இன்று யாகத்தை எப்படி நடத்துகிறார்கள்….?
நெருப்பை உருவாக்கி அதில் பல புஷ்பங்களையும் நறுமணங்களையும் மணங்களையும் போட்டு… மந்திரத்தைச் சொல்லி இப்படித்தான் யாகத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் உண்மையான யாகம் எது…?
நமது உயிர் ஒரு நெருப்பு. நாம் எடுக்கக்கூடிய (சுவாசிப்பது) உணர்வுகள் புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே மோதுகிறது. மோதிய பின் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகிறது.
ஒவ்வொரு குணங்களையும் பற்றி அதனின் இயக்க நிலைகளைத் இந்த உபதேசத்தின் வாயிலாகத் தெளிவாகச் சொல்கின்றோம். அதற்குள் தீமை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளைக் கலக்கும்படி சொல்கிறோம்.
அப்போது தீமையை நீக்கும் அந்த மெய் ஞானியின் உணர்வுகள் யாகத்தீயிலே… அதாவது உங்கள் உயிரிலே படுகின்றது.
அந்த அருள் உணர்வை இயக்கச் சக்தியாக மாற்ற வேண்டும்… துருவ நட்சத்திரத்திந் உணர்வு உங்கள் உடலில் படரப்படும் பொழுது ஒளியின் அறிவாக… உணர்வின் ஞானமாக வளர்கின்றது
ஆக… இப்பொழுது அந்த உண்மையான யாகத்தை நாம் அனைவரும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
எம்முடைய அருள் உபதேசத்தைக் கேட்டு உங்களுக்குள் அதை வளர்த்து நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் வெளியிலே பரவும் பொழுது எல்லோருக்கும் நல்லதாகிறது.
உதாரணமாக என் உடலில் மேல் வலி தலைவலி கை வலி கால் வலி இடுப்பு வலி என்று சொல்வார்கள். இடுப்பு வலி இருக்கும் போது இங்கே குருநாதர் சொல்வதை “உட்கார்ந்து கொண்டு நான் எப்படிக் கேட்பது...? நான் எப்படி அமர்ந்து தியானம் செய்வது...?” என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் அவர்கள் எல்லாம் இப்பொழுது இந்த உபதேசத்தைக் கேட்க ஆரம்பித்தால்… நேரம் ஆக ஆக அந்த வலி எல்லாம் காணாமலே போய்விடும்... உட்கார்ந்து தாரளமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
வலியே தெரியாதபடி இருக்கும். அடுத்தது ஒன்றுமே இல்லை என்று சொல்வார்கள்.
ஆனாலும் ஏற்கனவே இடுப்பு வலியால் வேதனைப்பட்டுத் தனக்குள் பதிவான உணர்வுகள் என்ன செய்யும்…? “அந்த ஞாபகம்” வந்தவுடனே என்னிடம் (ஞானகுரு) வந்து இடுப்பு வலிக்கின்றது என்று தான் மீண்டும் கேட்பார்கள்.
முதலில் வரும்போது வலி இருந்தது… உபதேசம் கேட்கும் பொழுது இடுப்பு வலி இல்லையே… ஆகையினால் இப்பொழுது இல்லை அல்லவா…! என்று நான் திருப்பிச் சொன்னால் ஏற்கனவே பதிவான நினைவோடு தான் மீண்டும் கேட்கின்றார்கள்.
அது போல் ஒரு சிலருக்குக் கை கால் குடைச்சல் இருக்கும். இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட பின்… அவர்கள் உடலில் இருக்கும் அந்தப் போர் முறை மாறுகின்றது… கலக்கங்கள் நீங்குகின்றது.
மகரிஷிகள் உணர்வுகளைச் சுவாசித்த பின்… தீமைகளை அது நீக்குகின்றது. வலி நீங்கி… உங்கள் உடல் வெடுக்கென்று “சொடக்கு எடுத்தது போன்று…” இலகுவாக இருக்கும்.
நீங்கள் கதைப் புத்தகம் படிக்கின்றீர்கள்… அல்லது சினிமா பார்க்கின்றீர்கள் என்றால் ஊங்கள் உடல் ஏதாவது நெளிகிறதா…? கையையோ காலையோ நெளித்து அசைக்கின்றோமா…? இல்லை. கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோம்… கவனிக்கின்றோம். இடுப்பு வலி தலைவலி எதையுமே நினைப்பதில்லை… கால் வலியைக் கூட நினைப்பதில்லை.
அது போல் தான் எம்முடைய உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்கக் கேட்க இருதயத்தில் படபடப்பு இருந்தாலும் கூட துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தச் செலுத்த… அதை நீக்கி இதயத்தை வலுவாக்குகின்றது…. வேதனை குறைகிறது.
