ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2023

சகுனியின் சூதாட்ட சூழ்ச்சி

உதாரணமாக (பிறரிடம்) நம் காரியத்தைச் சாதிக்க வேண்டும்… பணம் வாங்க வேண்டும் என்றால்… நண்பன் (அல்லது அதற்குண்டானவர்கள்) எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை வரும். அப்படி ஏற்றுக் கொள்ளும் தன்மை வரப்படும் பொழுது சாந்தமாகும்.

சாந்தமான நிலைகள் வரப்படும் பொழுது “தர்மன்” என்ற நிலை அடைகிறது.

சாந்தமான நிலை வருவதற்கு முன் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளின் தன்மை எது இருந்தாலும்
1.காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு…
2.நம் மனதை அடக்கிச் செயல்படுத்தும் பொழுது
3.நம் எண்ண வலுவில் தன்மைக்குள் நண்பனின் உணர்வு நமக்குள் திணிக்க்கப்படுகிறது… அப்பொழுது அதன் வலு தான் “அர்ஜுனன்…”

நமக்குப் பணம் தேவைப்படுகின்றது (நண்பனின் தயவு) என்று கண் கொண்டு நண்பனை உற்றுப் பார்க்கின்றோம். ஆறாவது அறிவால் மனதை அடக்கி… அவர் சொல்வதை எப்படியும் நாம் கேட்டாக வேண்டும். ஏனென்றால் கேட்டால் தான் நமக்குச் சலுகை கிடைக்கும். அவன் சொல்லும் உணர்வுகள் அர்ஜுனன் வலிமையானது.

ஏனென்றால் அந்த நண்பன் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் என்ற நிலையில் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அதை நுகர்ந்தால் அர்ஜுனன்.

நண்பன் பேசும் உணர்வுகளைக் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்ற அணுத்தன்மை அடைகின்றது. அந்த உணர்வின் சத்தி அதை இயக்கக்கூடிய பரப்பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து சரஸ்வதி ஆகின்றது… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

அந்த அணு இப்படிக் கவர்ந்து கொண்டால் அந்த ஞானத்தின் வழியே அதனின் வித்தாகிறது.

இருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளாத மனமாக இருக்கப்படும் பொழுது
1.பணம் வாங்கும் காரியத்திற்காக ஏற்றுக் கொள்கின்றோம்.
2.ஆனாலும் அதை இந்த மனது ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் ஏற்றுக் கொள்கின்றது.

இதைப் பார்த்து மற்றவர்கள்… என்ன…? அவருடன் இப்படிக் கூடிக் குழாவுகின்றாய் என்று கேட்பார்கள். என்ன செய்வது…! அவரிடம் காசு வாங்க வேண்டி இருக்கின்றது அல்லவா. இல்லை என்றால் எப்படிக் கிடைக்கும்…? என்ற நிலையில் இருக்கின்றோம்.

அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
1.அதைத்தான் சூழ்ச்சி என்பதாக… சூதாட்டம் ஆடுவதாக
2.சூட்சும நிலைகள் கொண்ட “சகுனி” என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

சகுனி தாயக் கட்டைய உருட்டுவது போல் நம் காரியத்தை எண்ணி அதை நாம் உருட்டி எடுக்கின்றோம். அதாவது நாம் என்ன செய்கின்றோம் என்றால்
1.நம் காரியத்தைச் சாதிப்பதற்காக அவருடைய எண்ணத்தை “உருட்டி” எடுக்கின்றோம் “சூதின் மூலமாக…!”
2.அப்போது நாம் ஜெயித்து விடுகின்றோம் (பணத்தை வாங்கிவிடுகின்றோம்)

முந்தி அவர்கள் நல்லதைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள்… அப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பணம் வாங்குவதற்கு மட்டும் உள்மனதாக வைத்து இதைக் கலந்து ஏற்றுக்கொள்ளும் அந்த உணர்வு ஆகிறது.

