தீமை என்றால் அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி கார்த்திகேயா என்றும் சேனாதிபதி… தீமைகளைத் தடுக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது.
தீமை புகாமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?
தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இந்நேரம் வரையிலும் பேசுகின்றேன் என்றால் அதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். தியானப் பயிற்சியாகவும் கொடுக்கின்றேன்.
இதை எல்லாம் பதிவாக்கிய பின் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்தால் அந்தச் சக்தி “எண்ணியவுடன் உங்களுக்குக் கிடைக்கும்...”
ஆனால் சிலர் என்ன செய்கின்றார்கள்…?
உபதேசம் கேட்கும் வரையிலும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் இங்கே நாம் சொன்ன உணர்வுகளைப் பதிவாக்காது விட்டு விடுகிறார்கள். (பதிவானால் தான் மீண்டும் நினைவுக்கு வரும்)
“தியானம்…” என்று சொன்னதும் நினைவுகள் எங்கெங்கோ போகிறது என்பார்கள். என் பையன் இப்படிச் செய்கின்றான்… தொழிலில் நஷ்டம் என்று பல எண்ணங்கள் வருகிறது. தியானத்தில் உட்கார்ந்தாலும் என்னால் முடியவில்லை என்பார்கள்.
ஏனென்றால் தியானத்தில் இருக்கும் பொழுது பாருங்கள்… மனக்குடைச்சல் வரும்… இல்லாத சங்கடம் எல்லாம் வரும்.
அதற்குத் தான் இங்கே உபதேசிக்கும் போது கூர்ந்து பதிவாக்குங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம். உபதேசத்தன் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை இழுப்பதற்காக வேண்டி இதைச் சொல்கின்றோம்.
இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானிக்க வேண்டும்.
இப்படித் தியானித்து நாம் பழகிக் கொண்டோமென்றால் பிறர் சாபமிடுகின்றார்கள் சண்டையிடுகிறார்கள் என்று பார்க்கும் போது அதை நுகராமல்
1.உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்தச் சக்திகளைக் கவர்ந்து
3.மீண்டும் கண்ணின் நினைவை உயிரிடம் புருவ மத்தியில் கொண்டு வந்து அதன் வழியாக இழுங்கள்.
அப்போது தீமை செய்வோர் உணர்வு நமக்குள் ஈர்க்காது… நம்மை இயக்காது…! இந்த மாதிரித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீய வினைகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி நோயாகாதபடி தடுக்க வேண்டும்.