ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 15, 2019

சுவாச நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது – 2


அகம் புறம் ஞானம் இந்த நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்குக் கொண்டுவர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணி…
2.புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்றுள்ளார்கள்.
3.ஞானத்தையே மறந்து விட்டார்கள்…!

ஒவ்வொரு மனிதனுக்கும் எல்லாச் சக்திகளையும் அளித்துள்ளான் அந்தச் சக்தி தேவன்.
1.அந்த நிலையை எப்படி ஈர்த்து வாழ்வது…? என்ற நிலையை
2.நாம் தான் வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

நம் ஞானக் கண்ணினால்… நாம் இருந்த நிலை கொண்டே உலகனைத்திலும் உள்ள நிலைகளை அறிந்து செயல்பட முடியும். நம் ஞானக் கண்ணினால்
1.நாம் நம்மை மறந்து
2.தியான நிலையில் அமர்ந்து காண்பதல்ல… அந்த ஞானக் கண்ணின் நிலை…!

நாம் சகல நிலை கொண்டும் வாழும் வாழ்க்கை முறையில் வாழும் பொழுது கோப நிலையில்… சாந்த நிலையில்… துவேஷ நிலையில்… பிறரைப் போற்றும் நிலையில்… சோர்வு நிலையில்… மகிழ்வு நிலையில்…! இப்படிப் பல நிலை கொண்ட வாழ்க்கை நிலையில்
1.ஒவ்வொரு நிலை கொண்டும் நாம் இருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலை நம் உயிரணுவிற்கு எந்த நிலையை ஏற்றுத் தருகிறதோ
3.அந்த நிலையிலிருந்து தான் அகம் புறம் ஞானம் செயல்படுகின்றது.

நடை முறையில் சஞ்சலங்களும் இன்பங்களும் நம் வாழ்க்கையுடனே கலந்து தான் வரும். வந்ததை எண்ணியோ… வருவதை எண்ணிக் கொண்டோ.. இருந்து என்ன பயன்…?

ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு அச்சக்தியிலிருந்து கிடைத்த அந்த ஞானக் கண்ணின் நிலையைப் பெற்று நம் ஆத்மாவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1.நம் ஆத்மாவை நம் உடலும் நம் எண்ணமும் காத்துக் கொண்டிருக்கவில்லை.
2.நாம் எடுக்கும் சுவாச நிலையினால் தான் சகலமும் நமக்கு நடக்கிறது.
3.சுவாசம் என்பதனை ஒரு பெரும் பொக்கிஷமாக யாரும் எண்ணுவதில்லை.

நம் உடலில் உள்ள எல்லாப் பாகங்களுமே அச்சுவாச நிலையை ஈர்த்து  வெளியிடும் தன்மையுள்ளது. இந்த நிலையின் உண்மையெல்லாம் அன்றைய ஞானிகள் தன் ஞான நிலையில் அறிந்து வெளியிட்டுள்ளார்கள்.

அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளையே நம்முடைய சுவாசமாக்கிடல் வேண்டும்…!