ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 15, 2023

நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய்…!

நம் உடல் ஒரு கோவில்… எதன் உணர்வை நாம் எண்ணுகின்றோமோ அது இறையாகின்றது. உணர்வின் தன்மை இறையான பின் மீண்டும் அதை எண்ணும் பொழுது இறையின் உணர்வு செயலாகும் பொழுது அதுவே தெய்வமாகின்றது.

1.வேதனை என்ற உணர்வாகும் பொழுது வேதனைப்படுத்தும் செயல்களையே சேர்த்து…
2.வேதனைப்படுத்தும் தெய்வமாக நமக்குள் குடிகொள்கின்றது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா. இதற்காகத்தான் ஞானிகள் கோவிலை அமைத்தது.

நமக்குள் இருக்கக்கூடிய நூறு உணர்வுகளை ஆலயமாக மாற்றுகின்றனர். கோவிலுக்குச் சென்ற பின் இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று சொல்கின்றனர்.

நமக்குள் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது இங்கே அசுரனாக மாறி விடுகின்றது. பத்துத் தலை இராவணன் என்ன செய்கின்றான்…? சீதாவைச் சிறைப் பிடித்து விடுகின்றான்.

இப்பொழுது கோவிலுக்கு சென்று நீங்கள் சந்தோஷமாக இருங்கள் பார்க்கலாம். என்னிடம் (ஞானகுரு) வருவோர்களை இங்கே நல்லதை எண்ணிக் கேட்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்…!

என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்… என் தொழில் நஷ்டமாகிக் கொண்டே போகின்றது… எல்லாம் கஷ்டமாக இருக்கின்றது என்று இதைத்தான் சொல்கின்றார்களே தவிர…
1.சீதா என்ற அந்தச் சந்தோஷத்தை ஏதாவது நீங்கள் இயக்குகிறீர்களா…?
2.கஷ்டத்தை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றீர்கள்.

எவ்வளவுதான் நான் சொல்லிப் பார்த்தாலும்… இங்கே பிரசாதம் கொடுக்கும் போது பாருங்கள். என் பையன் இப்படி இருக்கின்றான். எல்லாம் நான் நல்லதைத் தான் செய்தேன் ஆனால் என் குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது என்று தான் சொல்கிறார்கள்.
1.கஷ்டத்தை நீக்குவதற்குச் சக்தி கொடுங்கள்…
2.கஷ்டத்தை நீக்கக்கூடிய வழியைக் கொடுங்கள்… என்று யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

கீதையிலே சொன்னது… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்

கஷ்டம் என்ற உணர்வு வரும் பொழுது கண்ணின் நினைவு பையனிடத்தில் செல்கின்றது. நான் சொல்லும் நல்ல எண்ணத்திற்கு இங்கே வருவதில்லை… விலக்கி விட்டு விடுகிறது. அப்பொழுது வேதனையைத்தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள்

கோவிலிலே சிலையைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோம்… “இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…” என்ற எண்ணத்தை எண்ணும் பொழுது…
1.நல்லதைச் செய்யக்கூடிய அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் அந்த நன்மை பெற வேண்டும்
3.இந்தக் கோவிலுக்கு வரும் குடும்பம் எல்லாம் அந்த நல்ல நிலை பெற வேண்டும் என்று எண்ணினால்
4.நம் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் அதுவாக (நல்லதாக) ஆகின்றோம்.

எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் கண்ணிலே காட்டுகின்றது பையனுடைய எண்ணங்களை வைத்துக் கண்ணை அங்கே கொண்டு போய் வைத்துவிட்டுச் சிலையை பார்த்தால் என்ன நடக்கும்…?

அழுகை தான் வரும்

அப்பொழுது நாம் அதுவாக ஆகின்றோம்… மீண்டும் நாம் வேதனையைத் தான் சேர்க்க முடிகிறதே தவிர நல்லதை நாம் பெற முடிகிறதா…? கோவிலை நாம் யாராவது மதிக்கின்றோமா…?

நமக்குள் சூட்சமாக இருப்பதை அறிந்து… அதை எவ்வாறு சீராகச் செயல்படுத்த வேண்டும்…? என்று ஞானிகள் காரணப் பெயரை வைத்து ஸ்தல புராணங்களைக் காட்டி “இந்தக் குணத்தைச் சுவாசித்தால் உனக்கு அது நன்மை செய்யும்…! என்று சொல்கிறார்கள்.

நன்மை பெறுவதற்காகச் சிலையை வடித்துக் காட்டியுள்ளார்கள். பக்தி என்றால் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்… அந்தக் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் கடன் கொடுத்திருப்போம். அவருக்கு நல்ல வருமானம் வேண்டும்… திருப்பிக் கொடுக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பணம் வந்து சேரும்.

ஆனால் மாறாக நாம் எப்படி எண்ணுவோம்…?

கடன் கொடுத்தேன்…! பாவிப்பயல் என்னை ஏமாற்றுகின்றானே… மோசம் செய்கின்றானே…! என்று கோவிலில் வந்து இப்படிச் சொன்னால் என்ன ஆகும்…?

யாருக்கு நாம் கடன் கொடுத்தோமோ… அவனை மேலே எழுந்திருக்க விடாதபடி… சம்பாதிக்க விடாதபடி… கடனைத் திருப்பிக் கட்ட முடியாதபடி… நம்முடைய எண்ணமே அங்கே தடையாகிறது.

அதுதான் நடக்கின்றது… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றது அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது. உங்களால் வாங்க முடிகிறதா…?

இது எல்லாம் கண்ணின் இயக்கங்களைப் பற்றி…
1.நாம் நுகரும் உணர்வுகள் ஆதன் வழி வாழ்க்கை எப்படி நடக்கின்றது…? என்பதை
2.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.