ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 8, 2023

செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?

நாம் எடுக்கும் எண்ணங்கள் கொண்டு அவை உணர்வாக ஆனாலும் உடலுக்குள் சென்று அணுவின் தன்மையாக ஆன பின்
1.சுவாசித்த உணர்வுக்குள் மோதல்கள் எப்படி…?
2.இந்த உடலில் மனக்கலக்கங்கள் சஞ்சலங்கள் வெறுப்புகள் வேதனைகள் எப்படி எல்லாம் வருகின்றது…?

வீட்டில் செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?

தசரதன் (கைகேயியின் துணையால்) மற்றவர்களை அடக்கித் தன் சாம்ராஜ்யத்தை வெற்றி பெறச் செய்தான். இருந்தாலும் அதே உணர்ச்சிகள் இங்கே “கூனி” கைகேயியிடம் என்ன சொல்கிறது…?

1.இராமனுக்குப் பட்டம் சூட்டி விட்டால்… நீ வேலைக்காரியாக ஆகிவிடுவாய் என்று “உள் மனது… உணர்த்துகிறது…!” என்பதை
2.அதாவது அப்படித் தோன்றும் உணர்வுகளை உருவமாக்கிக் காவியங்களைப் படைத்து
3.கருத்தினை மக்களைத் தெளிவாக்குவதற்காகக் கூறப்பட்ட இந்த உபாயத்தை
4.அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்துத் தெளித்து விட்டனர்
5.அந்த உண்மையின் மூலக்கூறை அறிந்தோர் இந்த உடல் இச்சைக்குத் தான் பெற முடிந்தது.

தான் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும்… மற்றவர்களை அடக்க வேண்டும்… என்ற உணர்வை இவரகள் எப்படிப் பெற்றானோ அதே உணர்ச்சி தான் தசரதச் சக்கரவர்த்திக்கும் வருகின்றது.

தன் மகனை நல்லவனை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆனால் தன் உடலுக்குள் மற்றவர்களை துன்புறுத்திய உணர்வுகள் இந்த உயிரோடு வளர்ந்து… பத்தாவது நிலை அடையும் மனிதனாகத் தான் இருக்கின்றது.

ஆனால் எல்லாம் இணைந்து வரப்படும் போது என்னாகின்றது…?

இரண்டு மனைவி இருக்கக்கூடிய வீட்டிலே சக்களத்திப் போராட்டம் வருகின்றது. ஆனால் உயிரோடு (உயிர் தான் தசரதச் சக்கரவர்த்தி) சேர்த்துப் பலவிதமான உணர்வுகள் வரும் பொழுது போராட்டம் எத்தனை வரும் எப்படி இருக்கும்…?

ஒரு கணவனுக்கு இரண்டு மனைவி இருந்தால் எப்படி இருக்கும்…? மூன்று மனைவி வைத்திருந்தால் எப்படி இருக்கும்…?

அது போல் தான்
1.உயிர் என்று நிலைகள் வரும் பொழுது இதனோடு சேர்த்து
2.அத்தனை சக்திகளும் (மனைவியாக) சேர்த்து….இந்த உடலையே இயக்குகின்றது
3.அதனதன் உணர்வுகள்… அது அது பெறுகின்றது… அதிலே எதன் உணர்வு வலு ஓங்குகிறதோ அதன் வழி தான் நடக்கின்றது.

இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றான் தசரதன்.

ஏனென்றால் இராமன் அன்பு கலந்தவன் அரவணைக்கக்கூடியவன் பண்பு கொண்டவன் பரிவானவன் அறவழியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பொறுப்புடையவன் பொறுமையுடையவன் சிந்தித்து செயல்படுபவன் என்ற நிலையில் இருப்பினும் இராமனுக்குப் பட்டம் சூட்டுவதைக் கைகேயி விரும்பவில்லை.

அவனுக்குப் பட்டம் கிடைத்தால் என் மகன் பரதன் வேலைக்காரன் ஆகிவிடுவான். அவன் வேலைக்காரன் ஆனால் நானும் வேலைக்காரியாக ஆகிவிடுவேன் என்ற உணர்வுகள் அங்கே தோன்றுகின்றது

தசரதனுடைய எண்ணம் என்ன…? அடுத்த இராஜ்யம் வளர்ந்து விட்டால் அது தன்னை அடக்கிவிடும். அதற்குப் பதில் அவனை வலு இழக்கச் செய்து விட்டால் தனக்கே அந்த சாம்ராஜ்யம் சொந்தமாகின்றது.
1.அவன் எண்ணிய இந்த உணர்வின் சக்தி மனைவியாக இப்படி வருகின்றது
2.சாம்ராஜ்யத்தை ஆள்வதற்காக தசரதன் அதைச் செய்தாலும்
3.இவனுக்குள் இருக்கும் சாம்ராஜ்யத்தை இதுவே வந்து ஆளத் தொடங்குகிறது.

மற்றவர்களைத் துன்புறுத்தும் உணர்வு கொண்டு அதை ரசித்தான். ஆனால் இவன் உடலுக்குள் இவனைத் துன்புறுத்தும் தனமையாக அந்த “மனப்போராட்டம்” வருகின்றது.

ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் உணர்வுகளால் உடலுக்குள் எத்தனை போர் முறைகள் வருகின்றது என்பதை இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது

அந்தக் காவியத்தின் கருத்தின்படி
1.ஒரு அணுவின் தன்மை எவ்வாறு செயல்படுகிறது…? என்பதை
2.பல உபதேசங்கள் வாயிலாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இணை சேர்த்து உங்களுக்கு விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

இது உங்களுக்குள் வளர்ந்தால் அதற்குண்டான ஞானம் கிடைக்கும். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியாக உருவாக்குகிறேன்.

பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்றால் இந்த உடலுக்குள் எத்தனை போர் முறைகள் வருகின்றது…? அதைச் சமாளிக்கக்கூடிய சக்தியும் அதற்குண்டான அருள் ஞானமும் உங்களுக்குத் தேவை.

அதற்குத் தான் இந்த உபதேசம்..!