ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 20, 2019

ஆண்டவனின் அன்பைப் பெறும் வழியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது...!


1.மனித எண்ணத்தின் வேகம் என்பது
2.இந்த உலகிலுள்ள எல்லா வேகங்களுக்கும் மேல் துரிதமான வேகம் என்று
3.பல முறை சொல்லியுள்ளேன்.

நம் எண்ணத்தைப் பிறரின் எண்ணத்தில் மோதவிடும் பொழுது பிறரின் நிலையும் மாறுபட்டுச் செயல்படும் தன்மை வலுவாகிறது.

இந்த எண்ணத்தை வைத்துத்தான் உலக நிலையும்... உயிர் உதிக்கும் நிலையும்... உடலை விட்டு ஆத்மா பிரியும் நிலையும்... எல்லாமே வருகின்றன.

இந்த எண்ணத்தில் நாம் எந்த நிலையில் ஆசைப்படுகின்றோமோ அந்த நிலை கொண்டு தான் வேதனையும் மகிழ்ச்சியும் வருகின்றன. எண்ணத்தின் ஆசையை வளர விடுவதனால் பல வேதனையான நிலைகளை நம் வாழ்க்கை நிலையில் கண்டு வேதனைப்படுகின்றோம்.

இந்த எண்ணத்தினால் தான் எல்லா நிலைகளுமே வருகின்றன என்றேன்.
1.இந்த எண்ணத்தை வைத்தே ஒவ்வொரு ஆத்மாவும் அந்த உடலில் இருக்கும் நிலை கொண்டு
2.தன் எண்ணத்தை “ஓ..ம் ஈஸ்வரா…” என்ற நாதம் கொண்டு
3.ஒரே நிலையில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
4.இந்த உடல் வேறு... இந்த ஆத்மா வேறு...! என்ற நிலையைக் கண் கூடாகக் கண்டிடலாம்.
(சீராகத் தியானமிருப்பவர்களால் இதை நிச்சயம் உணர்ந்திருக்க முடியும்)

நம் ஆத்மாவின் நிலையை நாம் போற்றிப் பாதுகாத்தால் வாழ்க்கை நிலையில் நாம் பல சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டியதில்லை. ஏனென்றால் நம்மையே நாம் உணராத நிலையில்
1.பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது
2.பிறரின் அன்புக்கும் நம் ஆன்மாவை நாம் அடிமையாக்கிக் கொள்கிறோம்.
3.அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசை நிலை தான்.

ஆண்டவனையே ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். அந்த ஆண்டவன் நமக்கு எப்படி அன்பைப் பொழிவான்?

நம்முள் அதிக ஆசையை வளரவிட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
1.நம்முள்ளேயே சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
2.நம்மையே நாம் வெறுக்காமல்
3.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
4.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து
5.நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளேயே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் அவ்வாத்மா அமைதியுற்று அந்த ஆண்டவனின் சக்தியே
8.நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.

நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்த நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடலாகாது.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு அந்த ஆண்டவனா பொறுப்பாளி? நம்மில் இருக்கும் ஆண்டவனைக் கண்டிட நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.அப்பொழுது தான் அந்த ஆண்டவனின் ஜெபத்திற்கும்
2.ஆண்டவனின் ஆசியைப் பெறுவதற்கும் உகந்தவர்களாகின்றோம்.