பிறந்தோர் கூறுவது
பெருகிய துன்பம்
பிறவார் கூறுவது
பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது
– பின்னது
அற்றோர் கூறுவர்
அறிக என்று அருளி
இன்று மனிதனாகப்
பிறந்து வாழும் எந்த மனிதரைக் கேட்டாலும்
1.என் வாழ்க்கையில்
அது கஷ்டம்... இது கஷ்டம்...!
2.உடல் நலம் சரியில்லை
தொழில் சரியில்லை... அது சரியில்லை இது சரியில்லை... குடும்பத்தில் என்னை யாரும் மதிக்கவில்லை...
என்று
3.தனக்கு வரும் சிறு
சிறு துன்பங்களையே பெரிதாக எண்ணி துன்பப்படுவதையே வாழ்க்கையாக அமைத்து
4.இப்படி எதிலும்
நிறைவடையாதபடி “என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லையே...!” என்ற ஏக்கத்திலேயே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
பிறவா நிலை பெறும்
எண்ணத்தில் வாழும் ஞானிகளோ தன் வாழ்க்கையில் வந்த அல்லது வரும் ஒவ்வொரு துன்பத்தையும்
அதை எப்படி நல்லதாக மாற்ற வேண்டும்...? என்று அறிந்துணர்ந்தவர்கள்... அதிலே கை தேர்ந்தவர்கள்...!
மேலும் இந்த உடலில்
வாழும் காலத்திற்குள் “தனக்குள் எதை நிறைவாக்க வேண்டும்...?” என்று அதைத் தனக்குள் முழுமைப்படுத்திக் கொண்டவர்கள்.
உதாரணமாக நெல் பயிரைப்
பயிரிட்டு வளர்க்கிறோம் என்றால் அது விளைந்தவுடனே நான்கு மாதமோ ஐந்து மாதமோ ஆறு மாதமோ
அதற்குள் அறுவடை செய்துவிடுகின்றோம்.
1.விளைந்த பயிரை
முற்ற விட்டு விளைச்சலை வீணாக்குவதில்லை.
2.அதே சமயத்தில்
நன்றாக விளைவதற்கு முன்னாடியே அதை அறுவடை செய்வதுமில்லை.
சரியாக விளையவில்லை
என்றால் என்ன செய்கிறோம்...!
அது என்ன...? எதனால்...?
என்று பார்த்து அதற்கு வேண்டியோ நீரோ உரமோ மற்ற சத்துக்களையோ கொடுத்து மகசூலை எப்படியாவது
நல்ல முறையில் கொண்டு வர வேண்டும் என்று முழுமூச்சாகச் செயல்படுத்துகின்றோம்.
இதைப் போன்று தான்
பிறந்ததன் பலனை வீணாக்கி விடக் கூடாது என்ற நிலையில் ஞானிகளின் செயல்கள் அமைகின்றது.
அவர்கள் இந்த உடல் வாழ்க்கைக் காலத்தைப் (வயது) பெரிதாக எண்ணுவதில்லை.
1.சாதாரண மனிதர்களைப்
போன்று சுகத்தையும் மரியாதையையும் கௌரவத்தையும் எண்ணி
2.அதைத் தேடிக் கொண்டு
அல்லது அதை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டு வாழ்வதில்லை.
உடலை உருவாக்கிய
உயிரான ஈசனை அணுகி அவன் துணை கொண்டு
1.உயர்ந்த உணர்வுகளை
இந்த உடல் என்ற சட்டியிலே சமைத்து
2.அதை ஒவ்வொரு நாளும்
சுவையாகப் பருகி
3.உயிராத்மாவை அழியாததாக
மாற்றிப் பேரொளியாக மாறி
4.இந்த உடல் என்ற
கூட்டைப் பிளந்து (பிய்த்து)
5.உடல் பெறும் உணர்வுகளையே
அறுத்துச் செல்கின்றார்கள்.
விளைந்த பயிரில்
உள்ள நெல் மணிகளை அறுத்து எடுப்பது போல் உயிரிலே மணியான ஒளியான உணர்வுகளைச் சேர்த்து
உடலை விட்டு அகன்று செல்கிறார்கள். அந்த எண்ணம் அதிகமாக இருப்பதால் அவர்களுக்குப் பேரின்ப
வாழ்க்கையாக அமைகின்றது.
மனிதர்களாக வாழும்
நாம் இந்த உடல் வாழ்க்கையை விரும்பி என் குடும்பத்திற்காக நான் வாழ்கிறேன் என்று சொல்லிக்
கொண்டு
தன் குடும்பம்..
தன் மக்கள்..
தன் சொத்து... என்று
ஏங்கிக் கொண்டு
உடலையே எண்ணி எண்ணித்
துன்பத்தையே அனுபவிக்கின்றோம்.
ஆனால் ஞானிகளோ தன்
உடலை (வெறும்) கருவியாகப் பயன்படுத்தித் தன் உயிராத்மாவை ஒளியாக (மணியாக) மாற்ற வேண்டும்
என்ற அந்தக் குறிக்கோளுடன் வாழ்கின்றார்கள்.
நம்முடைய
பற்று எப்படி இருக்கிறது...? “கிடைக்கவில்லையே...!” என்ற ஏக்கத்திலேயே
வாழ்க்கை முடிந்து விடுகின்றது.
1.நினைப்பது நடக்கவில்லையே...
என்று சிறு குழந்தையும் எண்ணுகிறது...!
2.வாழ்ந்து இறக்கும்
தருவாயில் உள்ள மனிதனும் இதைத் தான் எண்ணுகின்றான்.
பிறந்தவர்கள் எல்லோரும்
ஒரு நாள் இறக்கத்தான் போகின்றோம் என்று தெரிந்தாலும் காக்க முடியாத அந்த உடலைக் காக்கும்
ஆசையிலேயே வாழ்வதால் துன்பம் தான் எல்லையாகின்றது.
இதை முழுமையாக உணர்ந்தறிந்தவனே
மெய் ஞானியாக ஆகின்றான். அது மட்டுமல்ல...!
சிறிது காலமே வாழும்
இந்த உடலிலிருந்து தான் பெற வேண்டிய மகத்துவமான சக்திகளைத் தனக்குள் சேமித்து
1.அந்த ஆற்றலைக்
கொண்டு விண்ணுலகம் சென்று
2.என்றுமே ஏகாந்தமாக
வாழும் அழியா ஒளி உடல் பெறுகின்றான்.
3.தன் அருளைப் பாய்ச்சி
மற்ற மனிதருக்கும் அந்த மெய் வழியைக் காட்டுகின்றான்.
4.மெய் ஞான அறிவை
ஊட்டுகின்றான்.
மெய் ஞானத்தின் வீரியத்தின்
உண்மை இது...!