ஜெபத்தின் சூட்சும ரகசியங்கள் என்ன…?
தன்னைத்தான் உணர்ந்து... தன்னைத்தான் நம்பி... தன்னுள் இறை குணத்தன்மைகளைத் தாய்மை குழந்தையைச் சுமப்பது போல சுமந்து கொண்டிட வேண்டும்.
உலகோதய நடைமுறை வாழ்க்கையில் தனக்கு எத்தகைய இன்னல்கள் பிறரால் ஏற்படுத்தப்பட்டிருப்பினும்… இறை குணத் தாய்மையைச் சுமந்து… அன்பு கொண்டு குழந்தை போல் நேசிக்கும் மனம் கொண்டவன்…
1.ஈசன் வேறல்ல… தான் வேறல்ல என்ற வகையில்
2.தோற்றத்தில் பணிவும் சொல்லில் கனிவும் கொண்டவனே “உபதேசிகனாக” வளர முடியும்
அப்படிப்பட்ட நிலையில் இந்த உலகம் உய்ய வேண்டும்… அனைத்து உயிர்களும் இன்புற வேண்டும்… என்ற முழுமையாக நிலை நிற்றல் போல… அன்பு கொண்ட குருவாகத் தன்னை வெளிப்படுத்தியவர் இயேசு.
1.உள்ளொன்றும் புறம் ஒன்றும் கொண்டு சாதாரண நடைமுறையில் தூசிக்கும் மாக்கள் போல்
2.தன் உணர்வில் தான் வலு கொண்டிட்ட எண்ணத்தை வெளிக்காட்டி
3.உயர்ஞானம் வலுக்கொள்ள வேண்டிய வளரும் ஞானப்பயிர்களின் ஊடே - சூட்சுமமாகப் பேதமையை ஏற்படுத்தி
4.தன்னையே எண்ணித் துதிக்கும் திருக்கூட்டங்களை ஏற்படுத்தி அந்த ஆத்மாக்களைத் தனக்கு அடிமை கொண்டு
5.தன் உயிராத்மா வலுக் கொள்ள வேண்டும் என்ற சுய தேவை காரணமாகத் தான் சக்தி ஈர்த்திட்டே
6.உங்களுக்கு அளித்திடுவேன் என்ற சொல் வாக்கினால் நம்பிக்கையை ஊட்டி
7.அவ்வாய் வார்த்தையே சதம் என்று நம்பி
8.பேரருள் சக்தி பெற்றிட வேண்டிய தன் உயிராத்மாவை எண்ணிடாத ஜீவர்களின் எண்ணங்களை வசப்படுத்தி
9.குரு என்ற பெயரில் உலவிடும் எத்தனையோ ஆத்மாக்கள் போல் அல்லாதபடி
10.உண்மையின் ஜெபத்தை ஊட்ட வந்த அன்பு மகான் இயேசு.
அந்த மகானின் போதனைகளைத் தியான வழியில் கைக் கொள்வோரைக் காண்பதுவும் அரிதாகிவிட்டது.
ஆணவத்தில் இருந்து பேச்சும் மூச்சும் என்று… பற்பல தத்துவ விளக்கங்கள் ஞானவான்கள் என்று கூறிக் கொள்வோர்… “உயர் நிலை பெற வேண்டிய ஜீவர்களைப் பாவிகள் என்று அழைத்து…” ஆவேச உணர்வுகளை ஊட்டும் வழியாகத் தேனிற்குள் மறைந்த கசப்பாக ஊட்டுபவர்கள்… உண்மையின் சாரத்தை உணர்ந்து கொண்டார்களா…?
சிலுவையைச் சுமந்ததும் சிலுவையில் அறையப்பட்டதும்… பின் உயிர்த்தெழுதலும் தான் கொண்ட அனுபவ அவஸ்தையே.
மனித ஆத்மாக்கள் பிறப்பு வளர்ப்பு சாக்காடு என்ற வகையாக உலகினுக்குப் பேருண்மைகளைப் போதனையாக்கிடவே தன்னையே ஆட்படுத்தி உரைத்ததில்…
1.உடல் என்ற சிலுவையில் ஆணவத்தன்மையால் ஆத்ம அறிவு அறையப்பட்ட பின்
2.மரித்தல் என்ற செயலுக்கு ஆணவமும் அகப்பட்டு மாய்ந்து
3.உயிர்த்தெழுதலாக மெய்யறிவும் தோன்றுதல் என்பதிலும்
4.”அறையப்படும் அவஸ்தை வேண்டுமோ…?” (மீண்டும் மீண்டும் உடல் பெறுதல்)
வினாவின் விடையைத் தெளிந்து கொள்…!
1.ஐந்து அப்பங்கள் என்பதே பஞ்சேந்திரியங்கள் செயல்படும் இந்த உடலப்பா…
2.இணை மீன்கள் இரண்டு என்பதே பஞ்சேந்திரியங்களில் செயல்படும் சுவாசமப்பா.
தன்னையே எண்ணி ஜெபித்திடலே சூட்சமம்….!
நானே அப்பமுமாக இருக்கின்றேன்... என்னைப் புசிப்பவனுக்கு எந்தவிதப் பசியும் இல்லை…! என்று உரைத்தவற்றில் தியானமே முதன்மையாக்கப்பட்டது.
உபதேசம் கொள்வோனிடம் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டை விளக்கிட வேண்டாமா…? அதுவும் உண்டு.
என்னையே காட்டிக் கொடுக்கும் சீடன் என்னிடத்திலிருந்து அப்பம் பெறுவாண் என்று காட்டிக் கொடுக்கும் அந்தச் சீடனுக்கு அப்பத்தையும் அளித்து… அந்தச் சீடன் கொண்டிட்ட எண்ணத்தையே சைத்தான் தன் செயலைத் தொடங்கி விட்டான் என்று கூறியதன் பொருள் என்ன…?
ஞானம் கொள்ள வந்தோர் பெற்றது அப்பம். ஞானம் கொண்ட சீடன் பெற்றதும் அப்பம்.
1.உபதேசம் ஒன்று தான்…
2.கொள்ள வேண்டியவன் கொண்டிட்ட “எண்ணத்தின் மாறுபாடு புரிந்ததா…?”
நீரில் மறைந்துள்ள காற்றைக் கொண்டு வாழும் மீனின் தன்மை போல் மனிதன் “தியான எண்ணத்தின் வழி… சுவாசத்தின் வழி…” ஈர்த்திடும் பக்குவம் கூறப்பட்டது.
ஒலி கொண்டு ஒளி பெறும் சூட்சுமமாகச் சப்த ஒலி நாதங்கள் செயல் கொண்டிடும் ஆத்மாவின்… உள் நிறைவாகச் சேமிப்பாகக் காட்டவே “ஏழு” கூடைகளுக்குள் நிரப்பப்பட்ட ஆகாரம்.