ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 17, 2026

மனதைச் சமப்படுத்தும் பக்குவநிலை

மனதைச் சமப்படுத்தும் பக்குவநிலை


ஆறறிவு கொண்ட மனிதரான நாம் பல விதமான உடல் உறுப்புகளைக் கொண்ட உயிரினங்களைப் புதிதாக உருவாக்குகின்றோம். விஞ்ஞான அறிவால் இதை நாம் அறிந்து கொண்டோம். இப்படி அறிந்து கொண்ட உணர்விலிருந்து நாம் என்ன செய்ய வேண்டும்…? நமக்குள் எப்படிச் சமைத்தல் வேண்டும்…?
 
ஒருவர் நமக்குத் தீமை செய்தார் என்று அறிகின்றோம். ஆனால் அந்தத் தீமையின் உணர்வு நமக்குள் வளராது தடைப்படுத்துதல் வேண்டும்.
 
அவ்வாறு தடைப்படுத்த வேண்டுமென்றால்
1.“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும்என்று எண்ணி ஏங்கி
2.அந்தத் தீய உணர்வினை நமக்குள் வராது தடைப்படுத்தி அருள் உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது
3.தீய உணர்வுகளின் வீரியத்தை அது குறைக்கின்றது.
 
உதாரணமாக மிளகாய் தனித்துக் காரமாகத்தான் இருக்கும். ஆனால் மற்ற பொருள்களுடன் இணைக்கப்படும் பொழுது சுவையாக மாறுகின்றது…
 
ஒருவர் தவறு செய்கிறார்என்று நாம் அறியும் பொழுது நாம் அருள் ஒளியின் உணர்வினை நுகர்ந்து
1.அவருடைய அறியாமை நீங்க வேண்டும்
2.அருள் ஞானம் அவர் பெற வேண்டும்
3.அருள் சக்தி அவர் பெற வேண்டும்
4.தெளிந்த மனம் அவர் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். 
 
இதனால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வந்தாலும்… “அவரை இயக்கும் தீய உணர்வுகள்நமக்குள் விளையாது…”
 
அவர் தவறு செய்கிறார் என்று நாம் அறிந்தாலும் அவர் வேகத் துடிப்பாக இருக்கும் பொழுது நன்மை தரும் சொல்களை நாம் சொன்னால்  அவர் கேட்கமாட்டார்.
 
சில நிமிடங்களுக்குப் பிறகு அதாவது சாந்தமாக இருக்கப்படும் பொழுது நீங்கள் இப்படிச் செய்தால் உங்களுக்கு நன்மைஎன்று நாம் சொல்லும் பொழுது அவர் ஏற்றுக் கொள்ளும் பருவம் வருகின்றது.
 
அப்போது நாம் சொல்லும் சொல்லின் உணர்வுகள் அவரிடத்தில் உருவாகும் தன்மை வருகின்றது.
 
எண்ணெய் நன்றாக கொதிக்கும் முன் வடையைத் தட்டி எண்ணெயில் போட்டால் என்னவாகும்…? வடை சீராக வேகாது. எண்ணெயை அதிகமாக விழுங்கும்.
 
பின்அது சூடேறச் சூடேற வடையில் சுவையும் மாறிவிடும். ஆனால் எண்ணெய் அதிகமாகக் கொதித்து அதில் வடையைத் தட்டிப் போட்டால் வடையின் மேல் பாகம் கருகிவிடும். உள் பாகம் மாவாக இருக்கும்.
 
சமப்படுத்தும் பக்குவப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டுதான், பதார்த்தங்களை உருவாக்க வேண்டும்.
 
இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் குழந்தை ஒன்று தவறு செய்யும் பொழுது… “தருணம் பார்த்துத்தான்…” நல் உணர்வின் தன்மையைக் குழந்தைக்குச் சொல்ல வேண்டும்.
 
1.ஏற்றுக் கொள்ளும் பருவம் வரும் பொழுதுதான் நல் உணர்வுகளை ஊட்ட வேண்டும். 
2.ஏற்றுக் கொள்ளும் பருவம் இல்லை என்றால் சொல்லிய நல் உணர்வுகள் அங்கே விளையாது.
3.நல் உணர்வின் தன்மை விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.
 
ஆனால் தவறைச் சுட்டிக் காட்டி,  நல் உணர்வை ஊட்டத் தவறினால் வெறுப்பின் உணர்வே வரும்.  வெறுப்பின் நிலை வளர்ந்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது. 
 
ஆகவே நாம் இது போன்ற நிலைகளை எல்லாம் அறிந்து
1.எதனை
2.எவ்வாறு
3.எதன் வழியில் நாம் உருவாக்க வேண்டும்…?  என்ற நிலையில்
4.“நாம் பக்குவப்படுத்தும் நிலையில்சமப்படுத்துதல் வேண்டும்.
 
ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்பக்குவப்படுத்தும் பண்பும்…” வருகின்றது.
 
அருள் ஞானத்தின் உணர்வுகள் நமக்குள் விளைந்தால் நம் வாழ்க்கையில் வரும் விஷத் தன்மைகளை கார உணர்ச்சிகளை அடக்கும் தன்மை வருகின்றது.
 
இப்படி அடக்கும் தன்மை வந்தால் சிந்திக்கும் தன்மை…” வருகின்றது. சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல் சீராக…” அமைய இது உதவும்.
 
நாம் நமது வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் உருவாக்கி பேரின்பப் பெரு வாழ்க்கை என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும். 
 
உதாரணமாக ஒருவர் சாக்கடையில் விழுந்து விட்டால் அவரை அங்கேயிருந்து மீட்க நினைக்கின்றோம். அவரைக் கை கொடுத்துத் தூக்குகின்றோம். அவரும் நம்மைக் கட்டித் தாவி மேலே வருகின்றார்.
 
