ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 22, 2023

பதட்டத்தையும் பயத்தையும் போக்கத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தே ஆக வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்ற நினைவை நம் உடலுக்குள் செலுத்தினால் தீமைகளை அடக்கி நமக்குள் சிந்திக்கும் ஆற்றலாக உருவாகின்றது.

அதற்குப் பின் நோயாளியைப் பார்த்து “நீ நன்றாகி விடுவாய்…” என்று இந்த உணர்வைச் சமைத்து இந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவனுக்கு ஊக்கமூட்டும் உணர்ச்சிகளாக இது அமைகிறது. அதே சமயத்தில்
1.நோயை நீக்க அவன் உட்கொள்ளும் மருந்தைச் சீராகப் பயன்படுத்தும் நிலையும்
2.அந்த மருந்து உடலுக்குள் சென்று நன்கு வேலை செய்யும் தன்மையும் வருகிறது.

ஆனால்… இப்படி ஆகிவிட்டதே என்று அவன் வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்து… வேதனையும் பதட்டத்தையும் பட்டு… பயத்துடன் நாம் அந்த மருந்தினைக் கொடுத்தால்
1.இதே உணர்வுகள் இயக்கப்பட்டு
2.அந்த மருந்துக்கே வேலை இல்லை என்று ஆகி எதிர் நிலையாகிவிடும்.

ஒரு சிலர் பாருங்கள்… நோயான பின் பதட்டத்தோடு மருந்தினைக் கொடுப்பார்கள். இப்படி எத்தனை மருந்து கொடுத்தாலும் அந்த நோயிலிருந்து அவர்கள் விடுபட முடியாது.

ஏனென்றால்… பாசத்தாலோ அல்லது நண்பர் என்ற நிலையிலோ பழகிய நிலைகள் கொண்டு இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே…! என்று தியானிப்பார்கள்.
1.அவர்கள் உடலிலும் இத்தகைய தீமைகள் விளையும்
2.அதே சமயத்தில் அந்த நோயாளி உடலிலும் அதே உணர்வுகள் விளையும்.

இதுவும் தியானம்தான்…!

இதையெல்லாம் மாற்றிட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நம் உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமை என்ற நிலைகளை நாம் அடக்கிப் பழக வேண்டும்.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோயுற்றவர் உடலில் படர வேண்டும்
1.அவர் நோய்கள் நீங்க வேண்டும்
2.அவர் மன உறுதி பெற வேண்டும்
3.நல்ல உணர்வுகள் அவருக்கு கிடைக்க வேண்டும்
4.சிந்திக்கும் ஆற்றல் அவருக்குள் பெருக வேண்டும்
5.மன வலிமையுடன் வளரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்தால் இந்த வலு நமக்குக் கிடைக்கின்றது.

அந்த உணர்வோடு அவரிடம் சொல்லி “சீக்கிரம் நலமாகி விடுவீர்கள் உடல் நலம் பெறுவீர்கள்…” என்ற உணர்வினை இங்கே சமைத்தால்… அந்த உணர்வின் சொல் அவர் செவிகளிலே பட்டு நல்ல உணர்ச்சிகளைத் தூண்டி… அவருடைய இரத்தங்களிலே கலந்து அவர் தீமையின் உணர்வை அடக்கி நல்ல உணர்ச்சிகளை அவருக்குள் ஊட்டும்.

உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அவர் எடுத்த வேதனையை நமக்குள் எடுத்து உனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணினால் நமக்குள்ளும் அதே பயமும் பதட்டமும் வேதனையும் வருகின்றது.

திருப்பி இதையே வலுவாக்கிச் சொல்லப்படும் பொழுது நோயே வலிமை பெறுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நீக்குவதற்குத் தான் ஆலயங்களிலே சிலைகளை வடித்து… அதன்படி நாம் எப்படி நல்ல குணங்களைச் சேர்க்க வேண்டும்…? தீமையிலிருந்து எவ்வாறு விடுபடுவது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…! என்று ஸ்தல புராணங்களை வடித்து வைத்துள்ளார்கள்

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…?

அங்கே அபிஷேகங்களையும் ஆராதனையும் செய்துவிட்டு… இப்படி நோயுடன் இருக்கின்றார்களே… தெய்வமே…! கஷ்டமாக இருக்கின்றதே… நீ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றாயே…! என்ற வேதனை கலந்த உணர்வைத்தான் நாம் எடுத்து வளர்த்து
1.அவர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணினாலும்
2.விஷத்தைக் கலந்து பாலைக் கொடுத்தது போன்றாகி விடுகின்றது.

ஏனென்றால் வேதனை (நஞ்சு) கலந்த பின் இப்படித்தான் ஆகும். ஆகவே கோவிலுக்குச் சென்றால் நான் எப்படிச் செயல்பட வேண்டும்…?

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும்… வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும் என்ற உணர்வைத் தனக்குள் படைத்து… இந்தத் தெய்வீக பண்புகள் அவருக்குள் வளர வேண்டும்.. தீமைகளை அகற்றிடும் அருள் சக்தி அவர் பெற வேண்டும் அருள் வழி வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எந்த நோயாளியை பார்த்து நாம் எண்ணினோமோ
1.அருள் உணர்வை எண்ணிச் சுவாசித்து இங்கே படைத்தால் நம் உயிருக்கு இது அபிஷேகம் ஆகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் நம் இரத்தங்கள் முழுவதும் கலக்கின்றது
3.தீமையை அகற்றிடும் நல்ல அணுக்கள் நமக்குள் விளைகின்றது.

இந்த உணர்வின் சொல்லை வெளிப்படுத்தும் போது… எந்த ஆலயத்தில் நாம் இதை உற்றுப் பார்த்து எண்ணுகின்றோமோ அங்கே “நாம் தெய்வமாகின்றோம்…!”

அவ்வாறு நாம் தெய்வமாகி அவன் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இது தான் ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திரம்