ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 5, 2026

ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள காவியத்தின் “மூலக் கருத்து”

ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள காவியத்தின் “மூலக் கருத்து”

கேள்வி:-

 
வான்மீகி மாமகரிஷி உணர்த்திய ராமாயணத்தில், தசரத சக்கரவர்த்தி, கைகேயியின் குறுகிய எண்ணங்களால், இராமன் காட்டிற்கு சென்ற நிலையும், இந்த பிரிவின் நிலையைத் தாங்காது, தசரத சக்கரவர்த்தி இறந்த நிலையை காண்பிக்கின்றார்.
 
நமது ஞானகுரு உணர்த்திய அருள் வழியில், பத்தாவது நிலையை அடையக்கூடிய இந்த உடலை ஆளும் இந்த உயிரின் நிலை "தசரத சக்கரவர்த்தி" பத்தாவது நிலையை அடையக்கூடியது.
 
இந்த உடலுக்குள், எண்ணத்தின் நிலைகளை பிரதானமாக வைத்து வான்மீகி மகரிஷி உணர்த்தி, இந்த மனித உடலின் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என அருளியுள்ளார்.
 
இதில் தசரத சக்கரவர்த்தியின் செயலாக்கங்கள் இறந்த நிலையாகக் காண்பிக்கின்றார்கள். இதற்கு விளக்கம் வேண்டும்.
 
பதில்:-
 
எந்த ஒரு ஞானியாக இருந்தாலும் அவரவர்கள் கண்ட பேருண்மைகளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலைக்கொப்பத் தான் வெளிப்படுத்துவார்கள். வான்மீகியும் அப்படித்தான் “உயிரை அரசனாக வைத்துக் காட்டியுள்ளார்…”
 
நமது ஞானகுரு அதை நமக்கு வெளிப்படுத்திய விதம்
1.இன்றைய காலகட்டத்திற்கொப்ப… அதே சமயத்தில் எல்லாவற்றையும் சேர்த்து
2.எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும்படியான விளக்கத்தைத் தான் கொடுத்துள்ளார்கள்.
 
தசரதன் இறக்கின்றான் என்றால் இங்கே உயிர் இறக்கவில்லை. அதாவது
1.உயிரில் இருள் சூழ்கிறது… நஞ்சு சூழ்கிறது…
2.”உயிரான்மா நஞ்சாகிறது…” என்று தான் பொருள்.
 
சிறுகச் சிறுகப் பரிணாம வளர்ச்சி அடைந்து நஞ்சைக் குறைத்து மனிதனாக உருவாக்கிய நிலையில்… மனித சிந்தனை இழப்பதைத் தான் அவ்வாறு காட்டப்பட்டது.
 
மகாபாரத்திற்கும் இராமாயணத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
 
அங்கே “சகுனி” சூழ்ச்சி செய்கிறான்… பஞ்ச பாண்டவர்களும் (கடைசியில் திரௌபதையும் – உயிரின் உணர்ச்சிகள் நஞ்சாகிறது) அதிலே சிக்கி விடுகிறார்கள்.
 
இங்கே “கூனி” சூழ்ச்சி செய்து கைகேயி மூலமாக உயிரின் உணர்வுகள் நஞ்சாகிறது.
 
அங்கேயும் காட்டுக்குத் தான் செல்கிறார்கள்… பின் போர் நடக்கிறது.
 
இங்கேயும் காட்டுக்குத் தான் செல்கிறார்கள். பின் போர் நடக்கிறது.
 
1.இந்த உடல் தான் காடு.
2.உயிரான்மாவை நஞ்சிலிருந்து மீட்கும் நிலை தான் போர்.
 
போர் முடிந்து வந்தாலும் ராமனும் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியவில்லை. சீதாவைப் பிரிகின்றான்.
 
அங்கே மகாபாரதத்தில் பாணடவர் பிள்ளைகள் அனைத்தும் மடிகின்றனர். கடைசியில்… தர்மன் மட்டும் எஞ்சியதாகக் காட்டி…
1.சுவாசத்திற்கு மோட்சம் கேட்டு (ஒளியான உணர்வுகள் – மகரிஷிகளின் சக்தி)
2.அதன் பின் விண் செல்வதாகக் காட்டுகிறார்கள்.  
 
இங்கே சீதா (உடல்) மண்ணுக்குள் செல்கிறது, ஆனால் அதிலே உருவானதை
1.லவா குசா என்று (ஒளியான உணர்வுகள் – மகரிஷிகளின் சக்தி)  அதைக் காட்டி…
2.அவர்கள் மூலமாக உயிருடன் ஒன்றி விண் செல்வதாகக் காட்டுகிறார்கள்.
 
இரண்டிலுமே… மனித வாழ்க்கையில் வந்த “நஞ்சை வென்று உணர்வை ஒளியாக்கும் சூட்சமம் தான்…” காட்டப்பட்டுள்ளது.
 
இன்னும் புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு குளவியால் தாக்கப்படும் புழு… “(புழுவின் உயிர்)”
1.அடைபட்ட இடத்திலிருந்தே (உடல் - காடு) குளவியின் உணர்வைச் சுவாசித்து (நஞ்சாகி)
2.புழுவின் உயிரான்மா குளவியின் உயிரான்மாவாக “வளர்ச்சி” அடைகிறது.
 
அதே போல் மனித வாழ்க்கையில் பிறரை வீழ்த்த வேண்டும் (கைகேயி) என்று வீழ்த்திய அந்த உணர்வு தன்னை வீழ்த்திடும் நஞ்சாக மாறுகிறது.
 
அதிலிருந்து உயிரான்மாவை மீட்ட “ஒளியான உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்…” என்பது தான் காவியத் தொகுப்பின் உள் கருத்து.
 
1.தசரதன் இறக்கிறான் என்றால் உயிரான்மா நஞ்சாகிறது – அமாவாசை (மீண்டும் பூமிக்குள் உடல் பெறும் நிலை)
2.அதுவே… ஒளியான உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் போது - அது பௌர்ணமி (பிறவா நிலை)
 
அதாவது… சீதா (ஒளியான உணர்வுகள் – நாம் தியானத்தின் மூலம் இப்பொழுது எடுப்பது) விஷ்ணுவுடன் (உயிர்) இணைந்து ஒளிச் சரீரம் பெறுவது.
 
விண்ணிலே உதித்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்று… மனித உடலில் முழுமை பெற்று முதிர்ச்சி பெறுவது தான் “படைப்பின் வளர்ச்சி…”
 
1.அதனுடைய பருவங்களைத் தான் கதாபாத்திரங்களாகக் காட்டப்பட்டு… நிகழ்ச்சிகளாக விவரித்து
2.பின் வளர்ச்சி அடைய வேண்டிய “சரியான பாதையைக் காட்டி…” தான் அந்த வழியில் பயணம் செய்து
3.பிறவா நிலை என்ற எல்லையை அடைவதாக… முழுமை பெறுவதைக் காட்டினார்கள் ஞானிகள்.
 
கேள்விக்குண்டான பதிலின் மொத்தச் சுருக்கம்:-
 
1.புழுவாகிய நான் வீழ்கிறது – குளவியான நான் வளர்கிறது… அது போல்
2.மனிதனான நான் (தசரதன்) வீழ்கிறது – ஒளியான நான் வளர்கிறது.