
“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…!” என்று கீதை சொல்வதன் உட்கருத்து
உதாரணமாக ஒருவன் நம்மைக் கெடுத்து விடுவேன் என்று சொன்னால் அவன் சொல்லை நாம் அதைப் பதிவு செய்து கொள்கிறோம்.
பதிவு செய்து கொண்ட பின்… “என்னை இப்படிப் பேசினானே… பேசினானே…” என்று அவனின் நிலையைக் கூர்மையாக எண்ணி அவனின் நிலையை நம் உடலுக்குள் சேர்த்து விடுகின்றோம்.
“நாம் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்…” என்று அவன் எண்ணினானோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து அதே வினையாகச் சேர்த்த பின்… நமக்குள் துன்புறும் உணர்வுகள் விளைகின்றன.
அவன் எண்ணியபடி நம் மனம் மாறுகின்றது. அதன் வழி நமக்குள் வரும் பொழுது
1.“இவன் என்னை இவ்வாறு சொன்னான்… சொன்னான்…” என்று அவன் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டு
2.அவன் உடலில் விளைந்த உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்தபின்
3.“கெட்டுப் போக வேண்டும்…” என்று அவன் சொன்ன உணர்வுகள் நமக்குள் உள்ள நல்ல உணர்வுகளைக் கெடச் செய்து
4.”அவன் நிலைக்கு நாம் ஆளாகின்றோம்…”
நாம் இந்த உடல் நலிந்த பின் இறக்கப்படும் போது அவனுடைய நினைவுகள் வந்து… கண்ணன் காட்டிய வழி கொண்டு அவன் செய்த தீயதை நாம் மீண்டும் எண்ணும்போது “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…”
அவன் தீயதை விளைவித்ததின் தன்மையை நீங்காது அவனின் நினைவு கொண்டு நாம் வருவோமென்றால் அந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் வந்து
1.அவன் சொன்ன சிரமங்கள் நமக்குள் விளைந்து
2.இந்த உடல் நலிந்து அவன் நினைவு கூடுகிறது.
அவன் நினைவு கூடிய பின்பு இந்த உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அவன் யாரைச் சொன்னானோ அங்கே பழி தீர்க்கும் உணர்வுடன் சென்று… இதே உணர்வு அங்கே விளைந்து… அவனையும் வீழ்த்தி விடும்.
ஆகவே கீதையில் “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” என்று சொல்வது. இதுவும் கூர்மை அவதாரம்தான்.
அவன் செய்த தீய உணர்வின் நிலையை நாம் கூர்மையாக எண்ணி அந்த உணர்வின் சக்தியை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவனின் உணர்வு நமக்குள் வலுப்பெற்று… அதனின் உணர்வு நமக்குள் ஓங்கி வளர்ந்து…
1.இந்த உடலைவிட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா அவனின் மணம் கொண்ட ஈர்ப்பு வட்டத்துக்குள் சிக்கி
2.அவனின் பழி தீர்க்கும் உணர்வை அவனுடைய உடலில் விளைவித்து அவனையும் வீழ்த்தும்.
இதைத்தான் “ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம்” என்று சொல்கின்றோம்.
திரும்பத் திரும்ப எண்ணிய உணர்வின் தன்மை சிவமானாலும் சிவத்திற்குள் சக்தியாக இயங்கி எதனின் மணமோ அதனின் நிலைகள் கொண்டு மீண்டும் இயங்கி “மீண்டும் மீண்டும் தனக்குள் எதனைச் சேர்க்கின்றோமோ…” அதனின் நிலைகள் கொண்டு மாறிக் கொண்டேயிருக்கும்.
அதைத்தான் கீதையில் “எதை நீ நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!” என்று எடுத்துரைக்கப்பட்டது.
மற்ற உயிரினங்கள் தன்னைக் காத்திடத் தன்னைக் காட்டிலும் உயர்ந்த நிலைகள் கொண்டு அதனின் உணர்வை நுகர்ந்து பரிணாம வளர்ச்சியை அடைந்து எதனையும் காத்திடும் உடலாகப் பெற்றது.
அவ்வாறு பரிணாம வளர்ச்சி அடையச் செய்து மனிதனான நிலையில் தன் உயிரின் துணை கொண்டு தீமையை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளிச் சரீரமாக நின்று என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மெய் ஞானிகள்.
இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளைத் தகர்த்திட… அது நமக்குள் நிலைத்திடாது தடுத்திட… கீதையிலே கண்ணன் காட்டிய அருள் நெறி கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நம்முள் உட்செலுத்தி இந்தத் தீமைகளைத் துடைக்க எண்ணினால் தீமைகள் நமக்குள் வராது.
1.நாம் எண்ணிய அந்தக் கூர்மையின் நிலைகள்
2.இந்த வாழ்க்கையிலே தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள் ஓங்கி வளர்ந்து
3.அந்த அருள் ஞானியின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் வலுப்பெறுகின்றது.
அவ்வாறு அந்த ஞானிகளின் உணர்வுகள் வலுப் பெற்றுப் பிறருடைய உணர்வுகள்
தம்மை இயக்காமல் தடைப்படுத்தும் அனைவருக்கும் எமது அருளாசிகள்.