அந்தந்தக் கால கட்டங்களில் குருநாதர் காட்டிய மெய் உணர்வுகளை அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காகத் தான் யாம் (ஞானகுரு) சொல்லி வந்தது. அதை ஒன்று சேர்த்துப் பதிவாக்கிக் கொண்டு வந்தால் உங்களுக்குள் உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தியானத்திற்கு முன்
1.பாலோ அல்லது தண்ணீரோ அல்லது ஒரு பதார்த்தத்தை வைத்து
2.தியானம் முடிந்த பின் அந்தப் பொருளை எடுத்து அதில் என்ன வாசனை வருகிறது என்று பாருங்கள்…?
3.நல்ல மணங்கள் அதிலிருந்து வரும். சுவாசிக்கும் பொழுது உங்களுக்குள்ளும் அருள் மணம் கிடைக்கும்.
ஒவ்வொருவரும்… ஒவ்வொரு ஊரிலும்… துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை உலகம் முழுவதும் பாய்ச்சி உலக மக்கள் மன பேதமின்றி இன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகள் அருள் சக்தியும் துருவ மகரிஷிகள் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களிலே படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் நலம் பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது
1.ஆங்காங்கே இருக்கக்கூடியவர்கள்… உலகில் எங்கிருந்து தியானம் செய்பவர்களும் இந்த உணர்வுகளை வானிலே பாய்ச்சுங்கள்.
2.மேகங்களைக் கூட்டி மழை பெய்ய வேண்டும் என்று தியானியுங்கள்
3.இப்பொழுது உபதேசிக்கக் கூடிய உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் படரப்பட்டு
4.அந்த மழை நீர் மூலமாக தாவர இனங்களிலே இணைந்து அருள் தாவர இனங்களாக விளையும்.
ஆனால் அதே சமயத்தில் மனித உடலில் எத்தனை வேதனைப்பட்டோமோ நோய்களாக வந்து நம் உடலை வேதனைப்படச் செய்கின்றதோ இந்த உணர்வெல்லாம் என்ன செய்கிறது…?
நாம் எந்தத் தாவர இனத்தை உணவாகப் புசித்தோமோ… நம் உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படும் உணர்ச்சிகள் தாவர இனங்களில் பட்டு அந்தத் தாவர இனத்தையே உண்டு விடுகின்றது. நமக்கு உணவில்லாது ஆக்கி விடுகின்றது.
உரத்தைப் போட்டுப் பூச்சி மருந்தைப் போட்டு பயிர்களை வளர வைத்து மகசூல் எடுக்கலாம் என்று கொண்டு வருவதற்கு முன்
1.நாம் வெளிப்படுத்தக்கூடிய வேதனை என்ற விஷத்தின் தன்மை
2.தாவரங்களில் அதிகமாகப் படர்ந்து விஷத் தாவரங்களாக அது விளைந்து
3.அதையே நாம் மீண்டும் உணவாக உட்கொள்ளும் நிலை ஆகிவிடும்.
ஆகையினால் இதை மாற்றி அமைக்க முதலில் சொன்ன மாதிரி அகஸ்திய மாமகரிஷிகள் உணர்வுகளை வானிலே பாய்ச்சி மேகங்களைக் கூடச் செய்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்று மேகங்களில் எண்ணத்தைச் செலுத்தினால் அந்த மழை நீர் தாவரங்களில் பட்டு இணையும்
1.காரணம் எல்லாவற்றிலும் காந்தப் புலனறிவுகள் உண்டு.
2.அந்த அலைகளை எடுத்து நாம் பாய்ச்சி அதற்குள் இணைக்க முடியும்.
எப்படி ஒரு அணு பட்டு அந்தச் சத்தினை நுகர்ந்து அதை வைத்து உடல் பெற்றதோ இதைப்போல இதே சத்தினை நுகர்ந்து அதன் உணர்வின் தன்மை மலமாக்கி அந்தத் தாவர இனங்களுக்கு நாம் பாய்ச்சும் போது நல்ல சத்தாக மாறும்.
பயிரினங்களில் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று இது ஒரு கூட்டமைப்பாகப் பாய்ச்சிப் பாருங்கள்.
1.உங்கள் வயலை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்… பயிரினங்களை நினையுங்கள்
2.அதற்குள் அருள் சக்திகளைப் படரச் செய்யுங்கள்… நல்ல அணுக்கள் உருவாகி நல்ல வளர்ச்சி பெறும்.
வைரஸ் என்ற அணுக்கள் நம் உடலில் பாய்ந்தால் நம்மைக் கொல்கிறது. நம் உறுப்புகளைக் கொல்லக்கூடிய அந்தத் தீய அணுக்களைக் கொன்று நல்ல உறுப்புகளை உருவாக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு “அத்தகைய வைரஸ்களாக… மாற்று மருந்தாக உருவாக்குகின்றார்கள்….”
இதே போல் மனிதனான நாம் அருள் உணர்வுகளை மழை மேகத்துடன் கலந்து விட்டால் நல்ல அணுக்களாக உருவாக்க முடியும்.
ஆனால் நாம் இன்று உலகெங்கிலும் என்ன செய்கின்றோம்…?
தவறான உணர்வுகளையும் வேதனைப்படும் உணர்வுகளையும் மனிதனுக்கு மனிதன் அழிக்க வேண்டும்… மற்றவனைக் கொன்று அவனை வீழ்த்தி விட்டு அவன் செல்வத்தை அபகரித்துத் தான் வாழ வேண்டும்… என்ற உணர்வுகள் தான் அதிகமாகப் படர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த உணர்வுகள் எல்லாம் தாவரங்களில் பட்டால் பயிரினங்களும் அழிகின்றது. உரத்தையும் மருந்தையும் போட்டு விளைய வைத்தாலும் அதை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலுக்குள் விஷத் தன்மை பெருகி நல்ல குணங்களைக் கொன்று குவித்துவிடும் (அது தான் இன்று இயங்கிக் கொண்டுள்ளது)
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் மீள்தல் வேண்டும்.
1.மற்றவர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி மேகங்களைக் கூடச் செய்து அருள் மழையாக பொழிய வேண்டும்…
2.ஊர் செழிக்கட்டும் நாடு செழிக்கட்டும் என்று இது போன்று நாம் செய்து பழக வேண்டும்.
விவசாயம் செய்பவர்கள் இதைப் போன்று செய்து பழக வேண்டும் உங்கள் நிலத்தை உற்றுப் பார்த்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
2.உங்கள் கண்ணின் நினைவை அங்கே உற்றுப் பார்த்து அந்தச் சக்திகளைப் பாய்ச்சுங்கள்.
3.பயிரினங்கள் செழித்து வளர வேண்டும் என்று நினைவை உணர்வை பாய்ச்சுங்கள்… உங்கள் எண்ணம் அங்கே ஊடுருவும்.
ஏனென்றால் தாவரங்களில் விளைந்ததை உணவாக எடுத்துத் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். அந்த உணர்வின் சத்து தான் நமக்குள் எண்ணங்களாக இருக்கின்றது அந்த எண்ணத்தைக் கொண்டு அருள் உணர்வுகளை நாம் பாய்ச்ச முடியும்
மனிதர்கள் நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்… அவசியம் நாம் இதைச் செய்ய வேண்டும்.