ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2019

உணர்வை ஒளியாக எப்படி மாற்றுவது...? நாம் எப்படி ஒளிச் சரீரம் பெறுவது...?


கேள்வி:-
"உணர்வை ஓளியாக்குவது..." என்றால் என்ன...? ஏன் ஒளியாக்க வேண்டும்...? அதற்குண்டான விளக்கம் வேண்டும்.

பதில்:-
நமது ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி பார்த்தோம் என்றால்
1.திருவண்ணாமலையில் ஜோதியை ஏற்றுகின்றார்கள்.
2.ஐயப்பன் கோவிலிலும் ஜோதியைக் காட்டுகின்றார்கள்.
3.முருகன் கோவில்களிளும் சொக்கப்பனை கொளுத்துவார்கள்.
4.எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் தினமும் அங்கிருக்கும் தெய்வத்திற்கு தீபத்தை (ஜோதியைக்) காட்டுகின்றர்கள்.

அந்தத் தீபத்தை நாமும் இரண்டு கைகளாலும் முகத்திற்குக் கொண்டு வந்து புருவ மத்தியிலும் ஒற்றிக் கொள்கிறோம்.

இது எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தாலும் ஏன் அவ்வாறு காட்டுகிறார்கள்...? நாம் ஏன் அதை நம்முடைய முகத்தில் ஒற்றிக் கொள்கிறோம்...? என்ற மூலத்தை எண்ணிப் பார்ப்பதில்லை.

நம் பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால் சூரியன் ஒளிமயமாகப் பிரகாசிக்கின்றது. சூரிய வெளிச்சத்திலே எல்லாவற்றையும் தெளிவாகக் காண முடிகிறது. நம்முடைய காரியங்களைச் சீராகச் செய்ய முடிகிறது.

ஆனால் இரவிலே சூரிய ஒளி நாம் வாழும் இடத்தில் இல்லாததால் அங்கே இருள் சூழ்கிறது.
1.இருளுக்குள் நம்மால் எதையும் தெளிவாகக் காண முடியுமோ...? முடியாது.
2.இருளுக்குள் இருந்து எந்த ஒரு காரியத்தையும் சீராகச் செய்ய முடியுமா...? அதுவும் முடியாது.

இன்று செயற்கை விளக்குகளைப் புறத்திலே வைத்து வாழக் கற்றுக் கொண்டதால் நம்மால் இயற்கையின் ஒளியைப் பற்றிச் சிந்திக்கும் ஞானம் இல்லாது போய்விட்டது,

இதே போல் தான் ஆதியிலே அகண்ட அண்டத்திலும் எங்குமே இருளாகத்தான் இருந்தது. இருள் என்றால் விஷத் தன்மை.

உதாரணமாக நம் வீட்டை அதிக நாள் பூட்டி வைத்திருந்தால் அது பாழடைந்து கடுமையான விஷத் தன்மைகள் பரவுகிறது அல்லவா...! ஆகவே இருள் சூழ்ந்த நிலை என்றாலே அது விஷத் தன்மை வாய்ந்தது...!” என்பதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இருண்ட நிலையாக இருந்த அந்தச் சூனியப் பிரதேசத்தில் விஷத் தன்மை அதிகமாகி அது விஷமற்ற மற்ற ஆவிகளுடன் மோதும் பொழுது வெப்பமாகின்றது. இதைப் போன்று
1.விஷமானதும் விஷமற்றதும் தொடர்ந்து மோதி மோதி
2.வெப்பம் அதிகமாகும் பொழுது அங்கே நெருப்பாகின்றது.
3.அப்பொழுது தான் வெளிச்சமே உருவாகின்றது. (இருள் அகலுகிறது)

இன்று நாம் மின்னல்களைப் பார்க்கிறோம் அல்லவா. அது போல் ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பமாகி நெருப்பாகி வெளிச்சமாகின்றது.

வெப்பம் அதிகமான பின் நகரும் தன்மை வருகிறது. அதனால் கவரும் சக்தியான காந்தம் உருவாகின்றது. காந்தத்தால் மற்றதைத் தன்னுடன் ஈர்க்கும் ஆற்றல் வருகிறது. ஈர்த்தது அனைத்தும் வெப்பத்தால் சமைக்கப்பட்டு ஒரு பொருளாக உறைகிறது.

இது தான் பரம்பொருள் என்பது.

எல்லையே இல்லாது பரவி இருக்கும் இந்தப் பரத்தில் பொருள் உருவாகும் பொழுது பரம் பொருளாகின்றது. அது எடை கூடி இருப்பதால் நகர்கின்றது. சுழலும் தன்மைக்கு வருகிறது. சுழற்சியால் தன் நடு மையம் கடுமையான வெப்பமாகின்றது.
1.அந்த வெப்பத்தால் தான் மற்றதை மாற்றும் சக்தி அதாவது புதிது புதிதாக உருவாக்கும் சக்தி வருகின்றது.
2.இப்படித்தான் நாம் இன்று பார்க்கும் எல்லாமே உருவாகி (சிருஷ்டி) உள்ளது.

