ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2019

ஆசை இல்லை என்றால் எதுவுமே இல்லை...! - ஆசையைப் பற்றி ஈஸ்வரப்பட்டர் சொன்னது...!


1.பற்றற்று இருக்க வேண்டும்...
2.ஆசையில்லாவிட்டால் தான் உலக ஞானம் பெற முடியும் என்பது எல்லாம் இவர்களாகச் சொன்ன கதை.

பெரும் ஆசையினால் வந்தது தான் இந்த உலகமே. ஆசையில்லா விட்டால் இவ்வுலகமே இல்லை... ஜீவனும் இல்லை... பந்த பாசமும் இல்லை... பாற்கடலுமில்லை... பாழடைந்த நிலை தான் எங்கும் இருக்கும்...!

மனிதனின் எண்ணமும் ஆசை தான். ஈசனின் எண்ணமும் ஆசை தான். ஈசனின் ஆசையிலே தான் உலகமே உள்ளது. இந்த உலகம் மட்டுமல்ல... எல்லா உலகமும் ஈசனின் ஆசையில் தான் உள்ளது. ஈசனின் அருளைப் பெற்றிடவே பெரும் ஆசைதான் வேண்டும்.

1.பற்றற்றவன் என்பவனுக்கும் ஆசை இல்லாமல் இல்லை.
2.ஆசையில்லாதவன்...! என்று எவனும் இல்லை.
3.சித்தனுக்கும் ஞானிக்கும் மகரிஷிக்கும் ஆசையுண்டு.

ஈசனுக்கு ஆசையுள்ளதால் தான் ஞானி சித்தன் மனிதன் உயிரினங்கள் எல்லா ஜீவராசிகளுக்குமே ஈசனின் அருளை அளித்திடுகின்றான்.

எண்ணத்தை இன்பமாக்குங்கள் என்று சொல்லும் பொழுது அந்த எண்ணம் ஆசையில் தான் வருகிறது.
1.ஆசைக்கு நான் (ஈஸ்வரபட்டர்) எதிரியல்ல.
2.ஆசையுடன் தான் நானும் உள்ளேன்.
3.ஆசையுடனே இருந்திடுங்கள்..!

ஆசை என்பது வேறு... ஆனால் பேராசை என்பது வேறு...! பேராசை என்னும் பேயை ஒட்டிவிடுங்கள்.

“சுவாச நிலை... சுவாச நிலை...!” என்பதெல்லாம் நம் மனதைச் சாந்த நிலையில் வைத்துக் கொண்டு
1.நம் மனதில் வந்து மோதும் கோபம் தாபம் குரோதம்
2.எது வந்தாலும் அந்த நிலையை அடக்கிக் கொண்டு
3.பெரும் சாந்த நிலைக்கு வருவது தான் சுவாச நிலை.

அச்சுவாச நிலை வருவதற்கே அந்த ஆசை இருந்தால் தான் சுவாச நிலையே வரும். ஆசை தான் மனிதனே. சோர்வல்ல மனிதன்.

ஆசையை அடக்கிவிடு... ஆசையை அடக்கிவிடு...! என்று சொல்வதெல்லாம் சொல்பவனுக்கே அந்த நிலை இருப்பதில்லை.

1.ஆசையை விட்டுவிட்டால் இந்த ஆன்மாவுக்கு என்ன வேலை இந்த உடலில்...?
2.ஆசையை அடக்குபவனின் ஆன்மா தானாகப் பிரிந்துவிடும் தன்  நிலைக்கே.

இவ்வுலகில் நாம் பிறந்த பலனை (மெய்ப் பொருளை அடைய) ஆசையுடனே பெற வேண்டும். நாம் பெற்ற குழந்தையை ஆசை இருந்தால் தான் வளர்க்க முடியும். உண்ணும் உணவையும் ஆசைய்டன் தான் உண்ண முடியும்.

ஆசையுடன் இருங்கள் என்பதும்... அன்புடன் இருங்கள் என்பதும்... ஒன்றே தான். ஆசை இல்லை என்றால் இந்த உலகில் அலையுமில்லை கடலுமில்லை.

செடிக்கும் மரத்திற்கும் ஆசையுள்ளது. மண் பேசும் கல் பேசும் என்பதும் இந்த ஆசையினால் தான். ஆசையில்லாதவன் பிறந்ததுமில்லை. ஆசையில்லாதவன் பிறக்கப் போவதுமில்லை.

ஆசையைப் பற்றிச் சொல்லும் பொருள் எல்லாம் என்ன என்றால்
1.தன் நிலை அறிந்து
2.உன் ஆசையை எண்ண வேண்டும் என்பது தான் அதனின் பொருளே.

ஆசையுடன் அருள் செய்வாய்... “குருதேவா ஈஸ்வரா...!”
ஆசையான இவ்வுலகில் ஆசையுடன் இருந்திடவே
ஆசையுடன் அருளிடுங்கள் நல்லாசியை...
ஆசையுடன் அருளிடுங்கள் நல்லாசியை...!

ஆசை ஆசை என்பதெல்லாம் உன் அருளைப் பெற்றிடவே – உன்
ஆசையை என் ஆசையில் பதித்திடப்பா...!
ஆசை மனதை எனக்கருளி
ஆசை அமுதை எனக்கூட்டு...!

ஆசையுடன் நான் தியானம் செய்ய ஆசியும் அருளும் வேண்டுமப்பா
ஆசியும் அருளும் வேண்டுமப்பா... ஆசியும் அருளும் வேண்டுமப்பா...!