ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2023

எரியடி தண்டம்

இன்றைய மனித வாழ்க்கை புற வாழ்க்கைச் செயலில் அதி ஆவல் எனும் பற்று கொண்டு… பிறப்பு எனும் சுழற்சி வட்டத்தில் உழல்கின்ற தன்மையாக உழன்று கொண்டுள்ளது.

ஆனாலும்… “உயிர் துடிப்பு எனும் ஜீவன்…” வலுக்கொண்டிடும் வளர்ப்பைச் செயலாக்கிடும் அக வாழ்வு இன்பத்தின் சுரப்பாகப் பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்திட… வானியலாக வழி அறிந்து உயர்ந்திடும் செயலாக்கம் தான் என்ன…?

உடல் கடந்து… அகம் ஜெபிக்கும் உணர்வெண்ணத் தியானத்தில்… மேலும் ஓர் படி அறிந்ததைத் தெளிதலே சிறப்பு.

காட்சி:- மதகு நீர் வற்றிய வண்டல் மண்ணும்… கோடையின் வெப்பத்தில் ஆற்றின் மணல் ஊற்றில் சுரக்கின்ற நீரை மக்கள் கொண்டு செல்லுதல்.

இது ஆத்ம பலம் அறிவுறுத்தும் பாடம்…!

மதகு நீரடி மண் கோடையின் வெப்பத்தில் மண்ணின் உள்ளிட்ட நீரும் வரும் வழியாகக் காய்ந்து அந்த மண்ணில் நீ சுரந்திடாத தன்மையாக வெடிப்பு ஓடிக் காணப்படுகின்றது அல்லவா.

இதுவே இந்தக் கலியில் வாழும் மனிதன் கொண்ட மன எண்ண நிலையப்பா…!

கோடையிலும் மேன்மை சிறப்பு உருவாய் என்று உரைத்திட வந்ததே…
1.வாழும் வாழ்க்கையில் கோடையின் அதி வெப்பம் போல் எண்ணத்தின் மோதல்கள் இருந்திட்டாலும்
2.நாம் கொண்ட அன்பு எனும் ஊற்று மனத்தின் நிறைவாகத் தன்னுள் ஆத்ம பலம் கூட்டிடும் தேவையின் பூர்த்தியைச் சிறக்கச் செய்வதோடு
3.அது மற்றவருக்கும் அமுத நீராகிய ஞானத்தைப் போதனையாக வழங்கிடும் ஆசான் என்று அழைக்கப் பெறும் போதினியாக
4.தன்னை உயர்த்திக் கொள்தலே மெய்ஞான விழிப்பின் பலனாகப் பெற்றுச் சுடர்ந்திடும் ஞானத்தின் அமுத ஊற்று.

இந்த நிலையின் வழியறிந்து பெறுகின்ற மனத்தின் திறன் எத்தன்மையாக விளங்கிடல் வேண்டுமோ… அதுவே எரியடி தண்டம்…!

மனத்தின் சஞ்சலம் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். எண்ண ஓட்டத்தின் வேகம் நிலை பேர் அறியாத செயலாகக் கொள்கின்ற வழித்தொடர் ஈர்ப்பின் நிலை கொண்டு நாம் அளித்திட முடியும்.

கரவுகின்ற (வஞ்சனை கொண்ட) மனம் எண்ணத்தின் செயலால் அன்பின் சிறப்பு அற்றுப்போய்விடும்.

மதகு நீர் குறைந்து விட்டால் நீர் வற்றிய பின் ஆங்கு படிந்துள்ள வண்டல் மண்… சூரியனின் வெப்பத்தால் இறுகி வெடிப்பு ஓடிக் கெட்டிப்பட்ட தன்மையாக ஆன பின்… அந்த மண்ணைத் தோண்டினால் நீர் சுரந்திடும் ஊற்று நிலை காணுவது அரிது.

