ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2019

அதர்வண. வேதம்


நமக்கு வேண்டியவர் ஒருவர் நோயினால் கடுமையாகத் துன்பப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பார்க்கும் பொழுது நமக்குள்ளும் வேதனையாகி நம்மிடம் இருக்கும் மகிழ்ச்சியை (நல்ல குணத்தை) அப்பொழுது இழக்கின்றோம் இது “அதர்வண...!

(அதர்வண என்றால் மாற்றம் அடைதல் என்று பொருள்)

ஆனாலும் அந்த நேரத்தில் உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று நமக்குள் இணைத்து அந்த வேதனையான உணர்வு நமக்குள் செயல்படாதபடி தடுக்கும் பொழுது அதுவும் “அதர்வண...!

அதாவது அருள் ஒளியான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து அவருக்குள்ளும் அதைப் பாய்ச்சி அந்த நல் வழியைச் செயல்படுத்தும் நிலையில்
1.மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து நல்லதாக்கும் பொழுது அது அதர்வண.
2.நல்லதுக்குள் வேதனை கலக்கப்படும் பொழுது அதுவும் அதர்வண தான்
3.ஆக இரண்டுமே அதர்வண தான்.

ஆனாலும் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு உணர்வையும் அருள் ஒளியின் உணர்வாக நல்லதாகவே நமக்குள் மாற்றுதல் வேண்டும்.

யார் யாரிடம் எல்லாம் பழகினோமோ அவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் மலரைப் போல் மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

காலையில் எழுந்ததுமே ஒவ்வொருவரும் இந்த மாதிரி எண்ணி எடுக்க வேண்டும்.
1.ஏனென்றால் பழகியவர்கள் உணர்வு எல்லாம் நம் உடலுக்குள் இருக்கிறது.
2.அவர்களின் உணர்வுகள் அது வளராது இந்த அருள் சாப்பாட்டைக் கொடுத்து அதை மறைக்க வேண்டும்.
3.இப்படி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

இல்லை என்றால் என்ன செய்யும்...?

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று பார்த்தவுடனே பிறருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அந்த வேதனைப்படும் அணுக்களை நுகரச் செய்து நாமும் வேதனைப்பட ஆரம்பிப்போம்.

அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் வந்து என்ன செய்யும்...? விஷத்தை நுகரும் தன்மையாக அது வரும் பொழுது நல்ல அணுக்களைக் குறைத்து விடுகின்றது. விஷத்திற்கு அந்த அளவு வலு இருக்கின்றது.

அந்த மாதிரி ஆகாதபடி அடுத்த நிமிடமே நம் நல்ல அணுக்களைப் பாதுகாக்க வேண்டும்.
1.ஈஸ்வரா...! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் வேண்டி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதைச் சொல்லியே தீர வேண்டும்.

தீமைகளைப் பார்த்தாலும் தீமையான சொல்லைக் கேட்டாலும் இந்த உணர்வு உடலுக்குள் போகும் பொழுது “ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த உபதேச வாயிலாக நீங்கள் இதைத் தெரிந்து கொண்ட பின் மற்ற தீமையான உணர்வுகளைக் கேட்க நேர்ந்தாலோ அல்லது பார்க்க நேர்ந்தாலோ
1.அவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்ற இந்த எண்ணத்தைத்தான் எண்ண வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களுக்குள் நன்மை பெறும் சக்தி பெறவேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
3.நாம் இப்படிச் சொல்லப்படும் பொழுது இது அதர்வண.
4.அவர்கள் சொன்ன உணர்வை அந்த அருள் மகரிஷிகளின் சொல்லால் அடக்கி விடுகின்றோம்.

இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது நரசிம்ம அவதாரத்தில் சொன்னது போல் வாசல்படியிலேயே அதாவது நம் சுவாசத்தின் வழியாக உடலுக்குள் புகாதபடி இங்கேயே நீக்கி விடுகின்றோம். உள்ளுக்குள் போகாது.

நம்முடைய ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி அந்த வலிமையின் துணை கொண்டு எதையுமே நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.  சொல்வது அர்த்தமாகிறதல்லவா...!