ஜெப நிலையைக் கூட்டிக் கொள்
ஜெபத்துடனே நான் இருப்பேன்
ஜெபமெல்லாம் உன்னுடனே
ஜெபிப்பதெல்லாம் உன்னுள்ளே
ஜெபித்ததெல்லாம் நானல்லவோ..!
இந்நிலையில் நான் இருக்க
உனக்கு இனி கவலையில்லை
பாடும் பாடல் நானல்லவோ
பாடிய குரல் எனதல்லவோ – புரிந்ததா…?
உன் நிலை மறந்திடாமல்
ஜெப நிலையில் வந்துவிட்டால்
எந்நிலையும் கிட்டிவிடும்
என்ற பொருள் இதுவே…!
ஜோதி நிலை தந்திடுவேன்
ஜோதியுடன் கலந்திடுவாய்
ஜோதியாகி உலகத்தையே
ஜோதி மயம் ஆக்கிடுவாய்…!
பாடலின் தன்மையைப் புரிந்து பாட வேண்டும். நாம்
சொல்கிற வார்த்தையிலும் செய்கிற செயலிலும் நம் நினைவு ஆழமாக அதில் ஒன்றி இருக்க வேண்டும்..!
உனதல்ல… எனதல்ல… இந்த உலகம்…! என்று ஏற்கனவே சொல்லியுள்ளேன்.
ஆத்மீக வழியைப் பெறுவதற்கு வயது வரம்பு தேவையில்லை - ஏற்றுக் கொள்ளும் நிலையும் நம்பிக்கையும்
உள்ளவர்களுக்கு.
ஆசையைத் தூண்டத்தான் இந்தப் பாட்டு. உன் பாடலை எனதாக்கு.
என் பாடலை உனதாக்குகின்றேன். உன் நிலையை மாற்றிக் கொள். காலம் கனிந்து வரும்.
1.எனக்கு நல்ல மனம் கொடு…! என்று சொல்லும் பொழுது
2.எல்லோரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை
3.பக்குவ நிலையில் உள்ளவர்களே ஏற்றுக் கொள்வார்கள்.
ஆகவே எந்த ஒரு துளி நிலையும் வீண் செய்யாமல் காலத்தை
உபயோகப்படுத்துங்கள். உங்கள் வழி நல் வழியாகட்டும். தட்டில் சாப்பாடு உள்ளது. எடுத்து
சாப்பிடுவது அவரவர்கள் வேலை.
அருள் மணங்களைப் பெற்றிடுங்கள். நம்பி வந்த பாதையை
வென்று வாருங்கள். சித்தனின் நிலையைக் காண்பீர்கள். சித்தனாகிச் சித்தனுடன் கலந்திடுவீர்கள்.
நேரத்தை வீணாக்காதீர்கள். கால நிலை குறுகி விட்டது.
காற்றுடன் கலந்து வாருங்கள். கஷ்டங்கள் வந்தாலும் என் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்)
அருள் உங்களுடனே…!