ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2019

உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பத்தால் என்னென்ன நன்மைகள் உண்டு...?

சமையல் செய்யும் பொழுது அதிலே பல பல பொருள்களைப் போடுகிறோம். நெருப்பை வைத்து வேக வைக்கப்படும் பொழுது பார்த்தால் பல விதமான வாசனைகள் வருகிறது.
1.ஏனென்றால் நெருப்பிலே போட்டு இரண்டறக் கலந்து
2.அது வேகப்படும் பொழுது தான் அது ருசியாக மாறுகிறது.
3.இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் இரண்டறக் கலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

எப்படி...?

நம் உயிர் இந்த உடலுக்குக் குருவாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்கோ வியாழன் கோள் குருவாக இருக்கின்றது.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களிலிருந்தும் வெளி வரும் தூசிகள் (கதிரியக்கச் சக்திகள்) ஒன்றுடன் ஒன்று மோதி மின்னல்களாகத் தாக்கப்பட்டு மற்ற கோள்களின் சத்துடன் கலக்கப்பட்டு அந்த உணர்வுகள் வந்தாலும்
1.இவை அனைத்தையும் ஒருக்க ஏற்றி இணைத்திடும் பாலமாக வியாழன் கோள் இருக்கின்றது.
2.ஆக எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வியாழன் கோளின் சத்து கலந்தால் தான்
3.மற்றதுடன் இணைத்து அந்த அணுத் தன்மைகளை மாற்றும் நிலை வரும்.
4.(இல்லை என்றால் வளர்ச்சி இருக்காது)

அதே போல் தான் நம் உயிரின் தன்மையும் குருவாக இயக்குகிறது.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் எதை எல்லாம் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ நுகர்கின்றோமோ அதையெல்லாம் நம் உயிர் இணைத்து நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது. இது தான் நம் உயிரின் இயல்பு.

இயல்பாக இப்படி இருந்தாலும்
1.நம் உயிரின் துணை கொண்டு அதாவது உயிரான குருவின் துணை கொண்டு
2.எந்தெந்த உணர்வின் தன்மைகளைச் சேர்க்கின்றோமோ
3.அதற்குத்தக்கவாறு மற்றதை எல்லாம் நாம் மாற்ற முடியும்.

நமது ஆறாவது அறிவை முருகா என்றும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டினார்கள் ஞானிகள். அதே சமயத்தில் முருகனை “குமரகுரு... குருபரன்...!” என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அதை வைத்து மாற்றியமைக்கும் தன்மை வருகிறது.

ஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய மெய் ஞானிகளின் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி நமக்குள் இணைத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் உணர்வை இப்படி இணைத்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் அகற்றி உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அமைக்க முடியும்...!

இதைக் கொண்டு நாம் இணைத்து நல்ல உணர்வுகளை நாம் வளர்த்தல் வேண்டும். நம் ஞானிகள் காரணப் பெயரை வைத்துக் காட்டியதன் நிலைகள் சாதாரணமானதல்ல.

யாரோ செய்வார்... எவரோ செய்வார்...! என்றால் யாரும் செய்து கொடுக்க முடியாது...! உருவாக்கும் சக்தியான உயிரிடேமே வேண்டினால் தான் நாம் மாற்றி அமைக்க முடியும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.