ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2023

ஈஸ்வரா…! என்று உயிரின் ஏக்கத்துடன் விழிப்பார்வை இருக்க வேண்டுமப்பா…!

மனித நேயமனம் அன்பினுக்குகந்த அறவழி நடக்கலுற்று... பகுத்தறியும் ஆற்றல் வழி பண்பு கொண்ட தவமயர் இல்லறத்தின் வழி நடந்தே... மகோன்னத முனைப்பாற்றல் சக்தியை நிறைவாகப் பெற்று... அந்த ஆற்றலின் சிறப்பாக வளர்ச்சியில் வளர்ந்திட முடிந்திடும்.

பகல் இரவு என்று எண்ணாத எறும்பு ஊர்ந்து சென்று தன் இனங்களுக்கு ஊட்டும் சேமிப்பாகவே உணவினைத் தேடுகின்றது. அது போல்
1.அகம் ஜெபித்திடும்... (தனக்குத் தானே - உயிருடன்)
2.ஆத்ம பலம் கூட்டிடும்... (தன்னை வளர்ப்பதற்கு)
3.மெய்ப் பொருள் செல்வம் எனும் சேமிப்பின் சூட்சுமம் கொண்டு வளர்ந்திட... (உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அழியாச் சொத்து)
4.வழி நடத்தும் வழி முறைகள் காட்டியதே வல்லார் (மகரிஷிகளின்) தம் ஞான நிலை.
5.தவமாக வாழ்வின் நிறைவு பெற்ற மாமகான்களே அவர்கள்…!

அதை எண்ணி ஈர்த்திடும் பக்குவத்தில் வளரும் நம் ஞான நிலை.

1.நம் ஒளி காந்த சக்தியுடன் அந்த மகரிஷிகள் ஒளி காந்த சக்தியாக ஒன்றிச் செயல்படுகின்ற
2.அந்தத் தவப்பயன் வழியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அகத்தின் அழகு பற்றி வழக்கில் உரைக்கும் உரையைச் செவி வழியாக அறிந்திருப்பாய். எது அகத்தின் அழகு…?
1.அல்லார் எனும் நிலை விடுகின்ற பொழுது அக மலர் மலர்ந்து மணம் வீசுகின்றது.
2.விருப்பு வெறுப்பற்ற தன்மை அக வாழ்வினோடு புற வாழ்க்கைக்கும் அது பொருந்தும்.

அந்த நிலை பெற்ற மனத்தின் மாண்பு செயலுறும் விதம் என்ன…?

அத்தகைய அக அழகு பெற்றவனும் ஏங்குகின்றான்… அது உயர்வு எண்ண ஏக்கமப்பா…!
1.அக அழகின் கண் ஏங்கும் வழிப்பாதை... விழிப்பார்வையில் உண்டு.
2.ஈஸ்வரா...! என்ற எண்ணமுடன் ஈர்ப்பின் நிலை ஏக்கமாகப் பெற்றிருத்தலே “விழிப் பார்வையின் காப்பு…”

இந்த நிலையால் மனத்தின் மாண்பு உயர்ந்து கொண்டிடும்.