பணம் வாங்கி ஓரளவுக்கு வசதியாக ஆன பிற்பாடு என்ன செய்கின்றோம்…? சமயம் வரும்பொழுது அவருக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வோம்…! (எல்லோருமே இதை அனுபவத்தில் பார்த்திருப்போம்)

சகுனி தாயம் போட்டு சூதாட்ட விளையாட்டிலே தோற்கடித்து விட்டேன் என்ற நிலை வருகிற மாதிரி நமக்குள் சூதின் உணர்வுகள் வந்து விடுகிறது.

முதலிலே அந்த நண்பனின் உணர்வுகள் அர்ஜுனன் ஆகின்றது. அவன் எதையுமே குறிவைத்துத் தாக்கும் தன்மை பெற்றவன். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் “நகுலன்” உடலுக்குள் அது இணைந்து செயல்படும் தன்மை வருகின்றது.

நாம் எண்ணும் ஆந்த உணர்வை உயிரிலே சேர்த்து… சேர்த்துக் கொள்ளும் உணர்வாக எண்ணும் போது அதற்கு இடம் கொடுக்கின்றோம். அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது “சகாதேவன்…” ஆகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஏற்றுக்கொண்டால் “பீமன்” ஆகின்றது. அவர் சொன்ன உணர்வு அந்த வலுவும் நமக்குள் வருகின்றது. பீமன் என்ற அந்த வலுவான உணர்வுகள் ஆனால் அதன் வழி தர்மன் ஆகின்றது

நம் உடலுக்குள் இத்தனை போர் நடந்து கொண்டிருக்கின்றது

இருந்தாலும்… நம் எண்ணங்கள் அவரை ஏமாற்றும் விதமாகச் செயல்படும் பொழுது
1.”சகுனி…” நமக்குள் இருந்து அதன் உணர்வாகக் கலந்து தான் நமக்குள் ஏற்றுக்கொள்கிறதே தவிர
2.நண்பன் நமக்கு நல்லதைச் சொன்னார் என்ற நிலையில் ஏற்கும் பருவமில்லை.

இப்போது இங்கே தியானம் செய்கின்றோம் என்றால்… பல வகைகளிலும் பலவிதங்களை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றோம்.

எப்படியோ தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும்… தியானம் செய்தால் நமக்கு நல்லதாகும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் வருகிறோம்.

அவ்வாறு ஆசைப்பட்டு சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகள் தான் .வரும். நாம் எண்ணிய அந்த உணர்வுகள் பதிவாகிறது. பதிவின் உணர்வு மீண்டும் நினைவாகும் பொழுது நம்மை இயக்குகின்றது.

நாம் எந்தத் தொழிலின் நிமித்தம் இணைத்து “இந்தத் தியானத்தைச் செய்தால் நாம் நன்றாக இருப்போம் என்று எண்ணினோமோ…” அதன் எல்லை வரை இது வளரும்.

தான் எதிர்பார்த்த நிலைகள் இல்லை என்றால் உடனே குருக்ஷேத்திரப் போராகிறது. எங்கே…? இந்த உயிருக்குள்…!
1.இவ்வளவு நாளும் என்னத்தைத் தியானத்தைச் செய்து என்ன பலன் கிடைத்தது…? என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.எண்ணியபடி நடக்கவில்லை என்றால் இந்தப் போர் நடக்கின்றது.
3.தியானத்திற்குப் போவோமா வேண்டாமா…!
4.தியானத்தைச் செய்வோமா வேண்டாமா…? என்ற இந்த உணர்வு வந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்கும் நமக்குள் உயிரிலே இந்த குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டே உள்ளது. ஏனென்றால் நம் உணர்விற்கும் புறத்திலிருந்து வரக்கூடிய நிலைகளுக்கும் இந்த வித்தியாசம் ஆகிறது.

அதனால் தான்… நாம் நம் மனதைக் குவிக்க வேண்டும்… அனைத்து உணர்வுக்குள்ளும் பகைமைகளை அகற்றிய ஞானிகளின் உணர்வுகளைச் சேர்த்து உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டும்… ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வருகிறோம்.