ச்சியை” நீங்கள் பெறுவீர்கள்


நம் உடலை விட்டு நம் ஆத்மா பிரிந்து செல்வதைச் சிவபதவி அடைந்து விட்டார் தெய்வீக பதவிக்குச் சென்றிட்டார் என்றெல்லாம் நம் ஆத்மா பிரிந்த பிறகுநம்முடன் வாழ்ந்தவர்கள் நமக்களிக்கும் பதவிதானே தவிரஎப்பதவியும் அச்சிவனால் நமக்கு அளிக்கப்படுவதில்லை.
 
வாழ்ந்த காலத்தில் நாம் இருக்கும் நிலையைக் காட்டிலும் ஆவி உலகில் அல்லல்படும் நிலை மிக மிகக் கொடிய நிலை…
 
நல் ஆத்மாவாய் நற்செயலைச் செய்வித்து நல்லுணர்வு கொண்டு அமைதி கொண்டு இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பற்று, பாசம், ஆசை அனைத்து நிலைகளையுமே வாழ்ந்த நிலை கொண்டு பூரிப்பில் சஞ்சலத்தில் விட்டுச் செல்வதைப் போல் எண்ணாமல்
1.அமைதியுடனே இவ்வுலகப் பற்றற்றுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களினால் தான்
2.ஆண்டவனாயும் அக்குடும்பத்தின் தெய்வமாயும் தான் வாழ்ந்த குடும்பத்தைச் செழிக்கச் செய்திடல் முடிந்திடும்.
 
குடும்பத்தில் உள்ளோரும் அக்குடும்பத்தில் வாழ்ந்திடும் பெரியோர்களை அன்புடன் வணங்கியே அவர் வாழ்ந்த காலத்தில் நாம் செய்யும் சேவைதான், அவர் ஆத்மா பிரிந்த பிறகு நம் குடும்பத் தெய்வமாய் நம்மைக் காப்பார்.
1.அவ்வழியின் தொடர் தான் குடும்பத் தொடராக…
2.பெரியோரை தாய் தந்தையரை பக்தி கொண்டு வணங்கிடும் பக்குவ நிலை என்பதனை உணர்ந்து
3.ஒவ்வொரு குடும்பத்தையும் அக்குடும்பங்களே கோயில்களாய்த் திகழும் வண்ணம் வாழ்ந்து வழி நடந்திடல் வேண்டும்.
 
பல கோயில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனை செய்வித்துப் பக்தியை வளர்த்து வேண்டும் முறையைக் காட்டிலும் நம் இல்லக் கோயிலை அன்பு கொண்டதாய் இனிமையை வளர்க்கும் இன்ப இல்லமாய் இல்லத்தில் உள்ளோர் அனைவரின் எண்ணக் கலப்பும் ஒன்றுபட்டதாய் வாழ்ந்திடும் வழி பெறுங்கள்.
1.வாழ்க்கையுடன் மோதிடும் பல இன்னல்களுக்கும்
2.தெளிவு பெறும் பக்குவத்தில் நம் ஞான வளர்ச்சியின் தொடர்பினை வளர விடுங்கள்.
 
செல்வமும், செழிப்பும் தானாய் வளரும். பக்தி என்னும் அன்பு கொண்ட வாழ்க்கையின் நெறியறிந்து ஞான வழியின் தொடரைப் பின்பற்றி வழி நடந்து வாழ்ந்திட்டாலும் நம் எண்ணத்தில் நம் வாழ்வின் நிறைவில்
1.”நான் என்ற எண்ண நிலையை என்றென்றும் மோத விடாமல்,
2.செழிப்பின் வழியிலே தான் நம் எண்ணத் தொடர் சென்றிடல் வேண்டும்.
 
நல்லோருடனே பழகியும் நற்பயன் கொண்ட காரியத்தைச் செய்தும் பக்திமானாய் அன்பு கொண்ட வாழ்க்கை வாழ்ந்தும் இவ்வாழ்ந்திடும் வழித்தொடரில் நம்மைக் காட்டிலும் நம் வழித் தொடர் பெறாமல்
1.பிறரின் வாழ்க்கை நிலை, நெறிமுறை இவற்றின் தன்மை நம்முடன் ஒட்டாமல் சத்துரு மித்திரு கொண்டவரின்
2.தீய சக்தியின் பிடியில் சிக்கி அப்பழக்கத்திற்கு அடிமை கொண்டவரின் நிலையையும் நம் நிலையையும் ஒப்பிட்டு
3.நம் நிலையின் பெருமையை நாம் எண்ணினால் நான் என்ற நிலையினால் நாம் வளர்ந்த இந் நற் சக்தியிலேயே கரைபடுகின்றது.
 
