ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2019

கடைசி உடலாக இருக்கும் மனித உடலில் உணர்வுகளை எல்லாம் ஒன்றாக்கி உயிருடன் (இராமேஸ்வரத்தில்) ஒன்றச் செய்தால் இராமலிங்கம்...!


மனித உடல் பெற்ற நிலையில் நமக்குள் கோடிக்கணக்கான உணர்வுகள் உண்டு.
1.நம் உணர்வுகள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து
2.அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை வளர்க்கப்படும் போது
3.”இந்தத் தனுசு...!” எல்லாவற்றையும் சேர்த்து ஒரு நிலைகள் ஆகின்றது.

இராமயாணத்தில் எண்ணங்களை ஒன்று சேர்த்து இராமன் கடைசி நிலையில் இராமேஸ்வரத்தில் இராமலிங்கத்தைப் பூஜித்தான் என்ற நிலை போல் நாம் ஒவ்வொரு நாள் எடுக்கும் தியானத்திலும் இதைச் சேர்த்துச் சேர்த்து ஒன்றாக்க வேண்டும்,

1.“தனுசு...” அதாவது - எண்ணத்தால் உருவாக்கிய இடங்கள் என்ற நிலையைக் காட்டுவது தான் இராமேஸ்வரம்.
2.எதை எதை எண்ணங்கள் எண்ணி எடுத்துக் கொண்டோமோ
3.அது உருவாக்கிய உணர்வின் தன்மை ஈசனாகி
4.இருளை நீக்கி மெய்ப் பொருளை காணும் உணர்வை உருவாக்கும் நிலைகள் தான் அது.

அதாவது இன்று நாம் கோடிக்கரையில் இருக்கின்றோம். மனித உடல் பெற்ற பின் தான் இந்தப் பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு நாம் விண் செல்ல முடியும். மற்ற எந்த உயிரினங்களாலும் அது முடியாது.

ஆகவே இந்தத் கோடிக்கரையான (கடைசி) உடலிலிருந்து அந்த தனுசு கோடி என்ற உணர்வை
1.எல்லாவற்றையும் அரவணைத்து ஒன்றென்ற நிலைகள் இணைத்து
2.ஒளி என்ற நிலைகள் ஆக்கும் அந்த உணர்வின் நிலையை நாம் பெறத் தயங்கக் கூடாது.

ஏனென்றால் இயற்கையின் பேருண்மையின் உணர்வுகள் அனைத்தையும் அறியக் கூடிய நாம் இந்தக் கடைசி நிலையில் இருக்கின்றோம்.

இந்த மனிதனுக்கு அடுத்த நிலைகள் எங்கே செல்வது...? என்ற நிலையில் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி விஷ்ணு தனுசு என்ற உணர்வின் தன்மை கொண்டு இருளை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிடல் வேண்டும். இது தான் விஷ்ணு தனுசு என்பது.

ஆனால் சிவ தனுசு என்றால் என்ன...?

நம் வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் அடைந்து அதே போல் பிறரையும் வேதனைப்படுத்தி அந்த உணர்வை ரசிப்பதும் போன்ற உணர்வுகளை வளர்த்துக் கூட்டுக்குள் கூடு மாறிக் கொண்டே வருவது... மீண்டும் மீண்டும் உடல் பெறுவதே சிவ தனுசாகும்.
1.இன்று நாம் மனிதனாக இருந்தாலும் எடுத்துக் கொண்ட வெறுப்பு வேதனைக்கொப்ப
2.நாளை மிருகமாக அந்த உணர்வுகள் மாற்றிவிடும்.

நாம் வலு பெற்ற உணர்வு கொண்டு ஒருவனைத் தாக்கிக் கொல்ல வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் கொன்று அந்த உணர்வு சிவதனுசாக நம்மை இயக்கும்.
1.அந்த முரட்டுத்தனத்திற்கொப்ப வலு கொண்ட மாடாகவும்
2.மற்ற கொடூரமான மிருகங்களாவும் நம் உயிர் உருவாக்கும்.

சிவ தனுசு என்ற நிலைகள் வரப்போகும் போது இந்தப் பூமிக்குள் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே வரும். ஆனால் விஷ்ணு தனுசு கொண்டு இருளை அகற்றிப் பொருளை அறியச் செய்யும் உணர்வாக ஒளியாக நாம் மாறுவதே கடைசி தனுசு கோடி என்பது.

இராமயாணக் காவியங்களில் இத்தகைய பேருண்மைகள் ஏராளமாக உண்டு. அந்த உண்மைகளை நாம் உணர்ந்து கொண்டால் மனிதனுக்குப் பின் உலகையே சிருஷ்டிக்கும் வல்லமையை நாம் பெறலாம்,

ஏனென்றால் ஆதிமூலம் என்ற நம் உயிர் பரிணாம வளர்ச்சியின் பல கோடிச் சரீரங்களைப் பெற்றது. உடல் வலு பெற்ற நிலைகள் கொண்டு இன்று மனிதனாக உருவாகியுள்ளது,

பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு ஒப்ப வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது என்பதைக் காட்டுவதற்காகத்தான் யானையின் சிரசைப் போட்டு மனித உடலைப் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.

உடலுக்குள் இருக்கும் கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து நம்மை இயக்குகின்றது உயிர் என்பதைத் தெரியப்படுத்துவதற்காகக் “கணேசா...!” என்று காரணப் பெயர் சூட்டினார்கள் ஞானிகள்.
1.அதே சமயத்தில் சிந்திக்கும் தன்மை கொண்டு – அங்குசபாசவா...!
2.தீமையான உணர்வுகளை அடக்க வல்லமை பெற்றவர் என்பதையும் ஞானிகளால் கொடுக்கப்பட்ட சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகிறது.

ஆதிமூலம் என்ற உயிர் மிருக நிலையில் இருந்து மனிதனாகப் பிறந்தாலும் அவன் முழு முதற் கடவுள் ஆகின்றான். எப்படி...?

பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் வலுவைச் சேர்த்துச் சேர்த்து விநாயகா...! மனித உடல் பெற்ற பின் வினைக்கு நாயகனாக
1.வாழ்க்கையில் வரும் ஒவ்வொன்றிலும் இருளை நீக்கிப் பொருளைக் காணும்
2.ஒளி என்ற அந்த உணர்வின் தன்மை பெறும் பொழுது முழு முதற் கடவுள் ஆகின்றான்.

இப்படி ஒளியாக்கப்படும் போது நாராயணன் சூரியனாக இருந்தாலும் அதன் உணர்வு நம் உயிருக்குள் விஷ்ணுவின் தன்மையாக வரப்போகும் போது உணர்வின் அணுக்களை மாற்றி ஒளியின் சிகரமாக மாற்றும் தகுதி பெற்றது.

இருளை அகற்றி ஒளியாக மாறி உலகையே படைக்கும் தன்மை கொண்டதால் “முழு முதற் கடவுள்...!” என்று தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.