ஸ்தூல தேகம் கடந்து சூட்சும தேகத்தில் வாழும் தன்மை நிலை பெற்று விட்டால் சரீரம் கொண்டு துன்பங்களாக உணரும் தன்மைகள் அனைத்தும் துன்பங்களாகத் தோன்றிடாது.
அத்தகைய பாக்கியம் பெற்ற மகான் தான் இயேசு.
வாழ்க்கை நடைமுறை மோதலில் ஏற்படும் உரையாடலில் உணர்ந்திடும் குணங்களையே பெரும் துன்பங்களாகப் பெரிதுபடுத்தியே… எண்ணத்தின் கடுமையாகச் சொற்களின் விஷ வித்துக்களை விதைத்திட்டால்… அதை உரைப்பவனும் அந்த உரையைக் கேட்பவனும் விதைத்திட்ட விதையின் பலனை அறுவடை செய்வானப்பா…!
அதைத் தான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்று சொல்வது.
இயேசு மகான் சுட்டிக் காட்டியது அன்பு வழி வாய்மை. சொல்லும் சொல்லிலும் நிதானம் தேவை.
1.உலகோதயத் துன்பங்கள் ஞானிகளுக்கு மக்களால் ஏற்படுத்தப்படும் தன்மைகளில்
2.தேகம் கடந்து வாழும் தன்மையால் ஞானிகளுக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.
மெய்ஞானத்தின் முழுமைத்துவம் பெற்றிடும் செயலில் மனத்தின் பக்குவமே மெய்ஞான விழிப்பாகச் செயல் கொண்டு நல்லாக்கம் பெறுதலே உண்மை ஞானத்தின் சிறப்பு.
தனக்கு இழைத்திட்ட துன்பச் செயல்களைக் கூட… கல்வாரி மலை மீது சிலுவையில் அமைக்கப்பட்ட காலத்தில் கூட…… மன்னிக்கும் மனம் படைத்த இயேசுவின் செயலை
1.அவர் பெற்று வளர்ச்சிப்படுத்திக் கொண்ட அவரின் சக்தியை
2.தாமும் பெற்றிட முடியும் என்ற எண்ணத்தைக் கொள்வோர் யாரும் இல்லை.
சூட்சும உடல் வாழும் வாழ்க்கை வாழ்ந்து காட்டிட்ட மகான்தான் இயேசு. தியானத்தின் வழியைச் சூட்சுமமாக மறைபொருள் தன்மையில் உரைத்திட்ட போதனைகள்… அவரால் கொண்ட கருத்தின் தெளிவு.
எழுத்தின் வடிவத்தில் சமுதாய நலத்திற்கு அவர் கொண்டிட்ட எண்ணத்தின் சப்த அலைகளை… நேரடியாக ஈர்த்திடும் பக்குவச் செயல் அனைத்தும்… காற்றினில் ஓடிடும் ஒலி அலைகளை… அவர் காட்டிய போதனைகளைப் பெறுவது என்பதெல்லாம் “தியான ஈர்ப்பின் மூலம் தான் பெற முடியும்…”
“உயிர்த்தெழுதல்” தத்துவத்தையே சூட்சும உடல் வாழும் தன்மை கொண்டிட்ட செயலாகத் தத்துவத்தின் உண்மைப் பொருள் உணர்த்தப்பட்டது. அது எந்த வகை…? என்ற வினாவுக்கு “ஆத்ம வலு கொண்டிடும் மூலசக்தியே” நிலைக்களன் (சான்று).
உயிர் ஜீவன் கொண்டிட்ட இந்தச் சரீரமே சிலுவையாக…
1.உடல் என்ற சிலுவையில் பொருந்த அமைவு பெற்ற ஆத்மா
2.சக்தி வலுக் கொண்டு மூல சக்தியாகக் கலந்துறவே எழுதல் என்பது சூட்சுமம்.
தான் கொண்ட எண்ணத்தின் வலுவைப் பிறர்க்கும் ஊட்டிடவே… தான் தேடிக் கண்டு கொண்ட நல்லது போன்றே மற்ற மனித ஜீவன்களும் தேடிக்கொள்ள வேண்டும் என்று
1.ஆத்மாவை மறைபொருளாகச் சுட்டிக்காட்டி…
2.தேடிக் கண்டு கொள்பவன் கொள்ள வேண்டிய எண்ணத்தில் சிரத்தை இருந்தால்
3.“தட்டியவன் திறப்பான்…
4.கேட்பவன் கிடைக்கப் பெறுவான்…
5.தேடியவன் கண்டு கொள்வான்…” என்பதில்
6.எண்ணத்தின் செயல்பாட்டிலே “சிரத்தையே அதிமுக்கியம்…” என்று உரைத்தவர் இயேசு.
அவரைக் கூட்டம் கூட்டமாகப் பின் தொடர்ந்து வந்து சூழ்ந்தவர்களுக்கு அவரால் போதனை அளிக்கப்பட்டது என்றும்… குழந்தைகளும் பெண்களும் ஆடவர்களும் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் பசியோடு இருந்தவர்களுக்காக அப்பமும் மீனும் அதை இரண்டையும் தூபப்படுத்தி ஆசீர்வதித்து… அனைவரும் உண்ணும் மட்டும் பகிர்ந்தளித்து… சாப்பிட்ட உணவின் மீதம் ஏழு கூடைகளில் நிரப்பப்பட்டது என்று “விவிலிய நூல்…” கூறுகின்ற பொருளின் உண்மையை அறிந்தவர்கள் யார்…?
அதைப் பின்பற்றுபவர்களும்… அதைக் கடைபிடிக்கிறோம் என்று சொல்பவர்களும்… பெற்றிடும் திறன் இல்லாது அது மாற்று நிலை பெற்று விட்டதப்பா.
1.நானே அப்பமாக இருக்கின்றேன்… என்னைப் புசிப்பவன் நித்திய ஜீவனுமாக இருப்பான்…! என்று
2.அவர் உரைத்திட்ட சொல்லிலும் மறைபொருளாகவே கூறப்பட்டது.