பல தீய வழிகளில் அடிமை கொண்டு அந்நிலையிலிருந்து மீள வழியில்லாமல் நல்லுணர்வு கொண்டோரை தீய நிலையில் உள்ளவரின் எண்ணம் அன்புப்படுத்தி பக்திப்படுத்தி
1.நமக்கு அப்பாக்கிய வழி சென்றிடும் வழித்தொடர் இல்லாமல் இந்நிலையில் உள்ளோம் என்ற எண்ணத்திலேயே
2.அவர்களின் ஆத்மாவில் நற்சக்தி பெற்றோரை எண்ணத்தில் ஈர்த்த சக்தி கூடி வலுப் பெறுகின்றது அவ்வாத்மாக்களுக்குமே.
 
நாம் வாழ்ந்திடும் நம் நினைவுடன் கலந்திடும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவற்றுக்குண்டான சக்தி நிலை நம்முள் சேமிக்கப்படுகின்றது.
 
இவற்றை உணர்ந்திடாமல் வாழ்ந்தோம் என்ற நிலை கொண்ட சாதாரண நிலையில் வாழ்ந்து நாம் இம்மனித ஆத்மா கொண்ட உடலைப் பெற்று வாழ்ந்திடும் இப்பாக்கியத்தைச் சிதற விடாதீர்கள்.
 
இன்றளவும் நம்மில் தோன்றி சப்தரிஷி நிலைகொண்ட ஜோதிகளும் இன்னும் பக்தியென்ற தொடர் நிலை கொண்ட தனக்கு மேல் உள்ள உயர்ந்த சக்தியான இயற்கையின் ஆதி சக்தியையே ஒவ்வொரு சப்தரிஷிகளும் ஜெபப்படுத்தி பூஜைப்படுத்தி நான் என்ற நிலைப்படாமல் மென்மேலும் அவ் இயற்கை ஜெபத்துடன்தான் செயலாற்றுகின்றார்கள்.
 
அனைவருக்கும் முருகனாய் ஜெபப்படுத்தி வணங்கிடும் அப்போகநாதரே அச்சிவசக்தியின் ரூப ஜெபத்தை இன்றளவும் அம்முருகரின் விக்கிரகத்தை ஜெபப்படுத்திக் கொண்டே உள்ளார்.
 
முருக ஸ்தலமே அம் முருகரின் அச்சிலையே அவர் ஜெபிக்கும் ஜெபத்தை ஈர்த்து சக்தியை வளர்த்துக் கொண்டே அருள் புரிகின்றது.
 
நம் பாட நிலையில் இவ்வுலகில் வளர்ந்த கனி வளங்களை இப்பூமியிலிருந்து பிரித்த பிறகு ஜீவனற்றுப் போகின்றது என்று உணர்த்தியுள்ளோம்.
 
ஆனால் போகர் ஸ்தாபிதம் செய்த முருகரின் சிலைக்கு அப்போகர் ஜெபித்த ஜெபத்தினால் அம்முருகரின் சிலையே ஜீவன் கொண்ட நிலையில், அம்மலையில் ஐக்கியப்பட்டுவிட்டது.
 
1.ரிஷிகளும் சப்தரிஷிகளும் அவர்களின் நிலையினால் நட்ட கல்லையும் ஜீவன் கொண்டிட முடிந்திடும்.
2.சப்தரிஷியின் நிலை எவ்வண்டத்தையும் எப்பிண்டத்தையும் சுழலிலிருந்து நிறுத்திடவும் முடியும்
3.பிண்டத்தையே அண்டமாக்கிச் செயல்படுத்திடவும் முடியும்.
 
சப்தரிஷியின் சக்தியில் அனைத்து உலக சக்தியையுமே செயலாக்கிடும் நிலை கொண்டு தான் செயல் புரிகின்றனர்.
 
உயிரணுவாய் உயிராத்மாவாய் வளர்ச்சி கொண்டவர்களே சப்தரிஷியாய் சகலத்தையும் அறிந்திடும் சக்தி கொண்ட நிலையிலும் இயற்கையின் சக்தியை பூஜித்தே அவ் ஆதிசக்தியின் சக்திக்கு அடிபணிந்தே செயல் ஆக்குகின்றனர்…
 
நாம் வாழ்ந்திடும் இக்குறுகிய கால வாழ்க்கையை நம் சக்தியின் ஞானத்தொடர் வழியைச் செயல்படுத்தி வழி வந்து
1.நம் சக்திக்கும் அனைத்துச் சக்தியையும் ஈர்க்கும் சக்தி ண்டு என்ற
2.ஒரு நிலை கொண்ட எண்ண நிலை கொண்ட வழித்தொடர் பெற்றிடுங்கள்.