மாரியம்மனோ காளியம்மனோ “எனக்கு ஆடு கொடு…!” என்று கேட்கிறதா…?
இவ்வுலகினில் பில்லி, சூனியம்,
ஏவல், மையிடுதல், கருவித்தை
இப்படிப் பல நிலைகள் உள்ளன. இவற்றில் இருந்து நம் நிலை மீளும் நிலையை அறிந்திடல்
வேண்டும்.
பல காலமாய் சூனியம் செய்தவர்களின் நிலையையும் மற்றத் தீய
சக்தியின் செயலைத் தன் பிழைப்பிற்காக ஏவியதின் நிலையையும் வரும் பாடங்களில்
உணர்த்திடுவேன்.
மலைப் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மந்திரவாதிகள் பல மண்டை
ஓடுகளை வைத்து பூஜிப்பர். அதுவும் அல்லாமல் அம் மண்டை ஓட்டின் சொந்தம் கொண்ட உடலின் நிலையிலிருந்து, மை எடுத்து அதனையும் இம்மண்டை ஓட்டையும் வைத்து, பூஜித்து இம்மையை யார் யாருக்கெல்லாம் தாயத்துகளாய்த் தருகின்றார்களோ அவர்களின்
நிலையும் மந்திரவாதியின் நிலைக்கும் தொடர்பு பட்டு, சில
நிலைகளை அறிந்திடத் தான் இவர்கள் பூஜையில் அம்மண்டை ஓட்டை வைப்பது.
இவர்கள் மை தயாரிப்பது எந்நிலையில்…?
மயானத்தில் அர்த்த ஜாமத்தில் சில உடல்களைk கூடியவரை கருச் சிசுக்களைத் தான் (இறந்த சிசுக்களை) இவர்கள்
தேர்ந்தெடுப்பார்கள். வளர்ந்து ஆசைப்பட்டு குடும்பப் பற்றுடன் நீத்தாரின் உடல்கள்
இவர்கள் செயலுக்கு செயல்பட்டு வராது.
அவர்களின் ஆத்ம எண்ணமே தன் குடும்ப நிலையில் சுற்றிக்
கொண்டிருக்கும். அதனால் தான் இக்கருவித்தை மந்திரவாதிகள் எல்லாரும் தாயின் கர்ப்பத்தில்
தோன்றும் முதல் சிசுவை அது இறந்துவிட்டால் (தலைச்சன்) அதனுடைய உடலைப் புதைத்துச்
சென்ற பிறகு அதைத் தோண்டி எடுத்து இவர்களின் செயலுக்காக அவ்வுடலை
ஈடுபடுத்துகின்றனர்.
நம் மூதாதையர் காலத்தில் முதல் தலைச்சன் சிசுக் காலமானால்
அதன் உடலை சிறிது பின்னப்படுத்தித் தான் அடக்கம் செய்வார்கள். பின்னப்படுத்திய
அச்சிறு சதையை இவர்கள் தாயத்தாக்கி பூஜிப்பார்கள்.
அந்நிலையில் அச்சிசுவின் ஆவி இங்கு செயல் கொள்ளும் ஏவலின்
நிலைக்கு ஒத்து வராது. இப் பின்னப்பட்ட இறந்த சிசுவை எடுத்துச் சென்று பெரிய மண்
பானையில் அச் சிசுவின் உடலை இட்டு அப்பானைக்கும் கீழ் இரண்டொரு பானைகளை வைத்து
பெரும் நெருப்பிட்டு எரியவிட்டு கீழ் எரியும் நிலையிலிருந்து மேல் பானைக்கு
அவ்வுஷ்ணம் பட்டு அச்சிசுவின் உடலில் இருந்து கசியும் அதன் அமில நீர் சக்தி
எல்லாம் எரிய எரிய வடிந்து இக்கீழ்ப் பானையில் மெழுகு போன்ற மை பதத்தில் ஒட்டிக்
கொள்ளும்.
சிசுவை இட்டுள்ள பானைகளில் துவாரம் வைத்திருப்பார்கள். இச்
சிசுவின் மைக்கு வேண்டிய அமில நீர் சக்தியெல்லாம் ஈர்த்த பிறகு அச் சிசுவின் சக்கை உடலை அதே நெருப்பிலிட்டு அதன் அவயவங்களையும்
சேகரித்து அதன் அவயவத்தை வெந்த நிலையில் வைத்து மண்டை ஓடுகளுடன் அங்கங்களையும்
சேர்த்துப் பூஜிப்பார்கள்.
இவ்வமில நீரில் அவ்வுடலின் வெந்த சாம்பலையும் சேர்த்து மை
போல் மசிய வைத்து பூஜித்து இப் பில்லி, சூனியம்,
ஏவல், மையிடுதல் போன்ற நிலைக்கெல்லாம் இச்
சிசுவின் நிலையை ஏவுவார்கள்.
இக்கருப்பு நிறம் கொண்ட இம் மையையே தன் நெற்றியில் இட்டுக்
கொண்டும் தாயத்துகள் செய்து இம்மையை அதனில் வைத்து தன் உடலிலும் அணிந்து
கொள்வார்கள்.
இவர்களின் பொருள் ஆசைக்குகந்த நிலைப்படுத்திட இக்குட்டி
சாத்தானை ஏவுவார்கள். ஒவ்வொரு மந்திரவாதியும் ஒரு சிசுவில் இருந்து மட்டும் ஏன்
தன் ஏவலைச் செயல்படுத்துவதில்லை. பல சிசுக்களையும் இந்நிலையில்
செயல்படுத்துகின்றார்கள்.
இவர்கள் ஏவிய நிலைக்கெல்லாம் அக் குட்டிச்சாத்தான்கள் ஆவி
உருவில் சென்று பல உண்மைகளை அறிந்து வரும்.
1.மாரியம்மாள், காளியம்மாள்
என்று மனிதர்கள் மத்தியில் இச்சக்தியின் நாமத்தைச் செப்பியே பேய் ஓட்டுவதைப்
போலவும்
2.மாரியாத்தா ஆடு கேட்கிறாள், கோழி, முட்டை கேட்கின்றாள் என்றெல்லாம் சொல்லி
3.இக்குட்டி சாத்தான்களின் ஆசைக்கு உகந்த
உணவுகளைப் படைத்து இவர்களின் செயலை முடித்துக் கொள்கின்றனர்.
இவர்களிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் விலகி இருக்க வேண்டும்…
விடுபடவும் வேண்டும்… நாம் சிக்கி விடக் கூடாது.