அதுவே கரவுகின்ற மனம் மதகின் நீரடி மண்ணாக அன்பின் சிறப்பு அற்றுவிடும் என உரைத்திட வந்தோம்.

கோடை எனும் வாழ்க்கையாக ஆற்றின் நீரடி மணலாகத் தோண்ட சுரந்திடும் ஊற்று நீர் போல் “அன்பின் சிறப்பு” கொள்கின்றாய். அத்தகைய மனத்தின் பாங்கையே மேன்மை சுரப்பு உருவாய் என்று அழைக்கின்றோம்.
1.உயர் ஞானத்தின் வழி உயர்வெண்ண செயல் வான் தொடர்பாகப் பெற்றால்
2.அந்த அன்பின் சிறப்பு… எரியடி தண்டமாக்கும் உன்னை.

அக்கினியை அக்கினியால் அணைத்திட முடியாது…! எரிகின்ற அக்கினியை எரிகின்ற கைப்பந்தம் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக வீசிப்பார்.
1.மேலும் அக்கினியின் சுடர்தான் பிரகாசிக்குமே தவிர அது குறைவு படாது.
2.அந்த நிலையே உடல் கடந்து அகம் ஜபித்திடும் சூட்சும நிலை…!

இன்னும் விளங்கக் கூற வேண்டும் என்றால் இயேசுநாதரை சிலுவையில் அறையப்பட்ட பொழுது… உடல் துன்பம் உணர்ந்திடாத நிலையில் புற உடல் தவிர்த்து… அவர் உடல் வாழ்ந்த விதம் என்ன…?

அக்கினியில் போடப்படும் பொருள்கள் எல்லாமே சருகாகி அக்கினியை மேலும் அது வளர்க்கும். அது போல் தான் எத்தகைய துன்பங்களும் ஆத்ம ஞானிகளைத் தாக்கிடாது.
1.அவர்கள் கொண்ட எண்ணத்தின் வலு வீரியம் உடல் கடந்து…
2.அக உடல் வாழ்வாங்கு வாழ்ந்ததைப் போல் அன்பு கொண்டே உங்களையும் அழைக்கின்றோம்.

சுவரினை நோக்கி வீசப்படும் பந்து சுவற்றில் மோதுண்டு… எய்தப்பட்ட செயல் எய்த இடத்திற்கே திரும்புகின்ற செயல் போல்… அழுக்காறு எனும் பொறாமை குணமும்… சினம் என்று உரைக்கின்ற கோபத்தின் குணமும் கொண்ட உலகோதய நடைமுறை வாழ்க்கையில் உள்ள மக்கள் வெளிப்படுத்தும் அத்தகைய உணர்வுகள்… உண்மையான உயர் ஆத்ம ஞானத்தை வளர்த்திடல் வேண்டும் என்று செயலுறும் ஆத்ம ஞானிகளை அது நெருங்கிடாது.

உறுதியாக உரைக்கின்ற வாசகம் இது.

இன்றைய மனிதர்களின் மனோபாவனை… நடைமுறை வாழ்க்கை எவ்வாறு இருக்கின்றது…?

பாலைவனத்தில் மணல் குன்றைப் பார்த்து இருக்கின்றாய் அல்லவா…! இன்று ஓர் இடத்தில் இருக்கும் அந்த மணல் குன்று மறுநாள் வேறொரு இடத்தில் தோன்றுகின்றதே அது எப்படி…?

காற்றால் இடம் மாறும் மணல் குன்று போல் தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை.

ஆனால் நாம் உரைத்திட வந்திட்ட உயர் ஞானம் கடைபிடிக்கும் மனித மனத்தின் நிலை அதுவே உறுதி மலை.
1.மனத்தின் திடத்தைத் தான் உரைக்கின்றோம்
2.உறுதி மலை மேல் நின்று அகன்றிடாத் தொடர் ஜெபத்தால்
3.வானியலாகச் சக்தி பெற்று உயர்ந்திட எமது ஆசிகள்.