சூரியனாக இருந்தாலும் நட்சத்திரமாக இருந்தாலும் கோள்களாக இருந்தாலும் கல் மண் தாவரங்கள் உயிரினங்கள் மனிதர்கள் யாராக இருந்தாலும் இப்படித்தான் வந்துள்ளோம்.

அத்தகைய வெப்பத்தைத்தான் ஞானிகள் கடவுள் என்றும் ஈசன் என்றும் நாம் தெரிந்து கொள்வதற்காகக் காரணப் பெயரை வைத்தார்கள்.
1.நம் உடலுக்குள் உயிரின் துடிப்பில் உருவாகும் வெப்பம் இல்லை என்றால்
2.உடனே குளிர்ச்சியாகி மரணமடைவோம்.

இன்றைய மனித வாழ்க்கையில் நாம் புறப் பொருள்களை மட்டும் தான் அறிய முற்படுகின்றோம். அகத்திற்குள் அதாவது ஒரு அணுவிற்குள் (தனக்குள் - தன்னைப் பற்றி) நடக்கும் சூட்சமங்களை அறிய வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இதைத்தான் அறியாமை அதாவது “இருள்...!” என்று சொல்வது.

கடவுள் என்ற நிலையில் இயக்கச் சக்தியாக வெப்பமாக ஒளியாக உயிர் இருந்தாலும் அதை யாரும் அழிக்க முடியாது. ஆனால் உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலும் உடலுக்குள் தோன்றும் உணர்ச்சிகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை. காலப் போக்கில் அழிந்துவிடும்...!

இருந்தாலும் உயிரால் கவரப்பட்ட சத்து உடலாகி சுவாசிக்கும் பொழுது “நான்...!” என்ற உணர்வாக வருகின்றது. அந்த நானை அதாவது நீங்கள் கேள்வியாகக் கேட்டபடி
1.உணர்வை ஒளியாக... வெப்பமாக... நெருப்பாக... ஜோதியாக... மாற்றவில்லை என்றால்
2.அந்த நான் இன்று இருக்கும்
3.நாளை அந்த நான் இருக்காது.
(இறந்த பின் யாருக்கும் ஒன்றும் தெரியாது என்று நாம் தான் கூசாமல் சொல்வோமே...!)  

என்றென்றும் நாம் நிலைத்த வாழ்க்கையாக அந்த மெய் ஞானிகளைப் போல் ஏகாந்தமாக வாழ வேண்டும் என்று விரும்பினால் உயிரான ஈசனுடன் (நெருப்பு – ஒளி) ஒன்றிடல் வேண்டும்.

அவனைப் போன்ற ஒளி சக்தியை நாம் விண்ணிலிருந்து எடுத்து இந்த உடலில் வாழும் குறுகிய காலத்திற்குள் விளைய வைக்க வேண்டும்.

ஆக மொத்தம் எப்படிப் பார்த்தாலும் உடல் பெறும் உணர்வுகள் அனைத்துமே இருள் சூழ்ந்தவை தான். இந்தப் பூமிக்குள் இருக்கும் அனைத்து சக்திகளுமே மீண்டும் மீண்டும் உடல் பெறச் செய்யும் சக்திகள் தான்.

ஆகவே கீழ நோக்கி இருக்கும் நம் சுவாசத்தை மேல் நோக்கிய சுவாசமாக கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து விண்ணிலிருந்து வரும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன
1.அந்தப் பேரருள் பேரொளி உணர்வை உயிரிலே மோதச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
2.உயிர் வழிச் சுவாசமாக அதைப் பிராணயாமமாக்க வேண்டும்.
3.அந்த நெருப்பு நமக்குள் கூடக் கூட இந்த இருள் சூழ்ந்த உடலைப் பிளந்து
4.உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கிவிட்டு ஆத்ம ஜோதியாக அழியா ஒளிச் சரீரமாக நாம் பெற முடியும்.

இதைத்தான் திருவண்ணாமலையிலும் ஐயப்பன் ஆலயத்திலும் முருகன் கோவிலில் சொக்கப்பனையாகவும் தீப ஆராதனையாக ஒவ்வொரு ஆலயத்திலும் காட்டுகின்றார்கள்.

நாம் அந்த ஜோதியைப் பார்த்து எனக்கு சொத்து வேண்டும் சுகம் வேண்டும் உடல் நன்றாக இருக்க வேண்டும் என்று அதை வேண்டினால் “நமக்குள் அந்த ஒளி பெறும் உணர்வு எப்படி வரும்...?”

பேரொளியாக மாறி விண்ணுலகில் என்றுமே மகிழ்ச்சியாக வாழ்வதா...? அல்லது உடலுக்காக வாழ்ந்து மீண்டும் மீண்டும் இந்தப் பூமிக்குள் பிறவிக்கு வந்து வேதனையை அனுபவிப்பதா...? என்பது அவரவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது.