கொடூரமான புலி மற்ற சாந்தமான உயிரினங்களை அடித்துக் கொல்வது போல்… சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடலின் உறுப்புகளையும்… அதை உருவாக்கிய அணுக்களையும் கொன்று புசித்துவிடும்..
இதிலிருந்து மீள்வதற்கு நம்முடன் வாழ்ந்து வளர்ந்த முன்னோர்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தி… அந்தப் பேரருள் உணர்வுகளை நம் உடலுக்குள் உள் செலுத்தித் தீமையான நிலைகளை மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.
கோடிச் செல்வம் தேடினாலும்… அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை. ஏன்…! இந்த உடலும் நம் கூட வருவதில்லை. ஆனால்
1.பேரருள் என்ற உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றப்படும் பொழுது
2.ஒளியின் உணர்வாக நாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்.
3.”இதை விரும்புவோர் தான் செயல்படுத்த முடியும்…”
உடல் இச்சை கொண்டால் பலன் இல்லை…!
அருள் உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் எடுத்து வளர்த்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்து செயல்படும் தன்மையும்… தேடிய செல்வத்தைக் காத்திடும் நிலையும்… இந்த உடலைச் சீராக வைத்துக் கொள்ளும் நிலையும் வரும்.
“செல்வத்தை நாம் தேட வேண்டியதில்லை… அந்தச் செல்வமே நம்மிடம் வந்து சேரும்…” ஆனால் செல்வம் குவிகின்றது என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால் நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் உடலின் பற்றுக்கே வந்து விடுகின்றது.
ஞானத்தினை நாம் வளர்க்கும் பொழுது அருள் ஞானத்தின் வழிகளில் நாம் சென்று இருளை அகற்றி மெய்ப்பொருளைக் காண முடியும்
ஆகையினால் காலையில் ஐந்தரைலிருந்து ஆறரை மணிக்குள்
1.தினசரி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுத் தீமைகளை நீக்கிப் பழகுதல் வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நாள் முழுவதும்… மற்றும் அவ்வப்போது சேரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாக… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி அருள் வழியில் நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மையாக… இந்த இல்லற வாழ்க்கையில் தெளிந்த மனம் கொண்டு வாழ முடியும்.
வேதனை என்ற விஷமோ கோபம் என்று கார உணர்வோ பகைமையான உணர்வுகளோ சாபம் என்ற உணர்வுகளோ நம்மைத் தாக்கப்படும் பொழுதெல்லாம்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து நம் உடலுக்குள் அதை உட்செலுத்தித் தீமைகளை அவ்வப்பொழுது மாற்றிக் கொண்டால் பகைமைகள் வளராது.
தீமை என்ற நிலையே நம் உடல் அணுக்கள் பெறாதபடி தடுத்துக் கொள்ள முடியும். துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடலில் அணுக்களாக உருவாக்கிக் கொண்டால்… நம் சொல்லும் செயலும் புனிதம் பெறவும்… நம் உடலில் தெளிந்த நிலையும் உருவாகும்.
1.அந்தத் துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம் நமக்குள் பெருகும் போது
2.உடலில் விளைந்த சூட்சும சரீரம் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
3.நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வது உறுதி.