ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 23, 2023

அக்கினி குண்டத்தின் தத்துவம் என்ன…?

நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று ஞானிகள் ஆலயத்திலே உருவத்தைக் காட்டி அருவ நிலைகள் நாம் உணர்ந்து இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்…? என்று தெளிவாகக் கூறியதை நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்…?

ஆலயப் பண்புகளை மறந்து தன் சுயநலத்தைக் கொண்டு நடந்து கொள்கிறோம்…! யாராவது நமக்குத் தொல்லை கொடுத்தால்
1.உடனே அவன் குடும்பம் நாசமாக வேண்டும்
2.அவன் குடும்பம் பிள்ளை குட்டி எல்லாம் சாக வேண்டும்
3.அவன் தொழில் எல்லாம் நாசமாக வேண்டும் என்று கருப்பணசாமி ஆலயத்திலோ மாரியம்மன் ஆலயத்திலோ
4.மண்ணை வாரித் தூற்றி எனக்குத் தொல்லை கொடுக்கின்றான் என்ற நிலையில் அவர்கள் நாசமாக வேண்டும் என்று தான் கும்பிடுகின்றோம்…

ஆக ஆலயத்திற்குச் சென்று நாம் எதை வளர்க்கின்றோம்…?

பிறிதொருவன் தவறு செய்யும் உணர்வை நாம் நுகர்ந்தால்… அந்த உணர்வுகள் மாறி அவன் செய்யும் தவறையே நமக்குள் செய்யும் நிலை வருகின்றது (சொல்வது அர்த்தமாகிறதல்லவா).

ஒரு உடலிலே நோய் அதிகமாக இருந்தால் பாசத்துடன் அவனை நுகரப்படும் பொழுது அதே நோய் நமக்குள் வந்து நம்முடைய நல்ல சிந்தனையை இழக்கச் செய்கின்றது.

அது தான் மாரியம்மாள்…! (அடுத்தவர் உணர்வு மாறி நமக்குள் வருவது).

ஆனால் மாரியம்மனை வணங்கி வரும் பொழுது ஆகாதவர்கள் இருந்தால் என்ன செய்கிறோம்…? அவர் குடும்பத்தைக் கெடுப்பதற்காக உனக்கு ஆட்டைக் கொண்டு வந்து வெட்டிப் பலி கொடுக்கின்றேன்…! என்று ஆலயப் பண்புகளை இப்படித்தான் கொண்டு வருகின்றோம்.

பிறிதொரு வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தால் அதே உணர்வு நமக்குள் மாறி (மாரி) அவன் உடலில் வந்த நோய்கள் நமக்குள்ளும் வருகின்றது.

இந்தத் தீமைகளை நீக்குவதற்கு நோயை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று பச்சையாகவே அங்கே காட்டுகின்றார்கள்… அக்கினி குண்டம் இறங்க வேண்டும் என்று…!

ஆனால் அக்கினி குண்டம் நாம் எப்படி இன்று இறங்குகிறோம்…?

1.தீ மிதித்தால் “தீ நம்மைச் சுடும்…!” என்று தெரிகின்றது ஆனாலும் மிதிக்கின்றோம்
2.ஏனென்றால் நேர்த்திக் கடனுக்காக நான் மிதித்துச் செல்கின்றேன் என்று செல்கின்றார்கள்
3.ஆனால் ஒருவனுடைய தீமை நம்மைக் கொல்கிறது என்று தெரிகின்றது
4.அந்தத் தீமையை நீக்கும் (சுட்டுப் பொசுக்கும்) நல்ல உணர்வுகளை எடுக்கின்றோமா என்றால் இல்லை.

நெருப்பைக் கொண்டு எப்படி மற்ற பொருளை வேக வைக்கின்றோமோ ஒன்றைக் கருக்குகின்றோமோ இதைப் போன்று நம் உயிரான நெருப்பிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள இணைத்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் நுகர்ந்து
1.நம் உடலுக்குள்ளே அதைப் பரப்பினால் இது ஒரு குண்டம்.
2.தீமையை நீக்கிய அந்த அருள் உணர்வு நமக்குள் வந்தால் தீமைகளைப் பொசுக்கி விடுகின்றது.

பின்… யார் நமக்குத் தீமை செய்தார்களோ அவனுக்குச் சிந்தித்து செயல்படும் சக்தியும் பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் வரவேண்டும் என்றும் இத்தகைய எண்ணங்களை நாம் எண்ணினால் அவனுடைய தீய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

தீமை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் நம் உடலில் இரத்தத்தில் கலந்து தீமை என்ற உணர்வை மாற்றுகிறது.

நாம் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல உணர்வுகள் வரவேண்டும்… நல்லது செய்யும் எண்ணங்கள் வரவேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வு உயிரிலே பட்டு… அந்த உணர்ச்சிகள் நம் உடலில் நல்லதாக இயங்குகின்றது.

அதனால் தான் நாம் எதை எண்ணுகின்றோமோ நம் உடல் ஒரு அரங்கம்.
1.பிறர் நல்லவராக வேண்டும்… தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று உணர்வுகளை நுகர்ந்து
2.உயிரிலே பட்டால் அந்த உணர்ச்சிகள் நாதங்களாக மாறி அதற்கொப்ப எண்ணம் சொல் செயல் நம்மிடமிருந்து வருகின்றது
3.இந்த உணர்ச்சிகள் தான் நம்மை ஆளுகின்றது ஆண்டாள்…!

இப்படி இன்று நாம் வழக்கப்படுத்த வேண்டிய தெய்வீகப் பண்புகளைக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள். நாம் அதன்படி நடக்க வேண்டுமல்லவா…!