தன்னை அறிந்திடும்
தத்துவ ஞானிகள்
முன் வினையின் முடிச்சை
அவிழ்ப்பார்கள்
பின் வினையைப் பிடித்துப்
பிசைவார்கள்
எண்ணியதில் வைத்து
ஈசன் அருளால் அன்றோ
நம் உயிரே ஈசனாக
இருந்து கடவுளாக உள் நின்று இயக்குகின்றான். ஈசன் அமைத்த கோட்டையே இந்த உடல். ஈசன்
வீற்றிருக்கும் இந்த உடலே ஆலயம். மனிதனை உருவாக்கிய நற்குணங்கள் அனைத்தும் தெய்வமாக
அதற்குள் கொலு வீற்றிருக்கின்றது.
நாம் சுவாசிப்பது
கேட்பது பார்ப்பது அனைத்தையும் அணுவாக உருவாக்கும் கருவாக நம் உயிர் உருவாக்கி உடலாக
ஆக்கிக் கொண்டே இருக்கின்றது
1.முன் சேர்த்துக்
கொண்ட வினைகளுக்கொப்பத்தான் இந்த மனிதப் பிறவியே அமைந்துள்ளது.
2.அது மட்டுமல்லாது
தாயின் கருவிலே இருக்கும் பொழுது தாய் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும்
3.பிறக்கும் ஒவ்வொரு
குழந்தைக்கும் பூர்வ புண்ணியமாக வந்து சேர்கிறது.
இந்த இரண்டும் சேர்ந்து
தான் இந்த மனித உடல் வாழ்க்கையின் பாதையையே (நன்மை தீமைகளை) நிர்ணயிக்கின்றது. ஆகவே
அதை எப்படி மாற்றியமைப்பது...? என்று அந்த பிரம்மத்தின் இரகசியத்தை உணர்ந்தவர்கள் தான்
அந்த மெய் ஞானிகள்.
அதன் படி
1.இந்த உயிருக்கு
அழிவில்லை.
2.ஆனால் உடல்கள்
அழிகின்றது. உணர்வுகள் மாறுகின்றது.
3.நுகர்ந்த உணர்வுக்கொப்ப
உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது என்று கண்டுணர்ந்து
4.உயிர்... உணர்வு...
உடல்... என்ற நிலையில் தன்னைத் தான் அறிந்து
5.உயிரான ஈசனுடன்
ஒன்றி “அவன் வேறல்ல... நான் வேறல்ல...!” என்று ஆகி உயிருடன்
ஐக்கியமானவர்கள் மெய் ஞானிகள்.
உயிர் வழிச் சுவாசமாக
விண்ணின் ஆற்றல்களைச் சுவாசித்து அதன் மூலம் தன் ஆன்மாவில் இருக்கும் முன் ஜென்ம வினைகளையும்
தாய் கருவின் மூலம் வந்த தீய வினை சாப வினை பாவ வினைகளையும் அறுத்து தீமைகள் அனைத்தையும்
சுட்டுப் பொசுக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்கள் மெய் ஞானிகள்.
உடல் பெறும் உணர்வுகளை
இந்த உடல் வாழ்க்கையிலேயே கருக்கி ஒளியின் சுடராகப் பெருக்கும் பொழுது உயிருடன் ஒன்றும்
உணர்வுகள் அனைத்தும் வேகா நிலை பெறுகின்றது.
வேகா நிலை என்றால்
என்ன...? அகண்ட அண்டத்தில் யாராலும் அதை அழிக்க முடியாது. சூரியனோ கோள்களோ மற்ற எது
அழிந்தாலும் வேகா நிலையிலிருக்கும் இந்த உயிரான்மா அழியாது. அதை அழிப்பதற்குண்டான சக்தி
கிடையாது.
1.எத்தகைய விஷமான
உணர்வுகள் வந்தாலும் அதை அடக்கி
2.தனக்குள் உணவாக
எடுத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டு அகண்ட அண்டத்தில் பேரொளியாக மாறி
3.அது என்றுமே ஏகாந்தமாக
வாழும்.
நம்மை போன்று மனிதனாக
வாழ்ந்தவர்கள் தான் அத்தகைய வேகா நிலையை அடைந்து துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும்
இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
மனித உடலை உருவாக்கி
இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனைப் பற்றி அறிந்து அந்த உயிர் இயங்கத் தேவையான ஆற்றலைத்
தனக்குள் வளர்த்துப் பெருக்கிக் கொண்டதால்தான் அத்தகைய நிலையை அவர்கள் அடைந்துள்ளார்கள்.
1.உயிரை அறிவதே மெய்ப்
பொருள் காணும் நிலை.
2.உயிருடன் ஒன்றி
வாழ்வதே பேரின்ப வாழ்க்கை.