ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2023

தியானம் எடுப்பவர்களுக்கு வேக குணம் ஆகாத ஒன்று…!

மண்ணிற்குள் மறைந்திருக்கின்றது கிழங்கு. பசியின் வேகம் இருந்தாலும் அந்தக் கிழங்கினை அகழ்ந்து எடுக்கின்ற செயல் மிருக இனங்களில் ஒன்றான காட்டுப்பன்றி மூர்க்க குணம் கொண்டே வளர்ந்தது அதன் செயல்.

பூமிக்குள் மறைந்து கிடக்கும் கிழங்கை அறிந்து கொண்டு தன் கொம்புகளால் மண்ணை அகழ்ந்தது அந்தக் கிழங்கைப் பற்றி எடுக்கின்றது. காரணம் பசியின் வேகம்…!

காட்டுத் தீ பற்றி எரிகின்றது. பிறகு பெய்கின்ற மழைக்குப் பின் மண்ணிற்குள் மறைந்து கிடக்கும் கிழங்கு துளிர்விட்டுத் தழைத்து வளர்கின்றது.

பெரும் நெருப்பாகப் பற்றி எரிகின்ற காட்டுத் தீ… மரம் செடி கொடிகள் பசும்தளிர்கள் அனைத்தையும் பஸ்பமாக்கிப் பின் ஒருவாறு அடங்குகின்றது.

காய்ந்த மரம் பற்றி எரிகின்ற பொழுது பசுமை நிறைந்த மரங்களையும் தன் வெப்ப நாக்குகள் வெளிப்படுத்திடும் உஷ்ணத்தினால் தகித்து… பின் அதுவும் கனன்று பற்றிக் கொள்கின்றது.

அந்த வனத்திற்குள் வாழ்கின்ற கொடிய ஜந்துக்கள் அப்பொழுது வாழ்வது எங்கே…?

மண்ணிற்குள் மறைந்த கிழங்கை அகழ்ந்து எடுத்திடும் காட்டுப்பன்றியானது பசியின் வேகத்தால் கிழங்கினை அறிந்து கொள்ளும் அறிவு பெற்றது தான்.

இருந்தாலும்…
1.காட்டுத் தீயின் பெரும் நெருப்பில்… பன்றி தன்னைக் காத்துக் கொள்ள ஓடிடும் வேகத்தைக் காட்டிலும் நெருப்பின் வேகம் அதிகம்.
2.மூர்க்கத்தனமான அறிவு அங்கே செயல்படாது ஒழிந்தது.
3.குணங்கள் அறிவுறுத்தும் தன்மைகள் அனைத்திலுமே மனத்தின் பக்குவம் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

திருமுல்லைவாயில் என்னும் இடத்தில் பௌர்ணிகர் ஒருவர் காட்டு வழிப் பாதையில் தாகத்திற்கு அருந்த நீர் கிடைத்திடாத வனப்பகுதியில் நீருக்காக அலைந்து ஏங்கி ஓடிய பொழுது பற்றிக்கொண்ட காட்டுத் தீயானது விரட்ட… ஓடி அலைந்து அவருடைய உயிர் நீங்கப் பெறும் தருவாயில் “வேதாள மாமகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டார்...!”

அவர் அன்று ஒலித்த ஞானத்தின் சுடர்தல்… இன்றும் இந்தக் காற்று மண்டலத்தில் ஓடி உலவுகின்ற கருத்தின் கோர்வைகளப்பா.
1.அப்பொருள்களையே இங்கே உரைக்கின்றோம்…
2.உரைத்துக்கொண்டே வருகின்றோம்.