ஒரு சமயம் (40 வருடம் முன்பு) டெல்லியில் மதங்கள் கலாச்சாரங்களைப் பற்றி உலகெங்கிலும்
உள்ளவர்களை வரச் சொல்லியிருந்தார்கள். நானும் (ஞானகுரு) போயிருந்தேன்.
கடவுளின் தன்மை நாம் அடைய வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டிலிருந்து
ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.
எல்லாம் தொடங்கியதும் ரஜ்னீஷ் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்தோம் என்றால்
அவர்கள் பாட்டுக்கு ஆட ஆரம்பிக்கின்றார்கள், மேலே போட்டிருக்கிற துணியெல்லாம் கீழே
விழுகிறது.
இது பக்தி மார்க்கங்களில் தன்னை அறியாது சொர்க்கம் போகும் மார்க்கங்கள் என்று
எல்லோருக்கும் முன்னாடி இப்படிச் செய்கிறார்கள்.
ஒருவர் என்ன செய்தார் என்றால் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கிறார். குண்டலினி
யோகா என்று சொல்லி மூச்சை நிறுத்தி அதாவது உள்ளுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு
1.நான் எத்தனை நாள் என்றாலும் பசி இல்லாமல் இருப்பேன்.
2.காற்றே இல்லாத இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் பிராணனை எடுத்து நான் உருவாக்கிக்
கொள்வேன்.
3.மூன்று நாள் அடக்கி வைத்து இருக்கின்றான்.
அந்தச் சமயம் அங்கே குளிர் காலம். மார்கழியில் நல்ல குளிர் சும்மா வெளியிலே
போனாலே கிடு…கிடு… என்று நடுங்கும். ஒரு சாமியார் சட்டை போடாமல் அங்கே உட்கார்ந்தார்.
துண்டு ஒன்றைப் போர்த்தியிருக்கின்றார்.
ஆனால் நான் அந்தத் துண்டு கூடப் போர்த்தவில்லை. சட்டை இல்லாமல் அப்படியே அங்கே
உட்கார்ந்தேன். ஏனென்றால் குருநாதர் எம்மை ஏற்கனவே இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில்
பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தார் அல்லவா...!
கடைசியில் எல்லோருக்கும் ஐந்து நிமிடம் தான் பேச விட்டார்கள். சமாதி நிலை போன்றவர்களுக்கு
மட்டும் ஒரு அரை மணி நேரம் கொடுத்தார்கள்.
ரஜ்னீஷ் ஆள்கள் எல்லாம் டேப் ரிகார்டு புஸ்தகம் எல்லாம் வைத்துக் கொண்டு வெளிநாட்டிலிருந்து
நிறையப் பேர் வந்து இருக்கிறார்கள். அது வியாபாரம் நிறைய ஆகிறது.
பெரிய பெரிய ஆபிசராக இருக்கின்றார்கள். பார்த்தோம் என்றால் இது ஒரு கலை என்று
ஆடுகிறார்கள். துணி மேலே இருக்கிறதில்லை. ஏனென்றால்
1.தன்னை மறந்து எவன் இருக்கிறானோ
2.அவன் ஆண்டவனை அடைவான் என்று இப்படி ஒரு நம்பிக்கை
3.ஆடுகிறார்கள் என்றால் அந்த உணர்வின் தொடர் கொண்ட ஆவிகள் தொடரும்.
4.ஆக எதை அடையப் போகிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை.
என்னைப் பேசச் சொன்னார்கள். அங்கே செகரட்டரியில் தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவரை
வைத்துப் பேசச் சொன்னார்கள்.
குருநாதர் காட்டிய வழியில் அன்னை தந்தையிலிருந்து… கடவுள்…! என்ற நிலைகள் கொண்டு
வந்து அந்த மெய் உணர்வுகளைக் கொஞ்சம் சொல்ல ஆரம்பித்தேன். எல்லோரும் மெய் மறந்து போய்
விட்டார்கள்.
நேரம் ஆகி விட்டது….! பேச்சை நிறுத்தலாமா…?
என்று கேட்டேன். இல்லை இல்லை…! நீங்கள் பேசலாம் என்று என்னை விட்டுவிட்டார்கள்.
எனக்கு அடுத்துப் பேச வந்தவருக்கு என்னாகிப் போனது..? அவர் அந்த நேரத்திற்கு
வந்து பேச வேண்டும் அல்லவா…! என்னைப் பேசச் சொன்னதும் அவரைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை.
எல்லாக் கூட்டமும் என்னிடம் வந்துவிட்டது.
இஸ்ரேலில் இருந்து யூதர்கள் கூட அதில் வந்திருந்தார்கள். மற்ற நாட்டிலிருந்தும்
இமயமலையில் இருக்கக்கூடியவர்களும் ஜைன மதம் புத்த மதம் என்ற் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே வந்து
இருந்தார்கள்.
அந்த இயற்கையின் உணர்வின் இயக்கங்களைப் பற்றியும் உயிரின் இயக்கங்களையும் பேச
ஆரம்பித்ததும் ஐந்து நிமிடம் பத்து நிமிடம் ஆனது. பத்து நிமிடம் அரை மணி நேரம் ஆகிப்
போனது.
அந்தக் கூட்டம் என்னை வெளியே விட மாட்டேன் என்கிறார்கள். அப்புறம் ஒரு வழியாக
விட்ட பின் எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுத்தேன். ஆனால் நான் (ஞானகுரு) ஹிந்தியில அரையும்
குறையுமாக இருந்ததால் அவர்கள் கேட்பதற்கு முழு விளக்கம் கொடுக்க முடியவில்லை.
அப்பறம் அங்கே இரண்டு நாள் இருந்து இன்னொருவர் உதவியுடன் ஹிந்தியிலே புத்தகத்தை
அடித்துக் கொடுத்து விட்டு வந்தேன். ஏனென்றால்
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை
2.தானும் அறிந்து வளர்க்க வேண்டும் என்ற நிலையில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.
ஆனால் இதைச் சரியான நிலையில் அறியாதபடி “கல்கி வந்து விட்டார்…!” என்கிறார்கள்.
கல்கி யார்…? என்றே தெரியாதபடி. கல்கி அவதரித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்..!
எங்கே வந்தார் கல்கி…?
1.நம் உயிர் கல்கி ஆகப்போகும் போது தீமையை வென்று அங்கே விண்ணுலகம் செல்வது
தான் அது
2.மண்ணுலகில் வந்த தீமைகளை வீழ்த்திவிட்டு தீமையற்ற உலகை அடைவது தான் கல்கி…!
3.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிவிட்டால் அது தான் கல்கி..!
குருநாதர் காட்டிய வழியில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செல்லும் பொழுது
நடந்த நிகழ்ச்சிகளை அனுபவமாக இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.