ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2019

நம்முடைய ஆயுள் காலம் எதிலே இருக்கிறது...? எப்படி இருக்க வேண்டும்...?


இந்த உலகமும் இந்தப் பிரபஞ்சமும் எப்படி இயக்குகின்றது...? இந்த பிரபஞ்சத்தில் உருவாகும் உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது...? என்ற பேருண்மைகளை எல்லாம் நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அகண்ட அண்டங்களாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே வாழ்கிறது. ஒரு சூரியக் குடும்பத்திலிருந்து வரும் உணர்வுகள் அடுத்த மண்டலத்திற்கு உணவாகச் செல்லும்.

அப்படிப் பிற மண்டலங்களில் இருந்து வருவதை 27 நட்சத்திரங்களும் கவர்ந்து பால்வெளி மண்டலமாக்கி அதைத் தூசிகளாகத் துகள்களாக அனுப்புகிறது.

அப்படி வரும் துகள்களைக் கோள்கள் ஒவ்வொன்றும் அதனதன் பங்குக்கு எடுத்துக் கொள்கிறது. இது எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சூரியனின் ஈர்ப்புக்குள் வந்த பின் அது மோதி விஷத்தைப் பிரித்து வெப்ப காந்த அலைகளாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குகிறது.

அதே போல் தான் மனிதர்களாக வாழும் நிலையில்
1.வெளியிலிருந்து நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும்
2.நம் உடலில் என்னென்ன உறுப்புகள் இருக்கிறதோ அது அது பிரித்து எடுத்து
3.அந்தந்த அணுக்களுக்குண்டான ஆகாரமாகக் கொடுக்கின்றது.
4.அதன் வழி கொண்டு அந்த உறுப்புகள் வளர்ச்சியாகிறது.
5.உறுப்புகளின் உணர்வுகள் அந்தந்தப் பாகத்திற்கொப்ப மலங்களை உருவாகும் போது உடலின் அமைப்பு உருவாகிறது.

நம்முடைய பிரபஞ்சத்தில் இயக்கங்கள் எப்படி இருக்கின்றதோ அதே போல் நாமும் ஒரு பிரபஞ்சம். இரண்டாயிரம் சூரிய குடும்பங்கள் என்று சொல்லும் பொழுது இரண்டாயிரம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் கலக்கின்றோம்.

அகண்ட அண்டம் என்றாலும் அதற்குள் இரண்டாயிரம் சூரிய குடும்பங்கள் உருவாகின்றது போலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஒரு பிரபஞ்சம்.

இரண்டாயிரம் மனிதர்கள் சேர்த்தால் ஒரு அகண்ட அண்டம் என்ற நிலை வரும். இதற்குள் விளையும் உணர்வுகள் ஒருவருக்கொருவர் பரிமாற்றம். அதிலே எதனின் உணர்வுகளை நாம் சேர்க்கிறோமோ அதனின் வளர்ச்சியாகத்தான் நாம் இருப்போம்.

ஒருவருக்கொருவர் இப்படிப் பரிமாறும் நிலையில்... குடும்பப் பற்று கொண்டு வாழும் பொழுது
1.என்னை இப்படிப் பேசிவிட்டானே...
2.என்னை இப்படிக் கேவலப்படுத்தி விட்டானே.. என்ற இந்த உணர்வை எண்ணி எடுத்துக் கொண்டால் 
3.வேதனையும் வெறுப்பும் அதிகமாக வளர்ந்து நம் ஆயுள் காலம் எதலே முடியும்...?
4.யார் நம்மைத் திட்டினானோ அவன் உடலில் போய் அவனை வீழ்த்த முடியும்.
5.அவனையும் வீழ்த்தியவுடனே அந்த ஆயுள் காலம் என்ன செய்யும்...?
6.விஷத்தின் தன்மைகள் அதிகமாகி மனித ரூபமற்ற நிலைகளாக மிருகங்களாகவோ விஷ ஜெந்துக்களாகவோ மாறி
7.வீரிய உணர்வு கொண்டு மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அசுர உணர்வுகளாக நம்முடைய ஆயுள் காலம் அதுவாக மாறும்.

ஆகவே அந்த ஆயுள் காலம் நாம் எதற்குப் போக வேண்டும்...? நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தீமைகளை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் ஆயுள் மெம்பராக இணைய வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை எல்லாம் உணர்ந்து
1.இருளை அகற்றியவன்
2.அகத்தின் உணர்வுகளை அறிந்தவன்
3.உண்மையின் இயக்கத்தை அறிந்தவன்
4.துருவத்தின் ஆற்றலை தனக்குள் உருவாக்கி அந்த உணர்வின் தன்மையைத் தன் உடலில் திருப்பம் ஆனவன்
5.தான் பெற்ற ஆற்றல்களை எல்லாம் தன் மனைவிக்குக் கொடுத்து மனைவியின் உணர்வோடு இணைத்தவன்
6.ஆண் பெண் என்ற உணர்வு கொண்டு அருள் உணர்வுகளை வளர்த்தவன் தான் “அகஸ்தியன்...!”
7.அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மையை எடுத்து நாம் ஆயுள் கால மெம்பராகும் போது அது அது எடுத்து நாம் எதிலே இருக்க வேண்டுமோ அதில் இருக்க வேண்டும்.

இதை எல்லாம் நீங்கள் முழுமையாக உணர வேண்டும் என்பதற்குத்தான் அகஸ்தியமாமகரிஷியின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.