ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2024

இரகசியங்களை யாம் வெளிப்படுத்துவதன் உண்மையான நோக்கம்

 

1.எண்ணிலடங்காத பிறவிகள் எடுத்து எடுத்து இளைக்கலுற்றேன் இறைவா...! என்று கவி புனைந்தவனும்
2.ஏழு பிறப்பின் வினைகளும் அகல வேண்டும் என்றே உரைத்த வகையிலும்
3.எண்ணிலடங்காத பிறவிகளைப் பற்றியும் ஏழு பிறவிகளைப் பற்றியும் அந்த உண்மை நிலைகளை யாரப்பா அறிந்து கொண்டார்கள்...?

ஏனென்றால் இது விவாதம் கொண்டு உரையாட வேண்டிய விஷயம் அல்ல...! சிந்தனையில் கொள்ள வேண்டிய தனித்துவ நிலையப்பா இது.

உயிராத்மா தன் எண்ணம் கொண்டு பிறப்பிற்கு வரும் செயலில் தனக்குள் சேர்த்துக் கொண்ட அமிலத் தன்மைகளில் குணங்களால் அதனுள் எழுந்திட்ட வீரிய நிலைக்கொப்ப சுவாசம் கொண்டே தனக்கொத்த தன்மைகளில் பிறப்பிற்கு வருகின்றது.

மனிதனாகப் பிறப்பிற்கு வரும் உயிராத்மா பிறவி என்ற மாயையில் தன் உண்மை நிலை மறக்கப்பட்டே பிறந்து வருகின்றது.

பூமி சமைத்து வெளிப்படுத்தும் சக்திகளைச் சுவாசமாக்கி அதன் வழி அறிவின் ஞானம் பெற்று அனுபவமாகப் பெறும் செயல்களில் மனித எண்ணத்தின் செயல்பாடே...
1.தனக்குத் தேவையான காரியங்களைச் செயல்படுத்தும் அனைத்திலும்
2.“நான்...!” என்ற உணர்வைக் கூட்டிக் கொண்டே வினை செயல் புரிகின்றது.
3.எந்த எண்ணம் வலுவோ அந்த எண்ணத்தின் வட்டச் சுழற்சியில் முதிர்வு நிலை பெற்று
4.புவி ஈர்ப்பின் பிடிப்பில் தான் வலுக் கொண்டிட்ட குணங்களுக்கொப்ப “மீண்டும்...மீண்டும்...” பிறப்பிற்கு வருகின்றது.

பிறவி எடுத்திட்டதனின் பயன் என்ன..? என்ற வினா எழும்பினால்... தியான வழியில் அறிவின் ஞானம் உயர் ஞானமாக்கும் சிந்தனை கொண்டு... தெளிவு கொண்டிட முயற்சிக்கும் பக்குவத்தில் “அனைத்துமே சித்திக்குமப்பா...!”

ஞானத்திற்குத் தேவை ஒன்று உண்டு. அதுவே உயர் ஞானம் பெற்றிட முயலும் “முயற்சி...!”

1.தன் உயிராத்ம வலுவின் முலாமைக் கூட்டிக் கொண்டு
2.எண்ணத்தின் செயலுக்கு எது தேவையோ அதையே முயற்சித்து... அந்தப் பேரருளைக் கூட்டி
3.இதற்கு முன் எடுத்துக் கொண்ட வினைப் பயனை மாற்றிடும் நல்லாக்கத்தின் செயலே
4.மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால் அது திருவினையாக்கும்.

தெய்வத் தன்மை பெறுவதுவும் ஒரு பிறவியப்பா...!

1.என் (ஈஸ்வரபட்டர்) நிலைக்கு ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) உயர்ந்திட வேண்டும் என்பதற்காக
2.சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் கூறி வருகின்றேன்.
3.அது அனைத்தையும் நீங்கள் பெற்று “என்னையும் முந்திச் செல்லவே ஆசி கூறுகின்றேன்...!”

மனிதன் என்ற பிறப்பில் தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு தன்னுள் உள்ள இறைச் சக்தியை வலுக் கூட்டும் முயற்சிக்குச் சங்கட அலைகளை வாழும் வாழ்க்கை மோதலிலிருந்து அறவே விலக்கிடல் வேண்டும்.

எண்ணத்தில் கடுமையும் சொல்லில் உபதேசமும் உரைத்திடும் எத்தகைய சக்தி பெற்ற ஞானவான்கள் யாராக இருந்தாலும்
1.சத்தியம் என்ற நேர் பாதை காட்டிடும் உண்மை நிலைக்கு
2.தனக்குள் இருக்கும் எண்ணத்தின் கடுமையை மாற்றிக் கொண்டால்
3.அவர்களும் நல் நிலை பெற்றிட முடிந்திடும்.

ஆகவே எல்லா உயிர்களையும் சமமாக... கடவுளாக மதிக்கும் உயர் ஞானத் தன்மையின் வலுவைக் கூட்டிக் கொண்டால் இந்த மனிதப் பிறவியிலேயே தெய்வப் பிறவி நிலை பெற்று விடலாமப்பா...! எனது ஆசி உங்களுக்கு உறுதுணையாக இருக்குமப்பா...!