ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2019

மணம்… எண்ணம்… உணர்வு… மனம்... மனது… என்று ஆகி மனிதனாக எப்படி ஆனான் என்பது பற்றிய சித்தர்கள் பாடல் – 5


உயிரது வேறாய் உணர்வு எங்குமாகும்
உயிரை அறியில் உணர்வு எங்குமாகும்
உயிர் அன்று விழுங்கும் உணர்வை
அயரும் பெரும் பொருளாக ஆங்கு அறியாரே

நம் உயிர் எலெக்ட்ரிக்காக (இயக்கச் சக்தியாக) இருந்து நாம் நுகரும் உண்ர்வுகளை எல்லாம் எலக்ட்ரானிக்காக அதாவது உணர்ச்சிகளாக மாற்றிக் கொண்டே உள்ளது.

உயிரிலே பட்ட பின் தான் நமக்குள் எண்ணங்களும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் தோன்றுகின்றது.
1.அதனால் தான் உயிரை “அரங்கநாதன்…!” என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
2.இந்த உடலான அரங்கத்திற்குள் நாதங்களை எழுப்பி உணர்ச்சிகளை ஊட்டுகின்றது “ஆண்டாள்….”
3.அந்த உணர்ச்சிகளின் வழியே நாம் சென்றால் “ஆழ்வார்” ஆகின்றது.
4.காரணப் பெயர்களை நம் ஞானிகள் அவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

ஆகவே நாம் சுவாசிக்கும் உணர்வின் எண்ணங்களை வைத்துத்தான் நம் உயிர் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிய வேண்டும். மனிதன் என்றாலே எண்ணங்கள் தான்…! எண்ணங்கள் இல்லாத மனிதன் கிடையாது. எண்ணம் இல்லை என்றால் மனிதனும் இல்லை..!

மணம்… மனம்… மனது… மனிதன்…!
1.அதாவது நம்முடைய சுவாசத்தில் வழியாக வருவது மணங்கள்.
2.மணம் உயிரிலே பட்டால் அந்தந்த மணத்திற்குத்தக்க எண்ணங்கள் மனம்.
3.எந்த எண்ணம் வலுவாக இருக்கின்றதோ அந்த மனமே நமக்கு முன்னாடி நின்று நம்மை இயக்கி
4.சிந்திக்கும்படியாகவும் அதன் வழியில் செயலாக்கும்படியாகவும் செய்கிறது.

இருந்தாலும் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது இவை அனைத்தையும் நம் உயிர் நமக்குள் உணர்ச்சிகளாக இயக்கி அதன் வழியில் அதை எல்லாம் உடலாகச் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கிறது.

அதனின் பொருள் என்ன என்றால் ஒவ்வொரு உணர்வையும் உயிர் விழுங்கிக் கொண்டே உள்ளது. நம்மை அதுவாக ஆக்கிக் கொண்டே உள்ளது.
1.நான்… நான்..! என்று நாம் ஒவ்வொரு நொடியிலேயும் (அந்தந்தச் சந்தர்பங்களில்) எண்ணிச் சுவாசித்தாலும்
2.உயிரால் அது விழுங்கப்பட்டுக் கொண்டேயுள்ளது.
3.நம்முடைய குணத்தையும் செயலையும் அது மாற்றிக் கொண்டே வருகின்றது.

இதைத்தான் மாரியம்மன் கோவிலில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.  அதாவது நாம் சுவாசிப்பது நமக்குள் மாறி நமதாக மாறுகின்றது. எதை அழுத்தமாக எண்ணிச் சுவாசிக்கின்றோமோ (விரும்பினாலும் விரும்பா விட்டாலும்) அது நமக்குள் மாறி – தாயாக (மாரியம்மா) நம்மை வளர்க்கிறது என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இத்தனை நிலைகள் செயல்படும் நிலையில் நாம் என்ன நினைப்போம்…? நான் நல்லதைத் தான் நினைக்கின்றேன்… நல்லதைத்தான் செய்கின்றேன்….! யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை.

ஆனால் ஆண்டவன் என்னை ஏனோ சோதிக்கின்றான் என்றால் அது எப்படிச் சரியாகும்..? நம் உயிரால் விழுங்கப்பட்ட உணர்வின் இயக்கம் அவ்வாறு தான் இயக்கும்.

ஏனென்றால் நம்முடைய எண்ணங்களைப் பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ பக்தி வழியில் செல்வோரும் சரி இன்றைய விஞ்ஞானமும் சரி ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை.
1.விஞ்ஞானம் புறப் பொருளைக் கண்டறிவதில் தான் குறியாக உள்ளது.
2.பக்தியில் உள்ளவர்களோ புறத்தில் எங்கோ இருக்கும் ஆண்டவனைத் தேடிக் கொண்டு
3.அவனால் நமக்கு நிறைய காரியங்கள் ஆக வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் மெய் ஞானிகள் கண்டது…
1.நம் சுவாச நிலையையும் நம் எண்ணங்களையும் உயிர் அதை எப்படி உடலாக மாற்றுகின்றது…?
2.ஆகவே எதை நம் சுவாசமாக்க வேண்டும்…?
3.நம்முடைய எண்ணம் எதுவாக இருக்க வேண்டும்…?
4.நமக்குள் எதை உருவாக்க வேண்டும்…?
5.இந்த உடலுக்குப் பின் என்ன என்று அறிந்து
6.அரங்கநாதனாக இருக்கும் ஈசனாக இயக்கிக் கொண்டிருக்கும் உயிருடன் ஒன்றி விண்ணின் ஆற்றல்களைப் பருகி
7.உயிரைப் போன்றே நுகரும் உணர்வுகளை எல்லாம்… தான் சுவாசிப்பதை எல்லாம் ஒளியாகப் பேரொளியாக மாற்றி ஆத்ம ஜோதியாகி
8.இன்றும் விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும் முப்பத்து முக்கோடித் தேவாதி தேவர்கள் என்று சப்தரிஷி மண்டலமாகவும் அழியாத வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

மனிதனின் கடைசி எல்லை அது தான்…!