ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2023

சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் “துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்”

நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அது தான் நம்மை இயக்கிக் காட்டும்.

உதாரணமாக… தீமை என்று தெரிகின்றது… அப்போது அதை அகற்றப் பழக வேண்டும் அல்லவா…! அதாவது ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வைச் சேர்த்தால் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…! என்று தீமை உருவாகாதபடி தடுக்கப்படுகிறது.

ஆனால் தீமை என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்
1.இது உடல் இச்சை…! கௌரவப் பிரச்சினையாக மாறிவிடுகின்றது
2.கௌரவ பிரச்சனைகள் வரும் பொழுது உடல் பற்று வருகின்றது.
3.உடல் பற்று வரும் பொழுது தீமை என்ற நிலையே வருகின்றது

ஆக இந்த உடல் பற்று வரும் பொழுது சிவம்... இந்த உடலைக் காக்கத் தான் நம் எண்ணங்கள் வருகின்றது.

ஆனால் “ஓ..ம்” என்ற பிரணவத்தைச் சிவனுக்கே ஓதினான் தகப்பன் சாமி என்று சாஸ்திரங்கள் காட்டுகிறது.
1.தீமையை நீக்கும் அருள் உணர்வை ஜீவனாக்கினால் பிரணவம்
2.அது தான் தகப்பன்சாமி…! (உடல் சிவம் - ஆறாவது அறிவு முருகன்)

தீமையை நுகர்ந்து விட்டால் உடனே சங்கடப்படுகின்றோம்… சலிப்படைகின்றோம். அப்போது ஆறாவது அறிவு கொண்டு என்ன செய்ய வேண்டும்…?

1.சங்கடத்தை நீக்க வேண்டும் சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.
2.இருளை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் கார்த்திகேயா…! (கார்த்தி என்றால் வெளிச்சம்)

பல கோடிச் சரீரங்களில் எத்தனையோ தீமைகளிலிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று எண்ணி எடுத்துத் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

மனித உடல் பெற்ற பின் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சை இந்த உடல் மலமாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை அறிகிறது.

உயிர் ஈசனாகின்றது… உடல் சிவமாகின்றது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்க வேண்டும் என்ற வினைகளைச் சேர்த்தது வினைக்கு நாயகனாக மனித உடலை உருவககியது (விநாயகா) மனித உடலை உருவாக்கிய பின் நஞ்சை மலமாக மாற்றுகின்றது.

அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது. சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

இருந்தாலும்… உடல் பற்றின் தன்மை வரப்படும் போது
1.கௌரவக் குறைவாக என்னைப் பேசினான் என்ற உணர்வான பின்
2.அது “ஓ… ம்…” என்று நமக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது.
3.அவனுடைய தவறை நீக்குவதற்கு மாறாக அவனுடைய தவறை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்

அந்தத் தவறு நமக்குள் பிரணவமாகி விடுகின்றது… உடலுக்குள் வரும் பொழுது வேதனை வருகின்றது. வேதனை வரும் பொழுது சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது… சிந்தனை இழந்து கார உணர்ச்சிகள் அதிகமாகி எரிச்சலாகின்றது.

உதாரணமாக…
1.ஒரு கல்லுடன் கல் மோதினால் (உராய்ந்தால்) நெருப்பாகின்றது
2.அந்த இடத்திலே தொடும் பொழுது சுடுகின்றது.

அதே போன்றுதான் இந்த உணர்ச்சிகள் மோதலாகும் பொழுது அதற்குத் தகுந்த மாதிரி வேகங்கள் வருகின்றது. அப்பொழுது அதை மாற்ற முடிகின்றதா…? இல்லை…!

அத்தகைய கார உணர்ச்சிகளை மாற்றுவதற்குத் தான்
1.நம் குருநாதர் காட்டிய வழியிலே அவர் கொடுக்கக்கூடிய அரும்பெரும் சக்திகளை
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து நாம் பயன்படுத்திப் பழகுதல் வேண்டும்.