இதனால் நம் மீதும் அசுத்தம் ஆகிவிடுகின்றது. உடனே அசுத்தத்தை நீரால் நீக்குகின்றோம். இது புறத்தால் நிகழ்வது.
 
ஆனால் பிறிதொருவரின் வேதனையின் உணர்வை நாம் நுகரும் பொழுது நம் அகத்திற்குள் வந்த அந்த அசுத்தத்தை நீக்க வேண்டுமல்லவா…? (இதைப் பற்றி அதிகமாக நாம் எண்ணுவதில்லை).
 
யாம் அருள் வாக்கினை வழங்குகின்றோம். எம்மை நீங்கள் பார்க்கின்றீர்கள். யாம் பேசும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தபின் அது உங்களுடைய உயிரினில் பட்டு இதனின் உர்வை அறிய நேருகின்றது.
 
இதை உங்களால் பார்க்க முடிகின்றதா…? இல்லை…! ஆனால் உணர முடிகின்றது.
 
நீங்கள் எம்மைப் பார்க்கின்றீர்கள்… பார்த்து நீங்கள் “எதைப் பெற வேண்டும்…?” என்று எண்ணி ஏங்குகின்றீர்களோ உயர்ந்த எண்ணங்களை எண்ணும் பொழுது…” அதனின் உணர்வின் தன்மை உங்களுக்குள் இயக்குகின்றது.
1.அப்படி இயக்கப்படும் பொழுது உங்களுக்குள் அறிய முடியாத சில சலனங்கள் ஏற்பட்டு…”
2.அது எப்படி நம்மை இயக்குகிறது…? என்று அறியும் பருவம் வருகின்றது. 
 
அறியும் பருவம் வந்தாலும் நீங்கள் அதை அடக்க வேண்டுமென்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அப்போது தீமைகள் தம்முள் வராது தடுக்க வேண்டும்…” என்ற உணர்வுகள் உங்களிடத்தில் வருகின்றது.
 
1.அருள் ஞானியின் அருள் உணர்வுகள் வலிமை கொண்டது.  அதே சமயத்தில் வேதனையின் உணர்வுகளும் வலிமை கொண்டது.
2.ஆனால் அருள் ஞானியின் உணர்வுகள் சிந்தனையைத் தூண்டும்… வேதனை உணர்வுகள் சிந்தனையை இழக்கச் செய்யும்.
 
நல்ல மனிதராக இருந்தார்இன்று அவருடைய நிலை அவருடைய  குடும்பத்தினர்களே அவரை எதிர்க்கும் நிலை ஆகிவிட்டதே…!” என்று உங்களிடத்தில் சிந்தனையின் தன்மை மாற்றப்பட்டுவேதனை பற்றிய சிந்தனையை உங்களிடத்தில் வளர்க்கச் செய்கின்றது. அப்போது அவரிடத்தில் இருந்த அந்த வேதனையின் வலு உங்களிடத்தில் வளர்கின்றது.
 
தீமைகளின் உணர்வை அடக்கும் ஆற்றல் கொண்டது துருவ நட்சத்திரம். அதன் உணர்வை எடுத்து உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது தீமைகளை அடக்கும் ஆற்றல் உங்களிடத்தில் வலிமை பெறுகின்றது.
 
1.தீமை என்று ஒன்றை அறியும் பொழுது… அந்தத் தீமையிலிருந்து விடுபடும் நிலையை நாம் பெற வேண்டும். 
2.தீமையிலிருந்து விடுவிக்கும் உணர்வுகள் எது…? விடுபட்டவர் யார்…? துருவ நட்சத்திரம்.
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நமக்குள் கவரும் பொழுது
4.அது நம்முள் உள்ள தீமைகளை ஒடுக்குகின்றதுதீமைகள் வராது காக்கின்றது.
 
புழுவிலிருந்து மனிதராகும் வரையிலும் மனிதராக ஆன பின்னும் ஒவ்வொரு சரீரத்திலும் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் பெற்றது கண்கள். கண்களின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் ஆற்றல் பெற்றது துருவ நட்சத்திரம்.
 
துருவ நட்சத்திரத்தின் அருளுணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தால் ஞானிகள் அறிந்த உணர்வின் அறிவு நமக்குள் விளைகின்றது, பகைமை ணர்வுகளை நீக்குகின்றது… தீமைகள் வராது காக்கின்றது.
 
ஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…? ஒருவர் வேதனைப்படுகிறார் கஷ்டப்படுகின்றார் என்றால் நாம் அதை நீக்கிடும் நிலையைப் பெற வேண்டும்.
 
உதாரணமாக ஒருவர் சாக்கடையில் விழுந்து விட்டால் அவருக்குக் கை கொடுத்து அரவணைத்துச் சாக்கடையிலிருந்து மீட்கிறோம். பின் அவரைக் குளிக்கச் செய்கின்றோம். நாமும் குளித்துக் கொள்கின்றோம்.
 
இதைப் போன்று வேதனையின் உணர்வினை நாம் நுகர்ந்தால் முதலில் நம்முள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர் பெற வேண்டும்வேதனைகள் அவரிடத்திலிருந்து நீங்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். 
 
இதனின் உணர்வின் தன்மையினை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அருள் உணர்வின் ஆற்றல் நம்மிடையே பெருகும் நிலை வருகின்றது.
 
1.இதனைப் பின்பற்றி வரும் அனைத்து அன்பர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று சர்வ தீமைகளில் இருந்தும் விடுபட்டு
2.மன பலம் பெற்று உடல் நலம் பெற்று செல்வம் செல்வாக்கு பெற்று
3.வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்றிட எமது அருளாசிகள்.