அடிக்கடி யாம் (ஞானகுரு) வற்புறுத்துவதெல்லாம் நாம் தேட வேண்டிய அழியாச் சொத்து “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைத்தான்…”
அதை எடுத்துக் கொண்டால் எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் அதை மாற்றும் தன்மை உண்டு
நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் அந்தந்த உணர்ச்சியை ஊட்டி நம்மை இயக்கி அது செயலாக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.
1.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ நம் உடல் ஒரு அரங்கம்… உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் இயங்குகின்றது
2.ஆகவே நாம் பேரருள் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால்
3.அந்த உணர்ச்சிகள் அரங்கநாதனாக மாறி தீமைகளை அகற்றிடும் உணர்வின் தன்மை நம்மை ஆளும்.
4.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தியையும் நாம் பெறுகின்றோம்
பல முறை உங்களுக்கு இதைச் சொல்லி உள்ளேன்.
நீங்கள் எம்மை எண்ண வேண்டிய முறையே… இந்த உபதேசத்தை மீண்டும் மீண்டும் கேட்கின்றீர்கள். அதன் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எனக்கு உடல் நலம் ஆக வேண்டும் என்று “மனதில் எண்ணி ஏங்கி இருந்தாலே போதுமானது…”
இந்த உணர்வுகள் உங்கள் உயிரான அரங்கத்தில் பட்டு அது நாதங்களாக உடல் முழுவதும் பரவுகின்றது. ஏங்கிப் பெறும் பொழுது அந்த சக்திகள் உங்களுக்குள் அதிகமாகப் பெருகுகின்றது.
இந்த உணர்வு வளர நிச்சயம் உங்கள் நோய்கள் அகலும்
ஆனால் எம்மை எண்ணும் பொழுது “இப்படி இருக்கின்றதே… வேதனையாக இருக்கின்றதே…” என்று இப்படித்தான் சில பேர் எண்ணுகின்றார்கள்.
ரொம்ப நாளாக இந்த நோய் இருக்கின்றது…! என்று எம்மிடம் இப்படிக் கேட்டால் எந்த வாக்கு உங்களுக்குள் பதிவாகும்…? இப்படிக் கேட்பதையே ஒரு பழக்கமாகவும் வைத்திருக்கின்றனர்.
ஏனென்றால் உங்கள் தீமைகள் அகல வேண்டும் நீங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று தான் நான் உங்களுக்கு அந்த வாக்கினைக் கொடுக்கின்றேன்.
அந்த அடிப்படையில் நீங்கள் எண்ணி எடுத்தால் உங்களுக்குள் அது சரியான முறையில் வேலை செய்யும். நோய் நீங்க வேண்டும் என்றால் நான் உங்களுக்கு மருந்து சொல்வதற்கு வரவில்லை.
1.சொல்லின் வாக்காலே உங்களுக்கு அந்த நோய் போகும் உடல் நலம் பெறுவீர்கள் என்று தான் கொடுக்கின்றேன்.
2.உங்களுக்குள் பதிவாகி அதை மீண்டும் எண்ணினால் அதுதான் நல்லதாக வேலை செய்யும்.
மருந்து கொடுத்து அல்ல…!
1.மருந்துக்கு முன்னாடியே இந்த வாக்கு உள்ளே சென்று வேலை செய்யும்.
2.யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…! என்பது போல் யாம் கொடுக்கும் வாக்கை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
3.இந்த உணர்வு அந்த நோயைத் தீர்க்கும் வலிமையாக உங்களுக்குள் கூடுகின்றது.
அந்த வலிமை கொண்டு நீங்கள் எத்தகைய தீமையையும் நீக்கிடும் சக்தி பெறுகின்றீர்கள். அதைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை உபாயங்களையும் யாம் சொல்கின்றோம்.
கோவிலுக்குச் சென்று சாமிடம் வரம் கேட்பது போல் தான் எம்மிடமும் கேட்கும் பழக்க வழக்கங்கள் வந்து விடுகிறது. இதையெல்லாம் முழுவதுமாக மாற்றிப் பழகிடல் வேண்டும்.
எம்மிடம் கேட்க வேண்டிய முறையே நோயிலிருந்து விடுபட வேண்டும் அதற்குண்டான அருள் சக்தி வேண்டும் அதற்குண்டான உபாயங்கள் வேண்டும்… என் பையன் நல்லவனாக வேண்டும் என்று தான்…!
அதன்படி நடக்கும் என்று வாக்கினைக் கொடுத்துப் பதிவு செய்தால் உடனடியாக அது நல்லதாகும்.
ஆகவே எதுவாக இருந்தாலும் அது நல்லதாக வேண்டும் நலம் பெறக்கூடிய சக்தியாக வரவேண்டும் அந்த அருள் வழியை நாம் பெற வேண்டும் என்று இந்த அடிப்படையில் எடுத்துக் கொண்டால் அதன்படியே நடக்கும். நீங்கள் எண்ணியபடி அது நல்லதாக அமையும்.
1.நான் பதிவு செய்தால்… உங்கள் எண்ணம் அதனுடன் இணைந்து
2.அந்த உணர்வினை இயக்கி உங்களுக்கு நிச்சயம் நல்லதாகும்.
பல முறை இதைச் சொல்கின்றேன். யாரும் இதை அதிகம் சட்டை பண்ணுவது இல்லை.
ஏனென்றால் நீங்கள் எண்ணுவது எதுவோ உங்கள் உயிர் அதைத் தான் இயக்குகின்றது. இந்த உணர்வுகள் தான் உடலில் படர்கின்றது. அது தான் உங்களை ஆட்சி புரிகின்றது என்று பல முறை நான் சொல்கின்றேன். நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று தான் பெரும் பகுதியானவர்கள் எண்ணுகின்றார்கள். ஆகவே “அருள் வழியில் வாழ்க்கை நடத்துவோம்…” என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அருள் வழியில் வாழக் கற்றுக் கொள்தல் வேண்டும்.
எத்தனையோ செல்வங்களை நாம் தேடி வைத்திருந்தாலும் நம்முடன் அது வருவதில்லை. இந்த உடலுக்குப் பின் என்றுமே ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை அடைவதே முழுமை…!
1.இந்த உயிர் தோன்றி எத்தனையோ கோடி இன்னல்களில் இருந்து தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்து மனிதனான பின்
2.இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் கோடி உணர்வுகளையும் வெல்லும் சக்தி இந்த மனிதனுக்குத் தான் வருகின்றது.
3.அதை வென்று விட்டால் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.
அதற்கு நாம் தயாராக வேண்டும்.
இதன் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றால் நமக்கு எண்ண வலு கிடைக்கின்றது. சிந்தித்து வாழும் அருள் சக்தி கிடைக்கின்றது தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது… அருள் ஒளியைப் பெருக்கச் செய்கின்றது அருள் வாழ்க்கை வாழச் செய்கின்றது நம் பார்வையில் சர்வ தோஷங்களும் போக்கப்படுகின்றது பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும் சக்தியும் வருகிறது.
ஆகவே இதைச் சீராக வளர்த்துக் கொள்ளுங்கள்
1.அருள் வழியில் வாழ்வோம்
2.அருள் வழியில் அனைவரையும் வாழச் செய்வோம்.