ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 30, 2024

நல்லது செய்பவர்களுக்கு (அவர்களை) அறியாமல் வரும் துன்பங்கள்

உதாரணமாக இரண்டு பேர் குடும்பத்தில் சண்டை இடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒருவனை இன்னொருவன் ஏசுவதைக் கண்டு (சமரசத்திற்காக) சரி… விட்டு விடு போகட்டும் என்று நாம் சொல்வோம்.

ஆனால் பார்… அவன் எப்படிப் பேசுகின்றான் பார்….! என்பான்.

இவன் பேசிவிடுவான். ஆனால் அது அவனுக்குள் பட்ட உடனே உணர்ச்சிகள் பொங்கி
1.இவன் ஒரு சொல்லைச் சொன்னால் அவன் பல சொல்களைச் சொல்வான்.
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் போது
3.தர்மத்தையோ நியாயத்தையோ மற்ற நல்ல வழிகளைச் சொன்னாலும் இருவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு மிளகாய்ச் செடி தனக்குள் கார உணர்வை எடுத்துத்தான் மிளகாயை உருவாக்கும்… மிளகாயை வித்துக்களாக. எதிலிருந்து மிளகாயாக விளைந்ததோ அந்த வித்தின் தன்மை தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து தன் இனத்தைத் தான் அது விருத்தி செய்யும்.

இதைப் போல்
1.ஒருவருக்கொருவர் ஏசிப் பேசிய உணர்வுகள் வித்தாகும் பொழுது
2.எவ்வளவு சாபமிட்டுப் பேசினானோ… அடுத்தவனும் அதே உணர்வைச் சுவாசித்துச் சாபமிட்டுக் கொண்டே இருப்பான்.
3.இவர்கள் சாபமிடுவதைக் கேட்டுணர்ந்தவரும் இதைப் போன்று சாபத்தை விட்டுக் கொண்டே இருப்பார்கள்.
4.இந்த அலைகள் படர்ந்து படர்ந்து… நல்ல குணங்கள் இயங்காது தடைபடுத்தி விடும்.

சாப அலைகள் இவருக்குள் விளைந்து எதையெல்லாம் இவர்கள் சொன்னார்களோ அது அனைத்தும் அங்கே படர்ந்து… இருவருடைய குடும்பங்களிலும் வீரியமாகப் பேசுவார்கள்.

இந்த வீரிய உணர்வுகள் குடும்பத்தில் பாசத்தையும் பற்றையும் அறுத்துவிடும். பாசத்துடன் இருப்போரும் ஒருவருக்கொருவர் வெறுப்பான நிலைகள் ஆகிவிடும். ஆனால் ஏசியவன் தப்பி விடுவான்.

குடும்பத்தில் பாசத்துடன் உள்ளோர் நிலைகளில் இது படப்பட்டு இந்த உணர்வு துரிதமாக விளைந்து நோயாக மாற்றி அவனை முதலிலே வீழ்த்தி விடும்.

ஆக அண்ணன் இப்படிப் பேசுகின்றானே…! என்று தம்பியோ… தம்பி தான் சொன்னபடி கேட்கவில்லை என்று அண்ணன் “இப்படிச் செய்கின்றானே…” என்று தம்பியைக் கோபித்தாலும்… ஒருவருக்கொருவர் இடும் சாப அலைகளை உற்று நோக்கினால் அவர்களுக்குள் தீயவினைகள் வளர்ந்து நோயாக மாறி… அவர் குடும்பத்திலே வெறுப்பின் தன்மை வந்துவிடும்.

அவர்களுடைய தாய் தந்தையரோ சரி விட்டு விடுடா…! என்று சொன்னாலும் “நீ பேசாமல் இரு” என்று வேகமான சொல் பாய்ந்து அங்கேயும் வெறுப்பைத் தூண்டும்… சாப அலைகள் அங்கேயும் படர்ந்து விடும்.

அதே சமயம் குடும்பத்தில் பெண்கள் கர்ப்பமாக இருந்தார்கள் என்றால் இதே சாப அலைகள் அந்தக் கருவிலும் பதிந்து… பிறக்கும் குழந்தையையும் சாப அலைகள் தொடர்ந்து… இயக்கத் தொடங்கி விடுகிறது.

இது அவர்களோடு போனாலும் பரவாயில்லை…!
1.மற்றவர்கள் வேடிக்கையாகப் பார்த்தாலும் அவர்களுக்குள்ளும் பாய்ந்து அவர் குடும்பத்திலே கர்ப்பமுற்றிருந்தால் இது பதிவாகி விடும்.
2.உன் கால் முடமாகும் உன் கண்கள் குருடாகிவிடும் என்று ஏசிப் பேசிச் சாபமிட்டிருந்தால்
3.கர்ப்பமற்ற தாய் அதைக் கேட்டிருந்தால் (வேடிக்கை பார்த்திருந்தாலும்) இந்த உணர்வுகள் கருவிலே இணைந்துவிடும்.
4.பிறக்கும் குழந்தையின் கால் மூடமாகிவிடும்… கண்கள் குருடாகிவிடும்
5.எதைச் சொல்லிச் சாபமிட்டார்களோ அதே உணவின் தன்மை வளர்ச்சி அடைந்து அந்தந்த உறுப்புகளைச் செயலற்றதாக ஆக்கிவிடும்.

பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையாக மனிதன் வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் இந்த உணர்வின் இயக்கங்கள் இப்படி இயங்கத் தொடங்கி விடுகின்றது.

அது நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை இயக்க விடாதபடி தீய செயல்களாகி… தீய உணர்வுகள் உடலில் நோயாக மாறி
1.நம் சொல் பிறருக்கு தீமையை விளைவிப்பதாகவும்
2.சாப வினைகள் நம் ஆன்மாவாக ஆகும் பொழுது தொழில்களிலும் இந்த உணர்வு படரப்பட்டு
3.நண்பர்களையும் எதிரி ஆக்கி நம் தொழிலையும் கெடுத்துவிடும்.

ஒரு விஷச் செடியைக் கண்டால் நாம் எப்படி விலகிச் செல்கின்றோமோ அது போல் ஒருவன் சாபம் விடுவதாக இருப்பினும்… நாம் பலருக்கு நன்மை செய்பவராக இருப்பினும்… நாம் தவறு செய்யாமலேயே சாப நிலைகளே முன் நின்று “நமக்கு எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும்…”

விஷச் செடியை நுகர்ந்த பின் அதைக் கண்டு வெறுத்து ஓடுவது போன்று சாப வினைகள் முன் நிற்கும் பொழுது… நாம் எடுக்கும் வெறுப்பான உணர்வுகள் பிறர் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் இந்த நிலை ஆகிவிடுகிறது.

ஆகையினால் தான் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களை யாம் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. எத்தகைய நிலையைச் சந்தித்தாலும்
1.அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நமக்குள் கலந்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்
2.நாம் நுகர்ந்த பிறிதொரு உணர்வு நமக்குள் இயக்கக் கூடாது… தீய வினையாக மாற விடக் கூடாது.