உன்முதலாகிய ஊன் உயிர் உண்டெனும்
கண்முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை
நன்முதல் ஏறிய நாம் அற நின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே
உயிர் தான் நாம் பார்ப்பதை கேட்பதை நுகர்வதை இயக்குகிறது நம் உடலாக உருவாக்குகிறது
உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்றாலும் அதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
ஆதிமூலமாகிய உயிர் நமக்குள் கடவுளாக நின்று இயக்கிக் கொண்டிருக்கின்றான். அவனே
இந்த உடலை உருவாக்கியுள்ளான். அந்த உயிர் இல்லை என்றால் நான் என்ற நிலை ஏதும் இல்லை
என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.
நுகர்ந்த உணர்வின் இயக்கமாக நான் என்ற நிலையில் இந்த வாழ்க்கையில்…
1.நான் தான் இதைச் செய்தேன்… அதைச் செய்தேன்..
2.அதைச் செய்யப் போகின்றேன் இதைச் செய்யப் போகின்றேன் என்ற நிலையில்
3.தன்னிச்சையாகச் செயல்படும் பழக்கம் தான் நம்மிடம் உள்ளது.
4.உயிரைப் பற்றிய சிந்தனை இல்லை.
எல்லோரிடமும் நாம் பேசுகின்றோம் சொல்கின்றோம் கேட்கின்றோம். ஆனால் நமக்குள்
உள் நின்று இயக்கும் அந்த ஈசனைக் கண்டு அவன் கருத்தைச் சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை.
அவனிடம் கேட்பதுமில்லை… அவனிடம் சொல்வதுமில்லை… அவனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை…!
இறந்த பின்… உடலை விட்டு உயிர் போய்விட்டது…! என்ற நிலையில் உயிர் இருக்கிறதா…
அல்லது போய்விட்டதா…? என்று அந்தக் கடைசி நேரம் மட்டும் தான் உயிரைப் பற்றி எண்ணிப்
பார்க்கும் நிலையில் உள்ளோம்.
இந்த உடலில் உயிர் இருக்கும் பொழுதே “ஈஸ்வரா…! என்று அவனை மதித்து ஒவ்வொரு விஷயத்திலும்
அவனுடன் கலந்து அவனின் கருத்தை அறிந்தால் அவனுடன் என்றுமே இணைந்து அழியாத வாழ்க்கை
வாழலாம் என்பதை அறிய வேண்டும். இது தான் மெய் ஞானிகள் கண்ட அற வழி.
ஏனென்றால் உடல்கள் அழிகிறது. உயிர் என்றுமே அழிவதில்லை. சிறிது காலத்தில் அழிந்து
போகும் இந்த உடலுக்காக வாழாமல் உயிருக்காக வாழ வேண்டும்.
இந்த உடலோ பூமிக்குச் சொந்தமானது. உயிரோ விண்ணிலே தோன்றியது. விண்ணிலே தோன்றிய
உயிர் பூமிக்கு விஜயம் செய்து உடல் பெறும் நிலையில் பரிணாம வளர்ச்சிக்கு வருகிறது.
1.பரிணாம வளர்ச்சியில் நம்மை மனிதனாக உருவாக்கிய உயிருக்கு…
2.நம்மை ஆளும் ஆண்டவனுக்குச் சேவை செய்வதே முதல் நம் கடமை ஆகும்.
சேவை என்பது இந்த உடல் வாழ்க்கையில் நாம் சொத்து சுகம் மக்கள் என்று வாழ்ந்து
மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கு வாழ்வதல்ல…!
நம்மைப் போன்று மனிதனாகத் தோன்றி உயிருடன் ஒன்றிய ஒளியாக இருக்கும் விண்ணின்
ஆற்றலைப் பெற்ற அந்த மெய் ஞானிகளின் அருளாற்றலை நம்முடைய உயிராத்மாவிற்குச் சொத்தாகச்
சேமிக்க வேண்டும்.
1.படைப்பின் படைப்பை…
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக
3.பேரொளியாக நாம் ஆக வேண்டும்…!
இது தான் படைத்தவனின் தத்துவம்…!