ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2019

குறைந்தது இவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா..? அதனுடைய கால அளவு எவ்வளவு...?


கேள்வி:-
ஆத்ம சுத்தி அதிக நேரம் (சுமார் 20 நிமிடங்கள்) செய்தால் அது தியானத்திற்குச் சமமாகுமா...?

பதில்:-
தியானம் என்பது எது...?

கெட்டது நமக்குள் சேரவிடாது "வைராக்கியமான நிலைகள்" பெறவேண்டும், இதுதான் தியானம். நமக்குள் தீயது சேராது தடுக்கும் “அந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு நாம் தியானமிருக்க வேண்டும்.

பக்தி என்பது நல்லதை நினைப்பது. நல்லதை நினைத்துக் கொண்டிரு என்பார்கள். தியானம் என்பது, “நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வது. அதாவது உயர்ந்த ஞானிகளின் சக்தி கொண்டு நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது.

ஆத்ம சுத்தி என்பது எது...?
உட்கார்ந்து உட்கார்ந்து மணிக்கணக்காகச் செய்து கொண்டு இருப்பது தியானம் ஆகாது. ஏன்?

நீங்கள் தியானத்தை முடித்துவிட்டு வேறு வேலைக்குப் போகின்றீர்கள். அடுத்தாற்போல தீடீரென ஒரு ஆக்ஸிடென்டோ அல்லது ஒரு மாடோ உங்களை விரட்டிக் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள்!

“ஆ…” என்று பயந்தால் அது உள்ளே வந்துவிடும். பயத்தையும் அதிர்ச்சியையும் உடலுக்குள் உருவாக்கி விடும்.

1.இந்த உணர்வு அதிகமானால் அடுத்தாற்போல
2.நீங்கள் தியானத்தில் உட்கார முடியாது.
3.எந்த ஒரு அதிர்ச்சியான செய்தியை கேட்டாலும் இது தான் முன்னாடி நிற்கும்.
4.அப்பொழுது நீங்கள் எப்படித் தியானம் எடுக்க முடியும்!

எதுவாக இருந்தாலும் எத்தகைய நிலை வந்தாலும் அப்போதைக்கு அப்போது துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திலே உட்காரவிடும். இல்லை என்றால் நிச்சயம் தியானத்திற்கு வர முடியாது. மனதை ஒரு நிலைப்படுத்த முடியவில்லை என்பார்கள்.

நீங்கள் வருடக் கணக்காகத் தியானத்தை எவ்வளவு வளர்த்தாலும்..,
1.நான் இவ்வளவு காலம் செய்தேன்!
2.அப்படித் தியானம் செய்து கொண்டு வந்தேன் அப்பொழுதெல்லாம் நன்றாக இருந்தது
3.இப்பொழுது என்னால் “முடியவே இல்லை!” என்பார்கள்.

ஏனென்றால் எதிர்பாராத விதமாக அதிர்ச்சியோ பயமோ கோபமோ குரோதமோ மற்றதோ எடுத்தால் அது வலுவானது. நுகர்ந்தது நம் ஆன்மாவில் கலந்து அது வலிமை பெறுகின்றது. அதனால் உங்களால் முடியாமல் போய் விடுகின்றது.

நான் செய்தேனே போய்விட்டதே! செய்தனே போய்விட்டதே! என்று வேதனைப்பட்டு விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது. (இது மிகவும் முக்கியமானது)

ஒவ்வொரு நொடியிலும் நாம் கையில் அழுக்குப்படுவதைத் துடைப்பது போலத்தான்
1.நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ
2.அப்பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) கொடுத்த அருளை வைத்து
3.”ஈஸ்வரா!” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்
4.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் இணைத்து விடுங்கள்
5.உள்ளே புகாது தடுத்து விடுங்கள்
6.அந்தப் பேரோளியைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்
7.அப்புறம் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்
8.இது வளர வளர இந்த ஆன்மாவிலிருக்கும் தீமைகளைத் (எந்தத் தீமையை நீங்கள் நுகர்ந்திருந்தாலும்) தள்ளிக்கொண்டே போகும்
9.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்கு வெளியில் போய் விட்டது என்றால் சூரியன் எடுத்துக் கொண்டு போய் விடும்
10.ஆன்மா பரிசுத்தமாகும்!

இப்படி எண்ணி எடுத்தால் இது தான் ஆத்ம சுத்தி. இதை ஒரு ஐந்து நொடிக்குள்ளும் (மின்னல் வேகத்திலும்) எடுக்கலாம். அல்லது ஒரு நிமிடத்திற்குள்ளும் (நிதானமாகவும்) எடுத்துக் கொள்ளலாம்.

அதாவது உடனுக்குடன் தீமையை நீக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமே ஆத்ம சுத்தி. இருபது நிமிடம் ஆத்ம சுத்தி செய்தால் அது தியானத்திற்குச் சமமா என்று பார்ப்பதை விட
1.நாம் எண்ணிய நல்ல காரியம் நடந்தது
2.நம்மை துன்பப்படுத்தும் தீமைகளை அகற்ற முடிந்தது
3.அல்லது மகரிஷிகளின் ஆற்றலை அதிக அளவில் வளர்க்க முடிந்தது என்று தான் எண்ண முடியும்.

தியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது:-
“தியானம் செய்ய வேண்டும்...!” என்பதற்காக ஒரு சடங்கு போல நாம் தியானம் செய்யக் கூடாது. நம் ஆன்மா தூய்மை அடைந்து உயிரான்மா ஒளியாக வேண்டும். அதற்காகத் தான் தியானமிருக்கச் சொல்கிறோம்.

தியானமோ ஆத்ம சுத்தியோ எதுவாக இருந்தாலும் “இது முடியவில்லை... அது முடியவில்லை... உட்கார முடியவில்லை...! என்று எண்ணிக் கொண்டே இருந்தால் இதுதான் வளரும்.

எப்படியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள்  பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தி உட்கார்ந்து பாருங்கள். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வலுப்பெறும் பொழுது, உங்களைச் சும்மா இருக்க விடாது.

அந்த நேரத்தில் இதனின் உணர்வை எடுக்கச் சொல்லும். இந்த உணர்வு வரும்பொழுது, பிறருடைய தீமைகளை அகற்றும் வலிமையினைப் பெறுகின்றோம். தீமைகள் வராதபடி தடுக்கவும் முடியும்.

1.தியானம் செய்தாலும்
2.ஆத்ம சுத்தி செய்தாலும்
3.உங்கள் வாழ்க்கையையே தியானமாக ஆக்கினாலும்
4.அல்லது உலக மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று தவமிருந்தாலும்
5.எவ்வளவும் நேரம் இதை எல்லாம் செய்கிறோம் என்பது முக்கியம் இல்லை
6.இரண்டு இமைகளுக்கு மத்தியில் உள்ள புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈஸ்வரனை எண்ணி அவனுடன் ஒன்றி
7.ஆழமாக... அழுத்தமாக...
8.வேண்டி விரும்பி...
9.கட்டாயப்படுத்திச் சொல்லிக் கேட்டுப் பெற வேண்டும்
10.வைராக்கியமாக அவனிடம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்
11.அதைப் பெறும் வரை (உயிரான ஈசனை) விடக் கூடாது.

இது தான் மிக மிக முக்கியம்...!