ஏனென்றால் நான் வெறும் சொல்லாக உபதேசிக்கவில்லை. அகஸ்தியன் பெற்ற அருள் ஆற்றலை அவன் கண்ட… அவன் பெற்ற… அவன் வளர்த்துக் கொண்ட பேராற்றல்களை… செவி வழி கூடி இந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் உந்தச் செய்து அதை நுகர வைக்கின்றோம்.
நுகரும் போது அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வெல்லாம் உங்கள் இரத்தங்களிலே கலந்து அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகிறது. தீமைகளை நீக்கக்கூடிய சக்தி உங்கள் உடலில் அது எப்படியும் ஊடுருவ வேண்டும்… நீங்கள் நலம் பெற வேண்டும் என்பதற்குத்தான் இப்படிச் செய்கிறேன்.
வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்தால் தன்னாலே வேதனை வருகிறது அல்லவா. அடுத்து இரவிலே கெட்ட கனவு வருகிறது…! மேல் வலிக்கிறது… உடம்பை அமுக்குகிறது… வயிறு வலிக்கின்றது… கண் வலிக்கின்றது எல்லாமே வரும்.
காரணம்… நாம் நுகர்ந்த அந்த வேதனைப்பட்ட உணர்வு ஆகாரத்துடன் கலந்த பின் அதற்குத்தக்க உடலுக்குள் சென்று உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கும் அதற்கும் எதிர்மறையாகி ஒன்றுக்கொன்று போராகிறது.
நுரையீரலுக்குச் சென்றால் வலி கல்லீரலுக்குச் சென்றால் வலி இதயத்துக்குச் செல்லும் பொழுது வலி… என்று இப்படி அந்தந்த உறுப்புகளுக்குச் செல்லும் பொழுது போராட்டமாகி… எதிர்மறையான உணர்வின் இயக்கங்களாக வலியாக வேதனைப்படும்படி செய்கின்றது.
இரத்தம் செல்லும் இடமெல்லாம் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு போர் நடந்து கொண்டு இருக்கின்றது.
இதைப் போன்ற நிலையிலிருந்து மீள்வதற்குத் தான் அன்று அகஸ்தியன் பெற்ற உணர்வை உங்கள் செவிகளிலே கேட்கும்படி செய்து… கண்ணின் நினைவாற்றலுக்குக் கொண்டு வரச் செய்து… அதை நுகரும்படி மூக்கின் வழியாகச் சுவாசிக்கும்படி செய்து… உயிர் வழி இந்த உணர்ச்சிகளை உடலுக்குள் பரப்பும்படியாகச் செய்து… இந்த உபதேசத்தின் உணர்வுகளை உமிழ் நீராக உங்கள் ஆகாரத்துடன் கலக்கும்படி செய்து… அதை நல்ல இரத்தமாக மாற்றும்படி செய்து… இரத்தத்தில் கலந்த பின் தீமைகளை நீக்கும்படியாக… உங்கள் தீமைகளைப் போக்கும் அரும்பெரும் சக்தியாகக் கிடைக்கச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).
அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்…! நான் சும்மா வேடிக்கையாகச் சொல்லவில்லை… எல்லாம் தெரிந்து கொண்டேன் என்று சொல்ல வரவில்லை.
காரணம்… நமக்குள் எத்தனையோ விஷங்கள் இருக்கிறது. இதை ஒவ்வொரு நிமிடமும் மாற்றி எடுத்துக் கொண்டு வந்தால் அந்த விஷமே வலுவாகி உயர்ந்த சக்திகளைப் பெற (சரியான) வழியாகும்.
பாம்பிற்கு “விஷம் எப்படி வலுவாகிறதோ” இதைப் போன்று விஷத்திற்குள் மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாகச் சேர்க்கப்படும் போது… நமக்குள் வீரிய சக்தியாகக் கிடைக்கின்றது… அதை நீங்கள் பெற முடியும்.
ஏனென்றால் குருநாதர் எனக்குக் கொடுத்ததை உங்களுக்குத் தொட்டுத் தொட்டுக் கொடுக்கின்றோம். அடுத்து அடுத்து வரும் போது ஒவ்வொரு நிலையிலும் நல்லதை உருவாக்குவதற்கு... ஞானத்தின் வழியில் வளர்வதற்கு இது உதவும்.
உங்கள் உயிர் கடவுள்… அவனால் உருவாக்கப்பட்ட உங்கள் உடல் ஆலயம்… அதில் அசுத்தங்கள் சேராது அந்தக் கோயிலை சுத்தப்படுத்த வேண்டும் என்ற சேவையாக… குரு சொன்ன நிலைகளைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன்.
ஆகவே நீங்கள் எல்லாம் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும்…!