ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2023

நான் தவறு செய்துவிட்டேன் என்று உணர்வதுமில்லை… ஒத்துக் கொள்வதுமில்லை

ஒரு சமயம் குருநாதரும் நானும் (ஞானகுரு) பழனிக்குப் போவதற்காகப் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகிலே வந்து கொண்டிருந்தோம். அப்போது குருநாதர் என்ன செய்தார் தெரியுமா…?

ஒரு பஸ் வேகமாக வந்து கொண்டிருக்கின்றது. திருப்பத்திலே (CORNER) அது திரும்பும் பொழுது குறுக்கே புகுந்தால் எப்படி இருக்கும்…? என்ன பண்ண முடியும்…?

நாங்கள் இரண்டு பேருமே பஸ்ஸின் குறுக்கே புகுந்தோம். ஆனால் இவருடைய சக்தியால் பிரேக் போட வைத்து விடுகின்றார்… டிரைவரும் பிரேக் இடுகின்றான்… வண்டி நின்று விடுகின்றது.

அடுத்தாற்போல் அந்த டிரைவர் என்ன சொல்கிறார்…? யோவ் கிழட்டுக்… என்று கெட்ட வார்த்தையாகச் சொல்லி குருநாதரை திட்டுகின்றார்.

நீ வயசுப் பையனாக இருக்கின்றாய்… கிழவனுக்குத் தான் புத்தி இல்லை நீயாவது புத்தி சொல்லலாம் அல்லவா…! என்று டிரைவர் என்னையும் திட்டுகின்றான்.

கொச்சை வார்த்தைகளில் குருநாதரும் டிரைவரும் மாறி மாறிப் பேசுகின்றார்கள்… ஒருவரை ஒருவர் திட்டுகின்றார்கள்.

பாருடா…! டிரைவர் என்னை எப்படித் திட்டுகின்றான் என்று…! குருநாதர் சொல்கின்றார்.

அந்தத் திட்டும் உணர்வுகள் “நாம் செய்தது தப்பு” என்று தெரிகின்றது. ஆனால் டிரைவர் அசிங்கமாகத் திட்டும் பொழுது மட்டும் ரோஷம் வருகின்றது. இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

நாம் செய்தது தப்பு… இருந்தாலும் கௌரவப் பிரச்சினை…! பஸ்ஸில் இருக்கும் அத்தனை பேர் முன்னாடி கேவலமாகப் பேசுகின்றான் என்ற நிலையில் “என்னய்யா செய்ய வேண்டும் என்று சொல்கின்றாய்…?” என்று நானும் கோபமாக டிரைவரிடம் பேசுகின்றேன்.

டிரைவர் அதற்குப்பின் பஸ்ஸை ஸ்டார்ட் செய்கின்றான். வண்டி நகரவில்லை… நகர மாட்டேன் என்கிறது.

என் புத்தியைப் பார்த்தாய் அல்லவா… அவனை வண்டி எடுக்க விடாமல் நான் நிறுத்தி விட்டேன் அல்லவா. உன் புத்தி என்ன செய்கின்றது…? அவனை உதைக்க வேண்டும் என்று விரும்புகின்றாய்.

என்னிடம் சக்தி இருக்கின்றது என் புத்தியில் அவனை நிறுத்துகின்றேன் நீ உன் புத்தியில் அவனை உதைக்க வேண்டும் என்று திட்டுகின்றாய் ஆனால் நாம் இரண்டு பேரும் குறுக்கே சென்றது தவறா இல்லையா…?

இதையெல்லாம் அனுபவத்தில் கொண்டு வருகின்றார் குருநாதர்.

“தப்புதான் சாமி…” என்று நான் சொல்கின்றேன். ஆனால் நான் என்ன சாமி செய்தேன்…? நான் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் தானே என்னைக் குறுக்கே இழுத்தீர்கள் என்று சொல்கின்றேன்.

நான் எப்பொழுதடா உன்னை இழுத்தேன்…? நீ தான்டா என்னை இழுத்தாய்…! என்று மீண்டும் வம்பிழுக்கின்றார்… மடக்கிப் பேசுகின்றார்.

