ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 18, 2019

நடந்தவைகளை விட்டுவிட்டு இனி நடக்கப்போவதை நல்லதாக எப்படி மாற்ற வேண்டும்...? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத இந்தப் புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலுமே கலந்துள்ள சக்தியை யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் ஒருநிலைப்படுத்திச் சொல்லும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்?

ஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து அவரவர்கள் வழிக்கு வணங்குகின்றார்கள். இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.

1.ஆண்டவனை வணங்கும் முறையையே
2.பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து
3.பொருள் உள்ளவர்கள் மட்டும் தான் ஆண்டவன் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி
4.ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை சாஸ்திரங்களின் பெயரால் “புரியாத நிலைப்படுத்தி வணங்குகின்றார்கள்...!”

ஆனால் ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம். எல்லோருமே ஆண்டவன் தான். ஏனென்றால் எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.

எத்தனையோ ஞானிகளும் மகான்களும் சாஸ்திரங்களாகக் கொடுத்த நற்போதனைகளை அவர்கள் உடலுடன் வாழ்ந்த காலத்தில் ஏற்று நடத்திடாமல் இன்று அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் நிலையே இன்று தொடர்கிறது.

ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதும் நல் உபதேசத்தை ஏற்கும் மன நிலையை மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

1.பத்திரிக்கைகளிலும் சினிமாவிலும் டி.வி.யிலும் மற்ற வழிகளிலும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில்
2.ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் படங்களைக் காட்சியாக காண்பித்து
3.மக்களின் மனதையே பெரும் உந்துதலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆட்சி செய்பவர்களும் உள்ளார்கள்.

ஆக மொத்தம் நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதை எல்லாம் மறந்து நாம் பயத்துடனே இன்று வாழ்கின்றோம்.

அதை எல்லாம் மாற்றிவிட்டு நம் பூமியிலே தோன்றி வாழ்ந்து வளர்ந்து சூட்சம நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் ஞானிகளின் ஆசியுடன் வாழ்கின்றோம் என்ற பேருண்மையை உணர்ந்து ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலை எல்லாம் மறந்து ஒவ்வொருவரும் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழுங்கள்.

1.இது வரை நடந்தவைகளை நடந்தவையாகவே விட்டு விட்டு
2.இனி நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன்
3.நம் உயிரணுவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து
4.நமக்காக மட்டும் வாழாமல் நம்முடன் தோன்றிய எல்லா உயிரணுக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.

அன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள் எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலமும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள். இக்கலியை கல்கியாக்கி வாழ்ந்திடுங்கள்.

1.கலியை ஆண்டவன் வந்து கல்கியாக்குவதில்லை.
2.இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன்கள் எல்லோருமே ஆண்டவன்கள் என்பது யாரென்று புரிந்ததா?
3.இக்கலியில் உள்ள உயிரணுக்களான நாம் எல்லோருமே தான் கலியைக் கல்கியாக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.

ஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை. மனிதர்கள் மன நிலையை வைத்துத்தான் கால நிலையும் மாறுகின்றது. ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்து மனிதரின் மன நிலையை வைத்துத் தான் மாறுபடுகிறது.

இன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இந்த மன நிலை மாறுவதற்காகத்தான்
1.நம் ஞானிகளின் நிலை கொண்டே நடந்திடும் பெரும் நாடகம்.
2.நாடகத்தின் தொடரை இனிக் கண்டு வாழ்ந்திடலாம்.

இந்த நிலையிலிருந்து மக்களின் மன நிலையில் பெறும் மாற்றம் வந்திடுமப்பா. அந்த நிலை நடப்பதற்காகத்தான் சூட்சம நிலையில் உள்ளவர்கள் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.

இன்றைய செயற்கையின் கோளத்தை அந்த நிலையின் உண்மைகளை நாமும் பார்த்திடலாம்.