ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 17, 2024

தொழில் வளம்

தொழிலுக்காக ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு.

ஒருவன் நடந்து போகும் போது கீழே விழுவான்… சைக்கிளில் இருந்து விழுவான்… ஒருவன் பராக் பார்த்துக் கொண்டு செல்வான்… ஒருவன் பஸ்ஸை வேகமாக ஓட்டிக் கொண்டு வருவான்… அதற்குள் ஒருவன் குறுக்கே நடப்பான்… வண்டிக்காரன் தொந்தரவு கொடுப்பான்… வேண்டுமென்றே பஸ்ஸுக்கு பஸ் இடைஞ்சல் செய்து கொண்டிருப்பார்கள்.

இதையெல்லாம் பார்க்கக்கூடிய நம் மனம் என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகளை எல்லாம் சுவாசித்து வெறுப்பும் ஆத்திரமும் கோபமும் விரக்தியும் பயம் இது போன்ற எல்லா உணர்வுகளுமே உருவாகின்றது
2.இப்படி நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை நாம் எண்ணுவது அனைத்தையும் சதாசிவமாகிக் (உடலாக) கொண்டே உள்ளது.
3.நாம் எண்ணிய இந்த உணர்வின் சக்திகள் உமிழ் நீராகச் சேர்ந்து… உடலுக்குள் கெட்ட சக்தியாக உருவாகின்றது (சதா சிவமாக)
4.அதாவது நல்ல குணங்களுக்குள் இவைகள் ஊடுருவி அசுத்தங்களாகச் சேர்ந்து விடுகிறது.

வராக மூர்த்தியாக (பன்றியாக) இருக்கும் பொழுது கெட்டதை நினைக்காதபடி இருந்தது.

ஆனால் மனிதனாகும் பொழுது இப்பொழுது என்ன செய்கின்றோம்…? கெட்டதை எல்லாம் அதிகமாக நினைக்க வேண்டி வந்துவிடுகிறது.

மனிதனின் உடல் விஷத்தை நீக்கக்கூடிய சக்தி பெற்றதுதான். நல்ல வாசனையான உணவுப் பொருளைச் சாப்பிட்டாலும் அதில் இருக்கக்கூடிய மறைந்துள்ள நஞ்சை நம் உடல் நீக்குகின்றது.

இதைப் போன்று அதிலிருந்து தோன்றிய உணர்வின் எண்ணங்கள் கொண்டு நாம் இருந்தாலும்… நாம் கடைக்குச் செல்லும் பொழுது மேலே சொன்ன அத்தனை சம்பவங்களையும் பார்க்க நேர்ந்தது.

இத்தனை எண்ணங்களுடன் கடையைத் திறந்தால் வியாபாரம் சரியாக இருக்குமா…! ஆகவே… கடையில் சேர்ந்து அமர்ந்த உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

வியாபாரத்திற்காக வாங்கி வைத்த சரக்குகளை எல்லாம் “உற்றுப் பார்த்து”
1.மகரிஷிகளின் அருள் சக்தி இந்தப் பொருள்கள் அனைத்திலும் படர வேண்டும்
2.இதை உபயோகப்படுத்துவோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.அவர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
4.என் சொல் அவர்களுக்கு இனிமையாக வேண்டும்
5.என் பார்வை அவர்களுக்கு உயர்ந்த நிலை பெறச் செய்ய வேண்டும்
6.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
7.என்னுடைய வாடிக்கையாளர் அனைவருமே வாழ்வில் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

இந்த எண்ணங்களுடன் தான் கடையில் இருக்கும் சரக்குகளை நாம் உற்றுப் பார்க்க வேண்டும். எனக்கு வியாபாரமாகவில்லை நஷ்டம் ஆகின்றது என்று எண்ணக் கூடாது.

செய்யும் தொழிலே தெய்வம்…!

அங்கே நீங்கள் தெய்வமாக இருந்து வருவோரின் பசிக்கோ மற்ற நிலைகளுக்கோ பொருளைக் கொடுத்தாலும்… அவர்கள் அதற்காகக் காசு கொடுத்தாலும்… நம் பார்வையால் சொல்லால் உயர்ந்த உள்ளத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நம்மிடம் வாங்கிச் சென்ற பொருளைப் பயன்படுத்தும் போது அவர்களுக்குள் அது மகிழ்ச்சியூட்டும் நிலையாக வரும்.

ஆனால் சங்கட உணர்வுகளை எண்ணிக் கொண்டு கடையில் அமர்ந்து… வரும் வாடிக்கையாளர் இரண்டு தரம் கேட்டால்… பதிலுக்கு நாம் அழுத்தமாகச் சொல்லிவிட்டால் அந்தச் சங்கடத்தால் வெறுப்பாகி வியாபாரம் குறைவாகிவிடும்… நம் நல்ல சரக்கையே மட்டமாக்கி விடும்.
1.நம்முடைய சொல்லே நம்மிடம் அணுக விடாதபடி
2.மற்றவர்களை விலகிச் செல்ல செய்துவிடும்.

அது போன்ற நிலை உருவாகாதபடி தொழிலிலும் நம் சொல்லுக்குள் நல்லதை உருவாக்கும் நற்சக்திகளாக… நல்ல தெய்வங்களாகச் செயல்படுத்த வேண்டும்.

நமக்குள் இருக்கக்கூடிய 1008 சக்திகள் கொண்டு நாம் இடும் மூச்சலைகள் பிறருக்கு நன்மையாகும் பொழுது… தொழிலில் நாம் எடுத்துக் கொண்டது நல் உணர்வை ஊட்டும் சக்தியாக நமக்குள் வளர்கின்றது.

இதைத்தான் “ஓம் நமச்சிவாய…” என்று சொல்வது.

நாம் எடுத்துக் கொண்ட சக்தி சிவமாக சக்தியாகி… சிவாய நம ஓம்… நம் உணர்வுகள் உடலுக்குள் நல் சக்திகளாக விளைந்து அந்தச் சக்தியின் சொல்லின் உணர்வின் நிலையை தான் மற்றவர்களை இயக்கச் செய்கின்றது.

இது தான் “சிவாய நம ஓம்” நமச்சிவாய என்ற தத்துவத்திற்குள் இருக்கக்கூடிய உள் பொருள் இதுதான்.

ஆகவே எங்கே சென்றாலும் அங்கே அமர்ந்து இது போன்று செய்து பழகுங்கள்.

கடைக்குச் சென்று வீட்டுக்கு வந்தாலும்… வீட்டிற்குள் வந்தவுடன் ஆத்ம சுத்தி செய்து…
1.நம் வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.என் சொல் என் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிமை ஊட்ட வேண்டும்
3.என் பார்வை என் வீட்டில் உள்ளவரை நலம் பெற உதவ வேண்டும்
4.குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும் வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
5.இது போன்று சிறிது நேரம் எடுக்க வேண்டும்.

ஏனென்றால் வராகனாக இருக்கும் பொழுது அந்தச் சரீரத்திலே இதைத்தான் செய்தது. அப்படிச் செய்து தான் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம் கெட்டதை நீக்கும் ஆற்றலைப் பெற்று வந்துள்ளோம்.

அந்த ஆற்றலை நாம் செம்மையாகப் பயன்படுத்த யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த முறையைத்தான் கையாள வேண்டும்.