பஸ் நகரவில்லை என்று சொன்னவுடனே அவன் ஸ்டார்ட் செய்து பார்க்கின்றான் முடியவில்லை. குருநாதர் சிரிக்கின்றார்.

என்னைத் திட்டினான்… அதனால் என் சக்தியால் வண்டியை நிறுத்தி விட்டேன். அதே போன்று நீயும் இன்னொரு வண்டியை நிறுத்துகின்றாயா…? என்று என்னிடம் கேட்கின்றார். நீ இன்னொரு பஸ்சுக்கு முன்னாடி போடா…! பஸ் நிற்கின்றதா இல்லையா பார்க்கலாம்…! என்கிறார்.

என்னைக் கட்டாயப்படுத்தி இன்னொரு பஸ்சுக்கு முன் குறுக்கே போகும்படி தள்ளுகின்றார். அடுத்த பஸ்ஸுக்குக் குறுக்கே நான் சென்றதும் அதுவும் நின்று விட்டது. அதுவும் நகர மாட்டேன் என்கிறது.

இப்படிச் செய்துவிட்டார் குருநாதர். நீ எப்படிடா அதைச் செய்தாய்…? என்று என்னிடம் கேட்கின்றார். அவரே செய்துவிட்டு என்னை இப்படிக் கேட்கின்றார்.

வண்டியை எடுக்க முடியாது… ஓட்ட முடியாது…! நீ அவனிடம் சொல் என்று சொல்கின்றார். ஸொன்ன பின் அந்த வண்டியும் ஓடவில்லை.

வண்டி ஓடவில்லை என்ற உடனே… அந்த இரண்டு டிரைவரும் இது என்னடா…? இரண்டு கிரகங்களும் சேர்ந்து கொண்டு ஏதோ மந்திர வேலை செய்கின்றார்கள். வண்டி நகரவில்லை என்று பயப்படுகின்றனர்…!

ஒரு பக்கம் எனக்கு பஸ்ஸை நிறுத்தி விட்டோம் என்று சந்தோஷம் வருகிறது. இன்னொரு பக்கம் அவர்கள் இருவருமே திட்டுகின்றார்கள் ஏதோ மந்திர தந்திரங்கள் செய்து பாவிகள் நம்மை வேதனைப்படுத்துகின்றார்கள் என்று திட்டுகின்றார்கள். காதிலே அதுவெல்லாம் கேட்கின்றது.

சந்தோஷமாக வரும் பொழுது இப்படி வருகின்றது ஆனால் அவர்கள் திட்டும் பொழுது அதைக் காதிலே கேட்ட பின் அவர்கள் கை கால் வராதபடி செய்தால் என்ன…? என்ற வேகம் எனக்கு வருகிறது.

நாம் செய்தது தப்பு…! ஆனாலும் அவர்களைக் கை கால் வராதபடி நாம் செய்தால் என்ன…? என்று எனக்கு இந்த உணர்வு வருகின்றது.

அப்போது தான் என்னிடம் கேட்கின்றார் குருநாதர். ஏண்டா…? தப்பு நீ செய்கின்றாய் ஆனால் உன்னுடைய எண்ணம் எப்படிப் போகின்றது பார்…! இப்படி ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் உணர்ச்சிகள் எப்படி ஓடுகின்றது…?

1.தன் உடலைக் காக்க… கௌரவத்தைக் காக்க
2.இந்த உணர்வின் எண்ணங்கள் தவறைத் தயங்காதபடி செய்யச் சொல்கின்றது.

இதே உணர்வின் தன்மை உன் உடலில் ஏற்பட்டால் அவர்கள் இடும் சாப அலைகள் சாதாரணமானதல்ல.

அவன் படும் வேதனை உணர்வுகள் அவனில் விளைந்தது உன் செவிகளில் பட்டு இப்படிப் பேசுகின்றானே என்று வேகமாகத் தாக்குகின்றது உன்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது… கலந்தது அணுக்களாக விளைகின்றது.

இன்று உனக்குத் தெரியாது… ஆனால் அடுத்து என்ன ஆகும் தெரியுமா…? என்று இந்த உணர்ச்சியின் போர் முறைகள் உள்ளுக்குள் கலக்கங்கள் ஏற்படுவதை அப்படியே உணர்த்துகின்றனர் இன்றைய செயல் நாளை என்ன ஆகும்…?

