ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2019

ஓ...ம் நமச்சிவாய...! சிவாய நம ஓ...ம்...! சதாசிவம்...!


நம் வாழ்க்கையில் பார்ப்பதை எல்லாம் சதாசிவமாக்கிக் கொண்டு வருகிறோம். அதாவது உடலாக ஆக்கிக் கொண்டேயுள்ளோம்.

உதாரணமாக ஒரு நோயால் அவதிப்படுவோரை உற்றுப் பார்த்து நுகர்ந்த உடனே
1.உயிரிலே பட்டு “ஓ...!” என்று பிரணவமாகி “ம்...! என்று நம் உடலாக ஆகின்றது. - அது தான் “ஓ...ம் நமச்சிவாய...!”
2.அடுத்து அவரிடம் நோயைப் பற்றி விசாரித்துக் கேட்டறிந்தவுடனே நோயால் வாடிக் கொண்டிருக்கின்றார்... என்று திருப்பிச் சொல்கிறோம். - அது “சிவாய நம ஓ...ம்...!

அதே போல் ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்று காதில் கேட்கிறோம். திட்டும் உணர்வை நுகரும் பொழுது ஓ...ம் நமச்சிவாய...! அந்த உணர்வை நுகர்ந்த பின் திட்டியவனைச் சும்மா விடுவதா...? விடக்கூடாது...! என்று திருப்பிச் சொல்கிறோம். அது சிவாய நம ஓ...ம்.

நோயுடன் வாடுபவரைப் பார்த்ததும் அடடா...! இந்த மாதிரி வேதனைப்படுகிறார் என்ற அந்த உணர்வின் தன்மையை நாம் எடுக்கின்றோம். அதே உணர்வு நமக்குள் விளைகிறது. ஒருவர் திட்டினால் அவருக்குப் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அதே கோப உணர்வை எடுக்கின்றோம். அதுவும் நம் உடலில் விளைகிறது.

நம்முடைய வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட உணர்வுகளைத்தான் சதாசிவமாக்கிக் கொண்டு இருக்கின்றோம்.
1.ஆனால் மனித உடல் பெற்றது என்பது பரசுராம்.
2.அதாவது சமப்படுத்தும் நிலைகள் பெற்றது தான் நம்முடைய மனித உடல் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காய்கறிகளை வேக வைக்கிறோம். சமைக்கும் பொழுது அதிலே பல சரக்குகளைச் சேர்த்துச் சுவையாக உருவாக்குகிறோம்... பரசுராம். அதே போல பலராம். அதாவது பலருடைய எண்ணங்களை நன்மை தீமை என்ற நிலைகளில் நாம் கேட்டு அறிகிறோம்.

ஆனாலும் நாம் செய்யும் நன்மைகளைக் காக்க வேண்டும் என்றால் அந்தத் தீமைகள் விளையாது தடுக்க (சமப்படுத்த) வேண்டும். தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்துச் சமப்படுத்தும் பொழுது அந்தத் தீமைகள் தணிகிறது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா...!

கொஞ்ச நாள் இதைச் செய்து பழகிவிட்டால் போதும். நீங்கள் சொல்ல வேண்டாம். தன்னாலேயே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்...! என்று உங்களைச் சொல்ல வைக்கும்.

1.கஷ்டங்கள் வரும் பொழுது இதற்கு முன்னாடி சொல்லி இருந்தால் ஐயய்யோ அம்மம்மா...! என்று சொல்வார்கள்.
2.இப்போது ஈஸ்வரா... என்று உயிரின் மீது நினைவுகள் வரும்
3.அப்படி நினைவு வரும் பொழுது அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டீர்கள் என்றால்
4.இது சிவமாகின்றது... ஒ...ம் நமச்சிவாய...! உடலுக்குள் ஞானிகணின் உணர்வுகள் விளையத் தொடங்கும்.

வேதனையோ கோபமோ பயமோ எது வந்தாலும் ஈஸ்வரா... என்று உயிரை எண்ணி அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை இணைத்து விட வேண்டும்.

இப்படி இணைத்துப் பழகி விட்டீர்கள் என்றால் எந்தத் துன்பத்தையும் நீக்க முடியும். உங்கள் சொல்லால் பிறருடைய துன்பத்தையும் போக்க முடியும். ஆக துன்பத்தைப் போக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைகிறது.

1.துன்பத்தையும் துயரத்தையும் காணும் பொழுது துன்பத்தை விளைவிக்கும் உணர்வுகள் விளைகிறது.
2.துன்பத்தை அகற்றிய மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்து விட்டீர்கள் என்றால் துன்பத்தை அடக்கும் சக்தி கிடைக்கின்றது. - பரசுராம்.
3.தியானம் என்பது இது தான்.

இதைச் செய்யாதபடி யாரோ செய்வார்... எவரோ செய்வார்...! என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வின் தன்மை வரும் பொழுது... இந்த உயிர் எதனின் வலுப் பெற்றதோ அங்கே கொண்டு செல்லும்.

நம் கண்ணின் நினைவு கொண்டு எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் வலுவை நமக்குள் சேர்க்கின்றது.
1.வான மண்டலத்தில் நினைவு செல்லும் பொழுது அங்கே தான் நாம் செல்வோம்.
2.அந்த உணர்வின் தன்மை ஆகும் பொழுது அது தான் கூர்மை அவதாரம்.

கண்ணன் என்ன செய்கின்றான்..,? அர்ச்சுனனுக்குக்ச் சாரதியாகப் போகின்றான். உதாரணமாக வேதனைப்படும் உணர்வுகளை எடுத்தால் அது வலிமையாகி அர்ச்சுனனாகின்றது. கண்ணன் சாரதியாகின்றான். வேதனை உணர்வை நமக்குள் சேர்க்கின்றோம்.

ஆனால் அதை மாற்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அது அர்ச்சுனனாகி வலிமையாகின்றது. அந்தக் கண்ணன் அங்கே அழைத்துக் கொண்டு போகின்றான்.
1.எதனின் உணர்வு வருகிறதோ அதற்குத் தக்க அந்தக் கூர்மை...
2.அதனின் வலுவாக நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது.
3.மகாபாரதத்தில் இதைக் கீதா உபதேசமாக வியாசகரால் இது தெளிவாக்கப்பட்டுள்ளது.

நான் (ஞானகுரு) ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. அவர்கள் சொன்னதைத்தான் திருப்பிச் சொல்கிறோம். விளக்கமாகச் சொல்கிறோம்... அவ்வளவு தான்...!