“மூக்கு முனையை... முழித்திருந்தும் பாராமல்
ஆக்கை கெட்டு... நானும் அறிவு இழந்தேன் பூரணமே...!”
மனிதனின் ஆணிவேரே சுவாசம் தான். சுவாசத்தின் வழியாக வரும் உணர்வலைகள் நாசி வழியாகப்
போய் புருவ மத்தியில் இருக்கும் உயிரில் பட்ட பின் தான் எண்ணம்... சொல்... செயல்...
எல்லாமே இயங்குகிறது. அதை எல்லாம் இயக்கக்
காரணமாக இருப்பது நம் உயிர் தான்.
1.உயிரே கடவுளாக உள் நின்று அவ்வாறு இயக்கிக் கொண்டிருக்கின்றான் என்பதையும்
2.சுவாசத்தின் வழியாகப் போவது தான் உயிரால் இயக்கப்பட்டு
3.தெய்வமாக நின்று நம்மை இயக்குகிறது என்பதையும் அறியவில்லை என்றால் என்ன ஆகும்...?
கண்களால் பார்க்கும் உணர்வுகளும் சரி... அல்லது காதால் கேட்டு அதன் பின் கண்களின்
நினைவுக்கு வந்து பார்த்தாலும் சரி... அது அனைத்தும் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகி
அதன் வழியே சுவாசம் அமைகின்றது.
இதைப் பற்றி எதுவும் அறியாதபடி நாம் சுவாசித்த உணர்வுகள் எல்லாவற்றையும் அப்படியே
விட்டு விட்டு நம் சுவாசத்தின் வழியாகப் போவது எதையும் சீரபடுத்தவில்லை என்றால் என்ன
நடக்கும்...?
நமக்குள் உள் நின்று கடவுளாக நம் உயிர் இயக்கினாலும்
1.தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் விளைந்து
2.நல்ல உடலை வீழ்த்தி
3.மீண்டும் மனிதனல்லாத வேறொரு உயிரினமாகத்தான் அடுத்து பிறக்க நேரும்.
பரிணாம வளர்ச்சியில் உயிர் நம்மை மனிதனாக வளர்ச்சி அடையச் செய்து வந்த நிலையில்
1.என்றுமே அழியாத நிலையில் ஒளியாக இருக்கும் உயிருடன் ஒன்றவில்லை எனும் பொழுது
2.நாம் தேய்பிறையாகி நம்முடைய வளர்ச்சி குன்றி
3.மனிதனுக்கு அடுத்த நிலையான பிறவா நிலை பெறும் தகுதியை இழந்து விடுவோம்.
இத்தகைய நிலையை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?
“மூச்சோடு முனை நாசி முட்டி பாயும்...
முன்னின்றும் காணாது... விழிமேல் நோக்கும்
பாச்சென்றும் வேண்டாமே... தானே பாயும்...!”
நாம் சுவாசிக்கும் பிறிதொரு உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றதே தவிர நாம் இயங்கவில்லை.
அதாவது புறக் கண்களால் நாம் பார்ப்பது கேட்பது அனைத்தும் மூச்சின் வழியாக உயிரிலே
மோதுகின்றது. அப்படிப் பிறிதொரு உணர்வுகள் மோதப்பட்டு இயக்கும் அந்த நிலையை மாற்றிட
வேண்டும்.
ஏனென்றால் அவைகள் நமக்கு முன்னாடி ஆன்மாவாக வந்து இயக்கும் நிலையாக இருந்தாலும்
அது நம்மை இயக்கவிடாதபடி புறக் கண்ணின் நினைவை புருவ மத்தியில் இருக்கும் உயிரான அகக்கண்ணுக்குக்
கொண்டு வர வேண்டும்.
கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றப்படும் பொழுது
முக்கண் ஆகின்றது. அந்த உயிர் வழியாக நம் நினைவுகள் விண்ணுக்குச் சென்று நஞ்சை வென்று
பேரொளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
என்று ஏங்கி அதைக் கவர்தல் வேண்டும்.
இப்படி உள் உணர்வாக நாம் இயக்கினால் நாம் வெளியில் புறத்தில் அதிகமாக எதுவும் செயல்படுத்த
வேண்டியதில்லை.
1.உயிர் வழியாக நாம் கவரும் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள்ளும் பாய்ந்து
அது மற்றவர்களுக்குள்ளும் பாயப்பட்டு
2.தீமைகளை அடக்கி நன்மையின் செயலாக ஒளியின் உணர்வாக மாற்றி அமைக்கும்.
3.(நாம் பாய வேண்டியதில்லை... அருள் உணர்வுகள் உயிரிலே பாய்ந்தால் “தானே” அது இயக்கும்)
4.இதை எல்லாம் அனுபவத்தில் நிச்சயம் பார்க்க முடியும்...!
ஒவ்வொரு நாளும் இதை வளர்க்க உயிருடன் ஒன்றி வாழும் நிலையும் நம் உணர்வுகள் அனைத்தையும்
ஒளியாக மாற்றிடும் அந்தப் பூரணத்துவமும் நாம் அடைய முடியும்.
மனிதன் மகானாகி மெய் ஞானத்தின் முழுமை பெற்று மகரிஷிகளுடன் ஒன்றி வாழச் செய்யும்
பக்குவத்தைத்தான் சித்தர்கள் அன்று பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள்.
நாம் அனைவரும் அந்தத் தகுதியை வளர்ப்போம்.