1.உடலுக்குள் நல்ல அணுக்களுக்கும் நுகர்ந்த அணுக்களுக்கும் போராட்டங்கள் ஆகி
2.உன் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அது பலவீனம் அடையப்படும் பொழுது
3.மூச்சு இழுக்கின்றது… திணறலாகின்றது நடக்க முடியவில்லை ஓட முடியவில்லை வேலை செய்ய முடியவில்லை என்று
4.இத்தனை நிலையும் உனக்குள் நாளை வரும் என்று சொல்கின்றார்… அங்கே அப்படியே காட்டுகின்றார்.

இது எதனால் வருகின்றது…?

நீ தவறு செய்தாயா…? அவன் தவறு செய்தானா…? இந்தச் சந்தர்ப்பம் உன்னைத் தவறு செய்யும்படி நான் தூண்டினேன். அதன் உணர்வின் தன்மை இவ்வாறு ஆகிவிட்டது.

இப்படி வரும் பொழுது அவருடைய நிலை என்ன ஆகிறது…? நம்முடைய சந்தர்ப்பங்கள் பின் விளைவு என்னென்ன ஆகிறது…? இதற்கு நான்கு மணி நேரம் உபதேசங்களைக் கொடுக்கின்றார் குருநாதர்.

பதட்டமும் பயமும் எனக்குள் வருகின்றது.
1.தான் பேசியது சரியா இல்லையா என்று
2.உள் மனதில் இப்படி வினாக்கள் தூண்டும்படி உணர்த்திக் காட்டுகின்றார்.

ஏன் இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நாம் நல்லதைத் தான் செய்து கொண்டிருப்போம். திடீரென்று ஏதாவது ஒன்று வந்துவிடும்.

நாம் தவறு செய்திருப்போம் ஆனால் நாம் தப்பிப்பதற்காக அடுத்தவனைக் குற்றவாளி ஆக்குவதற்கு என்ன வேலையோ அதை எல்லாம் செய்வோம்.
1.அடுத்தவனைக் குற்றவாளி ஆக்கத் தான் பார்ப்போமே தவிர
2.நாம் தவறு செய்தோம் என்பதை உணர முடிவதில்லை.

ஆக சக்தி இருக்கிறது என்றால் அதை வைத்து நீ அடுத்தவர்களுக்குத் தப்பு செய்யத்தான் முடியுமே தவிர நல்லதை உன்னால் உருவாக்க முடியாமல் போகின்றது என்று அங்கே உணர்த்திக் காட்டுகிறார்.

இந்த உடலைக் காக்க உணர்வின் தன்மை ஆனால் தவறை நீக்கி அவன் நல்வழி வரவேண்டும் என்று தான் தவறு செய்து விட்டோம் என்ற இந்த உணர்வை மாற்றி
1.என்னை அறியாத நிலைகள் இருந்து விடுபட வேண்டும்.
2.அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணினால் நமக்குள் வளரும் தீமையை முதலில் தடுக்கலாம்.

சாதாரண மனிதனாக இருந்தால் இது முடியாது.

நல்ல நிலைகளை உருவாக்க வேண்டும் என்றால் தியானத்தின் வழிகளில் வரப்படும் போது இது போன்ற சந்தர்ப்பம் நிகழ்ந்தால் ஒருவனுக்குத் தொல்லை கொடுக்கவோ… பிறரை இம்சிக்கவோ அல்லது இது போன்ற மற்ற உணர்வுகள் தோன்றினால் அதை எதைக் கொண்டு அடக்க வேண்டும்…?

அங்குசபாசவா…! துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த நஞ்சை வென்ற உணர்வுகளை வைத்துத்தான் அடக்க வேண்டும். இப்படித்தான் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் நமக்குள் வரும் தீய விளைவுகளையும் நம்மை அறியாத உடலில் ஆட்டிப்படைக்கும் நோய்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.
1.பண்பு உள்ளவர்களாகவும் நாம் மாற முடியும்
2.பிறரைக் காத்திடும் சக்தி பெற்றவர்களாகவும் வாழ முடியும்.